இவ்வார அமைச்சரவையில் எட்டப்பட்ட 8 தீர்மானங்கள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இவ்வார அமைச்சரவையில் எட்டப்பட்ட 8 தீர்மானங்கள்!


1. வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு நீண்டகால வதிவிட வீசா வழங்குதல்.

இதற்கு முன்னர் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த நீண்டகால வதிவிட வீசா வழங்கும் பொறிமுறைக்குப் பதிலாக புதிய முறைமையொன்றுக்கு 2021 மார்ச் மாதம் 07 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது. 

குறித்த பொறிமுறையின் கீழ் குறிப்பிட்ட நீண்டகால வதிவிட வீசா வழங்குதல் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

கூட்டு ஆதனங்களின் பெறுமதி குறைந்தபட்சம் 75,000 அமெரிக்க டொலர்கள் அல்லது அதற்கு மேலதிகமாக முதலீடு செய்கின்ற வெளிநாட்டவர்களுக்கு மற்றும் வெளிநாட்டுக் கம்பனிகளின் இயக்குநர்களுக்கு, அவர்களுடைய துணைவருக்கும் தங்கி வாழ்பவர்களுக்கும் அவ்வாறு முதலிடுகின்ற அமெரிக்க டொலரின் அளவுக்கமைய 5 ஆண்டுகள் தொடக்கம் 10 ஆண்டுகள் வரையான நீண்டகால வதிவிட வீசா வழங்கல் 

இலங்கை மத்திய வங்கியால் அங்கீகாரமளிக்கப்பட்ட வணிக வங்கியொன்றில் குறைந்தது 100,000 அமெரிக்க டொலர்களை வைப்பிலிடும் வெளிநாட்டவர்களுக்கு 10 ஆண்டுகளுக்கான வதிவிட வீசா வழங்குவதற்கு இயலுமை கிட்டும் வகையில் 'தங்க சுவர்க்க வீசா நிகழ்ச்சித்திட்டம்' எனும் பெயரிலான நிகழ்ச்சித்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தல்.

2. ஜப்பானின் யுரேஷியா மன்றத்தால் ஜெனரல் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்திற்கு ஆய்வுக்கான வழங்கல்.

'ஆசியாவின் கருத்தியலுக்கான கலாசாரத் தொடர்புகள்' எனும் தொனிப்பொருளின் கீழ் பாடநெறியொன்றை நடாத்துவதற்காக ஜெனரல் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்திற்கு ஜப்பானின் யுரேஷியா மன்றம் ஆய்வுக்கான வழங்கலாக 42,000 அமெரிக்க டொலர்களை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. குறித்த வழங்கல் மூலம் 200 மாணவர்களை ஆட்சேர்ப்புச் செய்து அப்பாடநெறியை மேற்கொள்வதற்காக பாதுகாப்பு அமைச்சராக மேன்மைதங்கிய ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

3. பல்வேறு தரப்பினர்களால் முன்வைக்கப்படும் வெளிநாட்டு செலாவணி மற்றும் எரிசக்தி விநியோகம் தொடர்பான நிதி முன்மொழிவுகளை மதிப்பீடு செய்வதற்கான பொறிமுறையை நிறுவுதல்.

நாட்டில் நிலவுகின்ற வெளிநாட்டு செலாவணி நெருக்கடிகளுக்குத் தீர்வுகளாக ஒருசில நட்பு நாடுகள், சர்வதேச விநியோகத்தர்கள் மற்றும் உள்ளூர் தனியார் துறையினரால் பல்வேறு வகையான இருதரப்பு சலுகைக் கடன், எரிசக்தி விநியோகம் மற்றும் எரிசக்தி துறைசார்ந்த முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டு வருகின்றன.

அவ்வாறு சமர்ப்பிக்கப்படுகின்ற ஒருசில முன்மொழிவுகள், நாடு எதிர்கொண்டுள்ள வெளிநாட்டு செலாவணி நெருக்கடிகளுக்கு பயனுள்ள வகையிலான முன்மொழிவுகளாக அவதானிக்கப்பட்டாலும், அது தொடர்பாக தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தற்போது காணப்படுகின்ற பொறிமுறையில் திட்டவட்டமான வாய்ப்புக்கள் இல்லை.

அதனால், குறித்த முன்மொழிவுகளில் சமகால முக்கியத்துவங்களைக் கருத்தில் கொண்டு அவற்றைப் பகுப்பாய்வு செய்து கடைப்பிடிக்க வேண்டிய பொறிமுறைகள் தொடர்பாக விதப்புரைகளை மேற்கொள்வதற்காக பிரதமரின் செயலாளர் தலைமையில் மற்றும் அமைச்சின் செயலாளர்கள் நால்வரின் பங்கேற்புடன் கூடிய குழுவொன்றை நியமிப்பதற்கு பிரதமர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

4. 19ஆவது மற்றும் 20ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டங்களை அடிப்படையாகக் கொண்டு 21ஆவது அரசியலமைப்பு சட்டமூலத்தைத் தயாரித்தல்.

நாட்டில் தற்போது நிலவும் சூழலில் மேலெழுந்துள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதற்காக அரசியல், பொருளாதார மற்றும் சமூக ரீதியான உறுதிப்பாட்டை ஏற்படுத்தும் வகையில் அரசியலமைப்பிற்குப் பொருத்தமான திருத்தங்களை அறிமுகப்படுத்துவது உகந்ததென அரசியல், தொழில்வாண்மை மற்றும் சமூகப் பிரிவுகளைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற பல தரப்பினர்கள் வலியுறுத்துகின்றனர். 

அந்நிலைமையைக் கருத்தில் கொண்டு பிரதமர் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கமைய அமைச்சரவை கீழ்வரும் தீர்மானங்களை எட்டியுள்ளது,

19ஆவது மற்றும் 20ஆவது அரசியலமைப்பு திருத்தங்களிலுள்ள சாதகமான விடயங்களை அடிப்படையாகக் கொண்டு ஜனநாயகத்தை மேலும் வலுப்படுத்தி பாராளுமன்றத்திற்கு அதிக அதிகாரங்கள் கிட்டும் வகையில் இருபத்தோராவது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கான அடிப்படைச் சட்டமூலத்தை துரிதமாக தயாரிப்பதற்கு சட்ட வரைஞருக்கு தேவையான வழிகாட்டல்களை வழங்குவதற்காக அமைச்சரவை உபகுழுவொன்றை நியமித்தல்.

மேற்குறிப்பிட்டவாறு தயாரிக்கப்படும் அடிப்படைச் சட்டமூலம் மற்றும் தற்போது பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பு திருத்த யோசனைகள் தொடர்பாகக் கலந்துரையாடி பொது உடன்பாடுகளுடன் சட்டமூலமொன்றைத் தயாரிப்பதற்காக பாராளுமன்ற தெரிவுக் குழுவொன்றை நியமிக்குமாறு பாராளுமன்றத்தில் பிரேரணையொன்றைச் சமர்ப்பிதற்கு பிரதமருக்கு அதிகாரமளித்தல்.

5. 2009 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க மின்சார சட்டத் திருத்தத்தை அறிமுகப்படுத்தல்
2013 ஆம் ஆண்டின் 31 ஆம் இலக்க இலங்கை மின்சார (திருத்தச்) சட்டத்தின் திருத்தப்பட்ட 2009 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க இலங்கை மின்சார சட்டம் திருத்தம் செய்வதற்காக சட்ட வரைஞரால் தயாரிக்கப்பட்ட சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைத்துள்ளது.

அதற்கமைய, குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்கும் மின்சக்தி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

6. இலங்கையில் தங்கியிருக்கும் ரஷ்யா மற்றும் உக்ரைன் நாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு கட்டண அறவீடுகளின்றி வீசாவுக்கான காலப்பகுதியை நீடித்தல்.

ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கிடையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைகளால் இலங்கையில் தங்கியிருக்கும் ரஷ்யா மற்றும் உக்ரைன் நாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு கட்டண அறவீடுகளின்றி அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சுற்றுலா வீசா அனுமதியை இரண்டு (02) மாதங்களுக்கு நீடிப்பதற்காக 2022 பெப்ரவரி 28 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான நெருக்கடிகள் இன்னுமே இயல்பு நிலைக்குத் திரும்பாதமையால், இலங்கையில் தங்கியிருக்கும் ரஷ்யா மற்றும் உக்ரைன் நாட்டவர்கள் எமது நாட்டில் தொடர்ந்து தங்கியிருக்கக் கூடிய வகையில் அவர்களுடைய வீசாவுக்கான காலப்பகுதியை நீடிப்பதற்காக சுற்றுலாத்துறை அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

7. 2002 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க பெற்றோலிய உற்பத்திப் பொருட்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தைத் திருத்தம் செய்தல்.

நாட்டிலுள்ள சகலவிதமான பொருளாதார நடவடிக்கைகளுக்கும் எரிபொருள் அத்தியாவசியமாகையால், பொருளாதார செயன்முறையில் தெரிவு செய்யப்பட்ட விசேடமான துறைகளில் தமக்குத் தேவையான எரிபொருட்களை தனித்தனியாக இறக்குமதி செய்து பயன்படுத்துவதற்கான அனுமதிப்பத்திரமொன்றை வழங்குவது உகந்ததென கண்டறியப்பட்டுள்ளது.

அதற்கமைய, பெற்றோலியப் பொருட்கள் இறக்குமதிக்காக முறையான வகையில் அடையாளங் காணப்படும் தரப்பினர்களுக்கு அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கு இயலுமை கிட்டும் வகையில் 2002 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க பெற்றோலிய உற்பத்திப் பொருட்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தைத் திருத்தம் செய்வதற்காக சட்டமூலமொன்றைத் தயாரிக்குமாறு சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக எரிசக்தி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

8. நிலவுகின்ற அரசியல், பொருளாதார மற்றும் சமூக ரீதியாகவுள்ள நெருக்கடியான நிலைமைகள் பற்றிய உண்மை நிலவரங்கள் தொடர்பாக பொதுமக்களைத் தெளிவூட்டல்.

தற்போது நாட்டில் உருவாகியுள்ள அரசியல், பொருளாதார மற்றும் சமூக ரீதியாகவுள்ள நெருக்கடியான நிலைமைகள் பற்றிய உண்மை நிலவரங்கள் தொடர்பாக பொதுமக்களைத் தெளிவூட்டுவதற்காக எற்புடைய அமைச்சுக்களின் பங்கேற்புடன் அரசாங்க தகவல் திணைக்களத்தின் மூலம் நிகழ்ச்சித்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்காக வெகுசன ஊடக அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.