ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர் இளவரசர் அல் ஹுசைனின் இலங்கை விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்களுக்கு இடையூறை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவமொன்று தொடர்பில் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
விமல் வீரவன்ச உள்ளிட்ட ஏழு பேருக்கு எதிராக கருவாத்தோட்டம் காவல்துறையினரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று அழைக்கப்பட்டபோதே, அவரை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு பிரதம நீதவான் பிரசன்ன அல்விஸ் இன்று (13) பிடியாணை பிறப்பித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில், நீதவான் நீதிமன்றத்திற்கு விசாரணை அழைக்கப்பட்ட போது, முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச நீதிமன்றில் முன்னிலையாக தவறியதன் காரணமாகவே இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
2016 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர் இளவரசர் சைட் அல் ஹுசைன் இலங்கைக்கு விஜயம் செய்த போது, பிரதிவாதிகள் கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்திற்கு முன்பாக வீதிகளை மறித்து பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக காவல்துறையினர் நீதிமன்றில் தெரிவித்திருந்தனர்.
இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச, முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஜயந்த சமரவீர, நாடாளுமன்ற உறுப்பினர் மொஹமட் முஸ்ஸம்மில், தேசிய சுதந்திர முன்னணி உறுப்பினர்களான வீரகுமார திஸாநாயக்க, பியசிறி விஜேநாயக்க மற்றும் ரொஜர் செனவிரத்ன ஆகியோர் பிரதிவாதிகளாக உள்ளனர்.
இந்த வழக்கு எதிர்வரும் ஜூன் 19 ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.