
கண்டி - தெல்தெனிய பிரதேசத்தில் காணாமல் போன 15 வயது சிறுமியை கண்டுபிடிப்பதற்காக பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
சிறுமி கெங்கல்ல, அம்பகோட்டே பகுதியைச் சேர்ந்தவர் எனவும், 2022 ஆம் ஆண்டு ஒக்டோபர் 13 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த திகதியில் குழந்தை பாடசாலைக்கு வராததையடுத்து தெல்தெனிய பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
சிறுமி தனது தோழியுடன் பாடசாலைக்கு செல்வதாக தெரிவித்திருந்த நிலையில், அதற்கு பதிலாக கண்டியில் இருந்து கொழும்புக்கு புகையிரதத்தில் பயணித்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இரண்டு சிறுமிகள் மீது சந்தேகம் கொண்ட ஒரு நபர் அவர்களின் இருப்பிடம் மற்றும் திட்டங்களைப் பற்றி விசாரித்து அவர்களைக் காவலில் எடுத்து, பின்னர் அவர்கள் இருக்கும் இடத்தை அவர்களின் பெற்றோருக்குத் தெரிவித்தார்.
குறித்த சிறுமிகளை தாம் வரும்வரை தனது காவலில் வைக்குமாறு பெற்றோர் இளைஞரிடம் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், மூவரும் காலி முகத்திடல் மைதானத்திற்கு வந்து பெற்றோரின் வருகைக்காக காத்திருந்தனர்.
இதன்போது, 15 வயது சிறுமி அங்கிருந்து காணாமல் போயிருந்த நிலையில், அவரது தோழி இளைஞனுடன் தங்கியிருந்து பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
குறித்த சிறுமி தொடர்பில் இதுவரை எந்த தகவலும் கிடைக்காததால், அவரை கண்டுபிடிக்க போலீசார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
சிறுமி தொடர்பில் தகவல் அறிந்தவர்கள் தெல்தெனிய பொலிஸாரை 081- 2374073 அல்லது 071- 8591066 என்ற இலக்கத்தினூடாக தொடர்பு கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)

