நாட்டில் உண்மையான எரிபொருள் நெருக்கடி ஏற்படவில்லை எனவும், சில முறையற்ற தகவல் தொடர்பு பரிமாற்றம் காரணமாக செயற்கையான தேவைகள் உருவாக்கப்பட்டது எனவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
துறைமுகத்தில் எரிபொருள் டேங்கர்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், அதனை இறக்குதல் மற்றும் விநியோகம் செய்தல் மட்டுமே எஞ்சியுள்ளதாகவும் அவர் கூறினார். கடந்த காலங்களில் 24 மணித்தியாலங்களுக்கு மட்டுமே எரிபொருள் கிடைக்கும் காலங்கள் இருந்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.
நாரம்மல பொது நூலக கட்டிட திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
இன்னும் 3 அல்லது 4 நாட்களுக்கு மட்டுமே எரிபொருள் கிடைக்கும் என்று பொதுமக்களிடம் தெரிவித்ததால், மக்கள் பீதியடைந்துள்ளனர். இந்த தேவையற்ற தகவல் தொடர்புகளால் மட்டுமே மக்கள் அச்சமடைந்து வரிசைகள் உருவாகத் தொடங்கினர்.
அரசியல் விழிப்புணர்வின்மையினால் இந்த தேவையற்ற தகவல் பரிமாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், தற்போது நிலைமை மாறியுள்ளதாகவும், நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு ஜனாதிபதி தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)