நாட்டின் அரசியல் கலாசாரத்தில் பாரிய புரட்சியை நிகழ்த்தியுள்ளோம்! -சஜித்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாட்டின் அரசியல் கலாசாரத்தில் பாரிய புரட்சியை நிகழ்த்தியுள்ளோம்! -சஜித்


எமது நாடு அவசரமானதும் நெருக்கடியானதுமான சூழ்நிலைகளை உரியவாறு கையாள்வதற்கு அவசியமான தயார்ப்படுத்தல்களை மேற்கொள்வதில் தோல்விகண்டிருக்கின்றது. இயற்கை அனர்த்தங்கள், தொற்றுநோய்ப்பரவல் உள்ளிட்ட சுகாதார நெருக்கடிகள், பொருளாதாரப்பிரச்சினைகள் போன்றவற்றுக்கு முகங்கொடுப்பதற்குரிய முன்னாயத்த நடவடிக்கைகள் தற்போதைய அரசாங்கத்தினால் மாத்திரமன்றி, எந்தவொரு அரசாங்கங்களினாலும் முன்னெடுக்கப்படவில்லை.


ஆனால் நாம் எதிர்க்கட்சியாக இருந்தாலும் குறுங்கால மற்றும் நீண்டகால நோக்கில் சிந்தித்து வைத்தியசாலைகளுக்கு அவசியமான மருத்துவ உபகரணங்களை வழங்கிவருவதன் ஊடாக நாட்டின் அரசியல் கலாசாரத்தில் புரட்சியை ஏற்படுத்தியிருக்கின்றோம் என்று எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.


ஐக்கிய மக்கள் சக்தியினால் முன்னெடுக்கப்பட்டுவரும் 'ஐக்கிய மக்கள் சக்தியின் மூச்சு' செயற்திட்டத்தின் ஊடாக 2,990,000 ரூபா பெறுமதியான மருத்துவ உபகரணங்கள் கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸவினால் நேற்று கல்முனை வைத்தியசாலைக்கு வழங்கிவைக்கப்பட்டன. 


அதனைத்தொடர்ந்து அங்கு உரையாற்றுகையிலேயே சஜித் பிரேமதாஸ மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 


அங்கு அவர் மேலும் கூறியதாவது, 


எதிர்க்கட்சியாக இருக்கின்றபோதிலும் நாடளாவிய ரீதியில் பின்தங்கிய பிரதேசங்களிலுள்ள வைத்தியசாலைகளுக்கு அவசியமான உதவிகளை வழங்கிவருவதன் ஊடாக ஐக்கிய மக்கள் சக்தியானது அரசியல் ரீதியில் புதியதொரு புரட்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. எம்வசம் அதிகாரம் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களுக்கு சேவையாற்ற முடியும் என்பதை நிரூபித்திருக்கின்றோம். 


எதிர்வருங்காலங்களிலும் பல்வேறு பின்தங்கிய பிரதேசங்களிலுள்ள வைத்தியசாலைகளுக்கு அவசியமான உதவிகளை வழங்குவதற்குத் திட்டமிட்டிருக்கின்றோம். இருப்பினும் சுயமாக எதனையும் செய்யமுடியாதவர்கள் அரசியல் ரீதியிலான பொறாமை மற்றும் வெறுப்புணர்வின் வெளிப்பாடாக நாம் முன்னெடுத்துவரும் இச்செயற்திட்டத்தைக் கடுமையாக விமர்சிக்கின்றார்கள். 'மருத்துவ உபகரணங்களையும் பொருட்களையும் பகிர்வதற்கு மாத்திரமே சஜித் பிரேமதாஸ தகுதியானவர்' என்று குறைகூறுவதன் ஊடாக சிலர் தமது அரசியல் இயலாமையை மறைத்துக்கொள்வதற்கு முயற்சிக்கின்றார்கள்.


எமது நாடு அவசரமானதும் நெருக்கடியானதுமான சூழ்நிலைகளை உரியவாறு கையாள்வதற்கு அவசியமான தயார்ப்படுத்தல்களை மேற்கொள்வதில் தோல்விகண்டிருக்கின்றது. 


இயற்கை அனர்த்தங்கள், தொற்றுநோய்ப்பரவல் உள்ளிட்ட சுகாதார நெருக்கடிகள், பொருளாதாரப்பிரச்சினைகள் போன்றவற்றுக்கு முகங்கொடுப்பதற்குரிய முன்னாயத்த நடவடிக்கைகள் தற்போதைய அரசாங்கத்தினால் மாத்திரமன்றி, எந்தவொரு அரசாங்கங்களினாலும் முன்னெடுக்கப்படவில்லை. ஆகவே நாம் குறுங்கால மற்றும் நீண்டகால நோக்கிலேயே வைத்தியசாலைகளுக்குத் தேவையான மருத்துவ உபகரணங்களை நன்கொடையாக வழங்கும் செயற்திட்டத்தை முன்னெடுத்துவருகின்றோம்.


அடுத்ததாக நாடு என்ற ரீதியில் எந்தவொரு விடயத்திலும் ஏற்படக்கூடிய மிகமோசமான விளைவுகள் குறித்து சிந்தித்து, அதற்கேற்றவாறு தீர்மானங்களை மேற்கொள்வதும் செயற்திட்டங்களை வகுப்பதும் அவசியமாகும். அந்தவகையில் மிகத்தீவிரமான பாதிப்புக்களை ஏற்படுத்தக்கூடிய திரிபடைந்த டெல்டா வைரஸ் பரவலைத்தொடர்ந்து, தற்போது ஒமிக்ரோன் திரிபு பரவ ஆரம்பித்திருக்கிறது. எனவே எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய சுகாதாரநெருக்கடி குறித்து முன்கூட்டியே சிந்தித்து, அதனைக் கையாள்வதற்கு அவசியமான நடவடிக்கைகளை எம்மால் இயன்ற அளவில் மேற்கொண்டுவருகின்றோம். 


எம்மால் முன்னெடுக்கப்பட்டுவரும் மருத்துவ உபகரணங்களை வழங்கும் செயற்திட்டம் ஓர் 'சமூக முதலீடு' என்பதுடன் அது மக்களின் உயிரைப் பாதுகாப்பதற்கான முதலீடு என்பதை அனைவரும் நன்கு புரிந்துகொள்ளவேண்டும் என்று குறிப்பிட்டார். 


-நா.தனுஜா


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.