
ஜனசக்தி காப்புறுதி குழுமத்தின் பணிப்பாளர் தினேஷ் ஷாப்டரின் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய மரபணு அரச இரசாயன பகுப்பாய்வாளர் ஊடாக குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு வழங்குவதற்கு கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திர ஜயசூரிய இன்று (02) அனுமதி வழங்கினார்.
பொரளை பொலிஸார் இன்று அரச இரசாயன பகுப்பாய்வாளரின் அறிக்கைகளை நீதிமன்றில் சமர்ப்பித்த நிலையில், வழக்குப் பொருட்களை ஆராய்ந்த பின்னர், சீ.ஐ.டியினர் முன்வைத்த கோரிக்கைக்கு மேலதிக நீதவான் அனுமதியளித்தார்.
சொகோ அதிகாரிகளால் பெறப்பட்ட இரத்த மாதிரிகள், கைரேகைகள், உடைகள், நகங்கள் மற்றும் முடிகள் மற்றும் இறந்தவர் தங்கியிருந்த வாகனம் ஆகியவற்றைப் பரிசோதித்து அறிக்கை வழங்குமாறு தடயவியல் ஆய்வாளருக்கு நீதவான் உத்தரவிட்டார்.
இச்சம்பவம் தொடர்பான விசாரணைகள் இதுவரை நிறைவடையவில்லை எனவும், விரிவான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மன்றுக்கு அறிவித்தனர்.
குற்றச் செயல் இடம்பெற்ற இடத்தில் கிடைக்கப்பெற்ற வழக்குப் பொருட்கள் மற்றும் ஷாப்டரின் இரத்த மாதிரிகளை பரிசோதித்து டிஎன்ஏ அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் நீதவான் உத்தரவிட்டார்.