மரணித்த நெதுன்கமுவே ராஜா யானையினை தேசிய பொக்கிஷமாக பிரகடனப்படுத்துமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார்.
புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் கபில குணவர்தனவுக்கு ஜனாதிபதி இந்த பணிப்புரையை விடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
எதிர்கால சந்ததியினரின் பார்வைக்காக நெதுன்கமுவே ராஜாவின் உடலைப் பாதுகாக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.
அதற்காக தேசிய அருங்காட்சியக அதிகாரிகள் குழுவொன்று குறித்த யானை இருந்த கம்பஹா வெலிவேரிய நெதுன்கமுவ பகுதிக்குச் சென்றுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.
குறித்த யானை இன்று அதிகாலை 5.30 அளவில் மரணித்ததாக அதன் பராமரிப்பாளர் வைத்தியர் ஹர்ச தர்மவிஜய தெரிவித்துள்ளார்.
1953ஆம் ஆண்டு இந்தியாவின் - மனிப்பூரில் பிறந்த நதுன்கமுவ ராஜா, 10 அடி உயரம் கொண்டதாகும்.
கடந்த 2007ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரையில், இந்த யானை கண்டி - எசல பெரஹரவில் அதிக தடவைகள் புனித தந்த தாதுவை சுமந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.