ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 49வது கூட்டத்தொடரை இலங்கை வெற்றிகரமாக கையாண்டது!
advertise here on top
advertise here on top

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 49வது கூட்டத்தொடரை இலங்கை வெற்றிகரமாக கையாண்டது!


சுவிட்சலாந்தின் ஜெனிவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் அமைப்பின் மனித உரிமைகள் பேரவையின் 49ஆவது கூட்டத்தொடருக்கு இலங்கை வெற்றிகரமாக முகங்கொடுத்ததாகவும் குற்றச்சாட்டுக்களுக்கு தர்க்க ரீதியாக விடயங்களை முன் வைத்து, அவற்றை தெளிவுபடுத்திக்கொள்ள முடிந்ததாகவும் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே அவர்கள் தெரிவித்தார்.


வெளிநாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளுடன் ஜெனீவாவில் பல கலந்துரையாடல்கள் இடம்பெற்றதாகவும், அவை மிகவும் பயனுள்ளதாக அமைந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


"ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டில் சவால்களும் இலங்கையும்" என்ற தலைப்பில் இன்று (15) முற்பகல் ஜனாதிபதி ஊடக மையம் ஏற்பாடு செய்த, ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட போதே வெளிவிவகார அமைச்சின் செயலாளர் இவ்வாறு தெரிவித்தார். இந்த ஊடகச் சந்திப்பு ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க அவர்களினால் நடத்தப்பட்டது. 


ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிசெல் பெஷலே அவர்களின் தற்போதைய அறிக்கையில் அதிக அவதானம் செலுத்தப்பட்டிருந்தது, யுத்தத்தின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்களை விட சுதந்திர நாட்டின் உள்ளக அரசியல் விடயங்களையே ஆகும் என்று ஜயநாத் கொலம்பகே அவர்கள் தெரிவித்தார்.


"அலுவலகத்திற்கு இதுபோன்ற உள் விவகாரங்களை விசாரிக்க உரிமை உள்ளதா என்றும், அது ஐக்கிய நாடுகளின் சாசனத்திற்கு ஏற்ப உள்ளதா என்றும் நாங்கள் வினவினோம். பல்வேறு கூட்டங்களை நடத்தி, நாங்கள் பல வெளிநாட்டுப் பிரதிநிதிகளுக்கு இந்நிலைமையைத் தெளிவுபடுத்தினோம். 31 நாடுகள் இலங்கைக்காக பேரவையின் இடைச் செயற்பாட்டுக் கலந்துரையாடலின் போது குரல் கொடுத்தனர். அங்கு இலங்கைப் பிரதிநிதிகளின் பிரதான தர்க்கமாக அமைந்தது, உள்நாட்டு விவகாரங்களில் தலையிடக்கூடாது என்பதே ஆகும். ஒரு நாட்டில் ஒரு விடயத்தை செய்வதற்கும் அதில் வெற்றி பெறுவதற்கும் அந்நாட்டின் ஒத்துழைப்பு அவசியம்" என்று மேலும் அவர் தெரிவித்தார். 


இலங்கைப் பிரதிநிதிகள் மனித உரிமைகள் பேரவையின் தலைவருடன் நீண்ட நேரம் கலந்துரையாடியதாகவும், அதற்கு சாதகமான பதில் கிடைத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


2022ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள 51ஆவது அமர்வு இலங்கை எதிர்கொள்ளும் அடுத்த சவாலாகும் என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜயநாத் கொலம்பகே அவர்கள் தெரிவித்தார். 


இதற்கு முறையான கால அட்டவணையுடன் கூடிய உரிய திட்டமிடல்கள் வகுக்கப்பட வேண்டும் எனவும், அதற்காக சிவில் சமூகம், புத்திஜீவிகள் உட்பட அனைவரினதும் ஒத்துழைப்பு தேவை எனவும் தெரிவித்தார். 


இலங்கைக்கு எதிராக வெளிநாடுகளில் போராட்டங்கள் நடத்துவது LTTE  கருத்துடையோர் மற்றும் அதற்கு துணை போவோர் அடங்கிய மிகச் சிறிய குழுவினாலேயே முன்னெடுக்கப்படுவதாகவும், அவற்றினால் இலங்கைக்கு பெரிய தாக்கம் ஏற்படப் போவதில்லை என்றும், எவ்வாறாயினும் அவர்களையும் நாட்டின் அபிவிருத்தியில் ஒன்றிணைத்துக்கொள்ள வேண்டுமென்றும், கலந்துரையாடல்கள் மூலம்  முன்னேற்றத்தை அடைந்துகொள்ள எதிர்பார்ப்பதாகவும் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.


கடந்த இரண்டரை வருடங்களைப் போன்று, குறிப்பாக கடந்த ஆறு மாதங்களில் ஏற்பட்டுள்ள தெளிவான முன்னேற்றம் குறித்து குறிப்பிட்ட வெளிவிவகார அமைச்சின் செயலாளர், பயங்கரவாத தடைச்சட்டத்தில் திருத்தம், LTTE  உடன் தொடர்புபட்டிருந்த 81 சிறைக்கைதிகளை விடுதலை செய்தல், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குதல் போன்ற பல சாதகமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.


Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.