இலங்கையில் இவ்வளவு அபிவிருத்தியடைந்து வரும் யுகம் ஒன்று இதுவரை இருந்ததில்லை - பிரதமர்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கையில் இவ்வளவு அபிவிருத்தியடைந்து வரும் யுகம் ஒன்று இதுவரை இருந்ததில்லை - பிரதமர்

ஒரு மாகாணத்திற்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படாது முழு இலங்கையும் சமமாக அபிவிருத்தியடையும் இவ்வாறானதொரு யுகம் இதற்கு முன்னர் காணப்படவில்லை – கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ

ஒரு பிரதேசத்திற்கோ மாகாணத்திற்கோ மாத்திரம் மட்டுப்படுத்தப்படாது முழு இலங்கையும் சமமாக அபிவிருத்தியடையும் இவ்வாறானதொரு யுகம் இதற்கு முன்னர் காணப்படவில்லை என கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்று (26) பிற்பகல் தெரிவித்தார்.

கிரம - கட்டுவன ஒருங்கிணைந்த நீர் வழங்கல் திட்டம் மற்றும் கிரம பேருந்து நிலையம் ஆகியவற்றை திறந்து வைத்து உரையாற்றும் போதே கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்தார்.

அனைவருக்கும் சுத்தமான குடிநீரை வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் ஒஸ்திரிய அரசாங்கம் மற்றும் இலங்கை அரசாங்கத்தின் நிதியில் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையினால் கிரம-கடுவான நீர் வழங்கல் திட்டம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் 34 கிராம அலுவலர் பிரிவுகளுக்கு சுத்தமான குடிநீர் வழங்கப்படும்.

வராபிட்டியவிலுள்ள கிரம நீர்த்தேக்கத்திலிருந்து நீரைப் பெற்று வெலந்தகொடவில் புதிய நீர் சுத்திகரிப்பு நிலையத்தை நிர்மாணித்து அப்பகுதியில் வசிக்கும் சுமார் 26,000 மக்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன்,   வலஸ்முல்ல, கிரம, கட்டுவன, மித்தெனிய வீதியில் 24 கிலோமீற்றர் தூரத்திற்கு குழாய்களை பொருத்தி குடிநீர்ப் பிரச்சினையை அதிக அளவில் தீர்ப்பதற்கு முடிந்துள்ளது.

சுமார் 40 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட கிரம பேருந்து நிலையம் மஹிந்த சிந்தனை புரநெகும திட்டத்தின் மூலம் ஆரம்பிக்கப்பட்ட திட்டமாகும். கடந்த நல்லாட்சி அரசாங்கத்தினால் முற்றிலுமாக நிறுத்தப்பட்டிருந்த இந்த பேருந்து நிலையமானது ஆறு கடை தொகுதிகளை  உள்ளடக்கியுள்ளது.
 
நிகழ்வில் கௌரவ பிரதமர் ஆற்றிய முழுமையான உரை வருமாறு,

எண்பத்தைந்து இடைத்தேர்தலின் போது நாங்கள் இங்கு வந்து கிரம பகுதியில் இருந்து பிரசாரம் செய்தது எனக்கு நினைவிருக்கிறது. அமைச்சர் ஜோர்ஜ் ராஜபக்ஷவின் காலத்திலும் அதற்கு முன்னரும் உங்களது பெற்றோர், இந்த இளைஞர்களின் பெற்றோர் உள்ளிட்ட குழுக்கள் இந்தப் பிரதேசத்தில் எமக்கு ஆதரவளித்தனர்.

அதனுடன் இன்று பல புதிய அபிவிருத்தி முன்மொழிவுகள் இந்தப் பிரதேசத்திற்கு வந்துள்ளன.

குறிப்பாக நம் அனைவருக்கும் தண்ணீர் தேவை. எமது அமைச்சர் வாசுதேவ நாணயக்கார அவர்கள் இன்று காலை எம்பிலிப்பிட்டிய பிரதேசத்திற்கும் தற்போது இப்பிரதேச மக்களுக்கும் சுத்தமான குடிநீரை வழங்கும் வேலைத்திட்டத்தை செயற்படுத்துகிறார். மக்களுக்கு சுத்தமான குடிநீர் அவசியம். ஏனெனில் அது எல்லா பக்கங்களிலும் விளைவுகளை ஏற்படுத்துகிறது. சுத்தமான குடிநீர் கிடைக்கும் பகுதிகளில், நோய் பாதிப்பு குறைவாக உள்ளது.

கடந்த அரசாங்கத்தின் போது இந்த மாகாணத்தில் அபிவிருத்தித் திட்டங்கள் நிறுத்தப்பட்டன. இந்தப் பிரதேசத்தில் மட்டுமன்றி முழு நாட்டிலும் அபிவிருத்தி நடவடிக்கைகள் ஸ்தம்பிதமடைந்திருந்தன.

இதனால் அன்று நாம் ஆரம்பித்த அபிவிருத்தித் திட்டங்கள் முடங்கின. சர்வதேச துறைமுகங்கள், விமான நிலையங்கள், இந்தப் பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி பணிகள் அனைத்தும் நம்மைப் பழிவாங்கும் எண்ணத்தில் கடந்த அரசால் நிறுத்தப்பட்டது. எதுவும் செய்யவில்லை. யாரை பழிவாங்கினார்கள்? இறுதியில் ஹம்பாந்தோட்டை மாவட்ட மக்களையும், மொனராகலை மாவட்ட மக்களையும் இந்தப் பிரதேசத்தில் மட்டுமன்றி நாடெங்கும் உள்ள எமது மக்களையே இவர்கள் பழிவாங்கினர்.

இன்று மீண்டும் எம்மீது நம்பிக்கை வைத்து எம்மை வென்று ஆட்சியை அமைத்துள்ளீர்கள். எமது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் இன்று அரசாங்கத்தை அமைத்து சேவையாற்றி வருகிறார். இன்று காலை எம்பிலிப்பிட்டியவில் நடைபெற்ற அபிவிருத்தி நிகழ்வில் நானும் அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவும் கலந்துகொண்டோம். இவ்வாறாக ஒவ்வொரு மாகாணத்திலும் ஒரு புதிய அபிவிருத்தி ஏற்படும். மக்களுக்கு குடிக்க தண்ணீர் கிடைக்கிறது. மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்கும் திட்டத்தையும் செயல்படுத்தி வருகிறோம்.

எனவே, தொழில்துறையை அறிமுகப்படுத்துவதற்கான திட்டங்களையும் உங்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவதற்கான புதிய திட்டங்களையும் நாங்கள் ஆரம்பித்துள்ளோம். அத்துடன் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் வேலைத்திட்டங்களையும், நாட்டின் ஏனைய அபிவிருத்தி நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றோம். அதன் மூலம் மக்களின் பல கேள்விகளுக்கு எம்மால் பதிலளிக்க முடிந்துள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் அரசாங்கம் பதவிக்கு வந்த நாள் முதல் இந்த நாட்டில் ஒரு புதிய போக்கு உருவாகியுள்ளது. நாடு அபிவிருத்தியை நோக்கி நகர்ந்தது. இந்த அபிவிருத்தி வேலைத்திட்டம் ஒரு மாகாணத்திற்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படாது முழு இலங்கையிலும் செயற்படுத்தப்பட்டது.

வடக்கு, தெற்கே, கிழக்கு அல்லது மேற்கு இந்த அனைத்து மாகாணங்களின் அபிவிருத்தியும் ஒரே சீரான முறையில் நடைபெற்ற யுகமொன்று எமக்கு இருந்ததில்லை.

எனவே, இப்பிரதேசத்தில் இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்த திரு.வாசுதேவ நாணயக்கார அவர்களுக்கு இன்று நாம் குறிப்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த நாட்டை கட்டியெழுப்புவதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவோம் என்ற நம்பிக்கையும் எமக்குண்டு. குறிப்பாக இந்நாட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கு நாட்டில் உடனடியாக அபிவிருத்தி ஏற்பட வேண்டும். அபிவிருத்தி இல்லாமல் வேலைவாய்ப்புகளை வழங்க முடியாது.

எனவே அபிவிருத்திக்கு முன்னுரிமை வழங்கி தொழில் துறைகளை உருவாக்கி முன்னோக்கி செல்வோம் என்ற செய்தியை இந்த மக்களுக்கு நாங்கள் நினைவூட்டுகிறோம். எனவே, இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ள கட்டுவன-கிரம நீர் வழங்கல் திட்டம் உங்களுக்கு பயனளிக்கும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

 நீர்வழங்கல் அமைச்சர் கௌரவ வாசுதேவ நாணயக்கார அவர்கள்,

கிரம - கட்டுவன ஒருங்கிணைந்த நீர் வழங்கல் திட்டத்தின் மூலம் வலஸ்முல்ல பிரதேச செயலகம் மற்றும் கட்டுவன பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட வீடுகளுக்கு நீர் விநியோகம் செய்ய முடிந்துள்ளது.

இந்த திட்டங்கள் அனைத்தும் கடந்த காலங்களில் முடங்கியதால் நீண்ட காலமாக தாமதமாகி வருகிறது. இதனை மீளச் செயற்படுத்தி - கட்டுவன ஒருங்கிணைந்த நீர் வழங்கல் திட்டத்தை ஒழுங்குபடுத்தி சுமார் 6000 குடும்பங்களுக்கு நீர் விநியோகம் செய்யும் திறனைப் பெற்றுள்ளோம்.

இதற்கு நமது கௌரவ பிரதமர் அவர்கள் வழங்கிய அனுசரணை மற்றும் தலைமைத்துவத்திற்கும், கௌரவ அமைச்சர் சமல் ராஜபக்ஷ அவர்களுக்கும் எமது பாவனையாளர்களான மக்களின் சார்பில் நன்றிகளை தெரிவித்துக்; கொள்கிறோம்.

நாங்கள் மிகவும் கடினமான காலத்தை கடந்து வருகிறோம். இன்று முழு உலகமும் தொற்று நோயின் எதிரொலியினால் பணவீக்கம் அல்லது விலைவாசி உயர்வு போன்ற நெருக்கடியில் உள்ளது.

நமது கௌரவ பிரதமர் அவர்களின் வழிகாட்டலுக்கு அமைய  இறக்குமதியைக் குறைத்து உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதே நாம் செய்ய வேண்டியிருந்தது. எங்களால் எதையும் தொடங்க முடியாத அளவுக்கு இந்த தொற்றுநோய் வெடித்தது.

ஆனால் அந்த சவாலை நாங்கள் முறியடித்தோம். இந்த சவாலை முறியடித்த உலக நாடுகளில் ஒன்றாக இலங்கை இன்று மிளிர்கிறது. அதற்குக் எமக்கு வழங்கப்பட்ட தலைமையே காரணம். அத்துடன் இலங்கை முழுவதும் பரந்துள்ள எமது சுகாதார வலையமைப்பும் காரணம். அபிவிருத்தியடைந்த நாடுகளிலேயே இத்தகைய சுகாதார வலையமைப்பு உள்ளது. 

இக்கட்டான காலத்தை கடந்து செல்லும் நாம் எதிர்காலத்தை இலகுவான காலமாக கருதலாம். இவ்வதறாகவே நாம் முன்னேறிச் செல்கிறோம். கடினமான காலங்களில் நாம் செய்ய வேண்டிய விடயங்களைச் செய்து, மேலும் அதிர்ஷ்டமான எதிர்காலத்தை நோக்கி பயணிப்போம் என அமைச்சர் தெரிவித்தார்.

 
நீர்ப்பாசன அமைச்சர் மற்றும் அரச பாதுகாப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் மற்றும் உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் கௌரவ சமல் ராஜபக்ஷ அவர்கள்,

அன்று கௌரவ மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஜனாதிபதியாகவிருந்த காலத்தில் ஆரம்பிக்கப்பட்டு கடந்த அரசாங்கத்தினால் இடைநிறுத்தப்பட்ட இந்த பேருந்து நிலையத்தை மீண்டும் நிறைவுசெய்து திறக்க முடிந்துள்ளது.
உங்கள் பிரதேசம் ஒருபுறம் வலஸ்முல்ல மறுபுறம் கட்டுவன. இரண்டுக்கும் இடையிலான புறநகர்ப் பகுதியே கிரம. இந்த நகரத்திற்கும் தேவைகள் உள்ளன. ஒருமுறை நாங்கள் ரன்மலேகந்தவிலிருந்து வலஸ்முல்லைக்கு நீர் குழாய் அமைத்ததுஎனக்கு நினைவிருக்கிறது. அப்போது வலஸ்முல்ல வைத்தியசாலையில் தண்ணீர் இல்லை. பல்வேறு ஆட்சிக்காலத்தில் கிணறு தோண்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டும் குறிப்பாக வைத்தியசாலைக்கு தண்ணீர் வழங்க முடியவில்லை.

எனவே, வைத்தியசாலைக்கு நீர் வழங்குவதற்காக ரன்மலேகந்தவிலிருந்து நீர் குழாய்களை பதித்து நீர் வழங்க முடிந்தது. இன்று உங்கள் வீடுகளுக்கு இன்னும் அதிகமாக குடிநீரை கேட்கிறார்கள். அதை வழங்குவது அரசின் கடமையும் பொறுப்பும் ஆகும்.

இடதுசாரி அல்லது முற்போக்குக் கட்சி ஆட்சி செய்யும் போதே உங்கள் ஒவ்வொரு பிரச்சினைக்கும் தீர்வு வழங்கப்படும். ஐ.தே.க அரசாங்கங்கள் இருந்த போது, உங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குவதற்கு அதிகம் எதுவும் செய்யப்படவில்லை.

கடந்த ஐந்து வருடங்களாக இந்த நாட்டில் எதுவும் நடக்கவில்லை. இங்குள்ள உங்கள் பிள்ளைகள் எப்பொழுதும் வேலை தேடிக்கொண்டே இருக்கிறார்கள். அதனை வழங்க வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். 
நாடெங்கிலும் பல நெல் களஞ்சியங்கள் இருந்தபோது, நல்லாட்சி அரசு வந்து நெல்லை சேமித்து வைக்க இடமில்லாமல் விமான நிலையத்தில் நெல்லை சேமித்து வைத்தது. அன்று  துறைமுகத்திற்கு கப்பல்கள் வரத் தொடங்கின. எண்ணெய் கொடுக்க ஆரம்பித்தோம். 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் புதிதாக நியமிக்கப்பட்ட அமைச்சர் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வரும் கப்பல்களை முற்றாக நிறுத்தினார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்புரையின் பேரில் ஆரம்பிக்கப்பட்ட கொழும்பு கிழக்கு முனையப் பணிகளை அந்த அரசாங்கத்தின் அமைச்சர் முற்றாக நிறுத்தினார்.

எனவே, இது போன்று அரசாங்கங்கள் மாறும்போது, மக்கள் நலனுக்காக, நாட்டின் நலனுக்காக, உங்கள் நலனுக்காகவும், உங்கள் எதிர்கால குழந்தைகளின் நலனுக்காகவும் செய்யப்படும் அனைத்து பணிகளும் அரசியல் பழிவாங்கலின் விளைவாக நிறுத்தப்பட்டுள்ளன. அரசியல் பழிவாங்கல்கள் என்ற பெயரில் எங்களை அன்றி உங்களையே பழிவாங்குகின்றனர். இந்த வளங்கள் உங்களுடையவை. இவை உங்களுக்கானவை. உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்கானவை. பிரச்சனைகள் உள்ளன. நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். இந்த பிரச்சனைகளில் இருந்து விடுபட நாங்கள் தயாராக இல்லை. எனவே உங்களின் தேவையை நிறைவேற்ற நாங்கள் கடமைப்பட்டுள்ளோம் என அமைச்சர் தெரிவித்தார்.

குறித்த நிகழ்வில் கௌரவ அமைச்சர்களான சமல் ராஜபக்ஷ, வாசுதேவ நாணயக்கார, நாமல் ராஜபக்ஷ, இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த, நாடாளுமன்ற உறுப்பினர்களான உபுல் கலப்பத்தி, அஜித் ராஜபக்ஷ, கயாஷான் நவனந்த, தென் மாகாண சபையின் தவிசாளர் சோமவன்ச கோதாகொட, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சின் செயலாளர் கலாநிதி பிரியத் பந்துவிக்ரம. தலைவர் நிஷாந்த ரணதுங்க மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் கட்டுவன பிரதேச சபையின் தவிசாளர் மஹிந்த கமாச்சி, பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பிரதேசவாசிகள் பலர் கலந்து கொண்டனர்.

பிரதமர் ஊடக பிரிவு

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.