இலங்கையில் ஏப்ரல் மாத இறுதிக்குள் அனைத்து அரச ஊழியர்களுக்கும் பூரண தடுப்பூசி போடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
பூஸ்டர் தடுப்பூசி உட்பட மூன்று தடுப்பூசிகள் உள்ளடங்களாகவே முழுமையான தடுப்பூசி என வரையறுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்கு செல்ல அனுமதி வழங்கப்படாது என சுகாதார அமைச்சினால் தயாரிக்கப்பட்ட சட்டங்களுக்கமைய முழு தடுப்பூசி போடுவது கட்டாயமாகும்.
இது தொடர்பில் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹனவிடம் வினவிய போது, அரச நிறுவனங்கள் பொது இடங்கள் என்பதனால் அவ்விடங்களில் பணியாற்றும் அனைவருக்கும் தடுப்பூசி போடுவது கட்டாயமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட ஒருவர் உத்தியோகபூர்வ நோக்கத்திற்காக அரச நிறுவனமொன்றுக்கு சென்றால் அவருக்கு சேவையை வழங்கும் அரச உத்தியோகத்தர் முழுமையாக தடுப்பூசி செலுத்தியுள்ளாரா என விசாரிக்க சேவையை பெறும் நபருக்கு உரிமை உண்டு என உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.
குறித்த அதிகாரி முழுமையாக தடுப்பூசி போடவில்லை என தெரியவந்தால் அது தொடர்பில், அந்த பகுதி பொது சுகாதார பரிசோதகருக்கு தகவல் தெரிவித்து, தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தடுப்பூசி போடாமல் இருப்பதற்கு ஒருவருக்கு உரிமை இருந்தாலும், மற்றொருவரின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் உரிமை அவருக்கு இல்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.