
ஜனக சேனாதிபதி மற்றும் சேபால அமரசிங்கவுக்கு எதிராக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு காவல்துறைமா அதிபர் குற்றப் புலனாய்வுப் திணைக்களத்துக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
கண்டியில் உள்ள புனித தலதா மாளிகையையும் பௌத்த மதத்தையும் அவதூறு செய்தமை தொடர்பில் அவர்கள் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் இந்த விசாரணைகளை முன்னெடுக்குமாறு காவல்துறைமா அதிபர் தமது உத்தரவில் தெரிவித்துள்ளார்.
அதன்படி, இந்த விசாரணைகளுக்காக, குற்றப் புலனாய்வுப் திணைக்களத்தின் இரண்டு குழுக்கள் விசாரணைகளுக்காக அனுப்பப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
குருநாகல், பொத்துஹெர பிரதேசத்தில் போலி தலதா மாளிகை கட்டப்பட்டமை தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் முறைப்பாடு செய்யப்பட்டது.
இந்த கடிதத்தில் மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடாதிபதிகள் மற்றும் தலதா மாளிகையின் தியவதன நிலமே பிரதீப் நிலங்க தெல ஆகியோர் கையொப்பமிட்டுள்ளனர்.
உலகளாவிய பௌத்தர்களை ஏமாற்றி, பெறுமதியான பொருட்களையும் பணத்தையும் பெற்றுக்கொண்டு ஜனக சேனாதிபதி என்ற ஒருவரால் போலியான ‘தலதா மாளிகை’ கட்டப்பட்டு வருவதாக அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், சமூக ஊடகங்களில் சேபால் அமரசிங்க என்ற மற்றொருவரால் வெளியிடப்பட்ட கருத்து பௌத்தர்களின் உணர்வுகளை புண்படுத்தியுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பில் இன்றைய நாடாளுமன்ற அமர்விலும் இவ்விடயம் விவாதிக்கப்பட்ட அதேவேளை, இதுகுறித்து சேபால் அமரசிங்கவுக்கு எதிராக நடவடிக்கை எடுப்படுமென நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ உறுதியளித்தார்.