இரவோடு இரவாக காஸாவுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்திய இஸ்ரேல் டாங்கிகள்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இரவோடு இரவாக காஸாவுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்திய இஸ்ரேல் டாங்கிகள்

இஸ்ரேலிய ராணுவம் வெளியிட்டுள்ள தாக்குதல் வீடியோவில், வேலியை உடைத்துக்கொண்டு செல்லும் டாங்கி

நேற்று இரவு, இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் டாங்கிகள் வடக்கு காஸாவில் நுழைந்து ‘இலக்குகளைத் தாக்கியதாகத்’ தெரிவித்திருக்கின்றன.

எதிர்பார்க்கப்பட்டபடி இஸ்ரேல் காஸா மீது தரைவழி ஆக்கிரமிப்பைத் தொடங்கவில்லை. ஆனால் நேற்று நடந்த இந்தத் தாக்குதல் ‘அடுத்த கட்டத் தாக்குதலுக்கான தயாரிப்பு’ என்று கூறியிருக்கிறது.

இதற்குமுன் காஸாவுக்குள் நுழைந்து நடத்தப்பட்ட தாக்குதல்கள்

கடந்த அக்டோபர் 7-ஆம் தேதி ஹமாஸ் குழுவினர் இஸ்ரேல் மீது பெரிய தாக்குதல் ஒன்றை நடத்தியபின் இஸ்ரேல் காஸாவிற்குள் நுழைந்து இலக்குகளைத் தாக்குவது இது முதன்முறையல்ல.

ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு, கடந்த அக்டோபர் 13-ஆம் தேதி, முதன்முறையாக காஸாவில் தாக்குதல் நடத்தப்போவதாக அறிவித்து ஹமாஸ் ராக்கெட் குழுவினரைத் தாக்க துருப்புக்கள் மற்றும் டாங்கிகளை இஸ்ரேல் காஸாவுக்குள் அனுப்பியது.

அன்றுதான் வடக்கு காஸாவில் வசித்தவர்களைத் தெற்கு நோக்கி வெளியேறுமாறு இஸ்ரேல் எச்சரித்திருந்தது.

அதையடுத்து, கடந்த அக்டோபர் 22-ஆம் தேதி, காஸா பகுதிக்குள் நுழைந்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலின்போது, இஸ்ரேல் டாங்கியை நோக்கி ஏவப்பட்ட ஒரு ஏவுகணையால், ஒரு இஸ்ரேலிய ராணுவ வீரர் கொல்லப்பட்டார், மற்றும் மூன்று பேர் காயமடைந்தனர்.

‘இது படையெடுப்புக்கான அறிகுறி’

இத்தகைய தாக்குதல்கள், ஒரு முழுமையான தரைவழிப் படையெடுப்பு நிகழவிருப்பதறகான அடையாளம் என்கிறார் ஜெருசலேமில் செய்தி சேகரித்துவரும் பிபிசியின் நிருபரான டாம் பேட்மன்.

இஸ்ரேலின் துருப்புக்கள் தரையில் உள்ள எதிராளியின் பாதுகாப்புக் கட்டமைப்புகளைக் கண்டுபிடித்து அழிக்க ஆய்வு செய்கின்றன, என்கிறார் அவர்.

இதுவரை வெளியாகியிருக்கும் படங்கள் ‘டாங்கிகள் மற்றும் கவசமிடப்பட்ட புல்டோசர்கள் காஸாவுக்கு உள்ளே செல்வதைக் காட்டுகின்றன’, என்னும் பேட்மன், “இஸ்ரேலிய அறிக்கை தரையில் சண்டையிடுவதைக் குறித்துப் பேசுகிறது. இருப்பினும் படங்கள் அதனைக் காட்டவில்லை,” என்கிறார்.

தாக்குதலின் முடிவில் துருப்புக்கள் வெளியேறியதாக இஸ்ரேல் கூறுகிறது.

ஆனாலும், இஸ்ரேலிய ராணுவம் இந்தத் தாக்குதலைப் பற்றிக் குறிப்பிடும்போது பயன்படுத்தியிருக்கும் மொழி முந்தைய தாக்குதல்களின்போது பயன்படுத்தப்பட்டதைவிட வலுவானது, என்கிறார் பேட்மன். இது ‘அடுத்த கட்ட தாக்குதலுக்கான தயாரிப்பின் ஒரு பகுதி’ என்று கூறியிருக்கிறது.

தாக்குதலுக்கான எதிர்பார்ப்பு ஏன் முக்கியமானது?

ஆனால், கதையாடலின் வழியே நடத்தப்படும் போரும் முக்கியமானது, என்கிறார் பேட்மன்.

“படையெடுப்பு எந்த நேரமும் நடக்கலாம் என்று எல்லோரையும் எதிர்பார்ப்பில் வைத்திருப்பது முக்கியம் என்று இஸ்ரேல் கருதுகிறது. மூன்று முக்கியக் காரணங்களுக்காக: ஒன்று, தன் மன உறுதியைத் தக்க வைத்துக்கொள்ள, அடுத்து, இஸ்ரேலின் உள்நாட்டு மக்களிடம் பதிலடி கொடுக்கப்படுகிறது என்பதைச் சொல்ல, மூன்றாவது, பணயக்கைதிகள் குறித்த பேச்சுவார்த்தைகளில் ஹமாஸ் மீது அழுத்தம் கொடுக்க,” என்கிறார் பேட்மன்.

- பிபிசி தமிழ்Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.