ஹபாயா விடயத்தில் தமிழ் அரசியல் தலைமைகள் தமிழக அரசியல் தலைமைகள் போன்று தைரியமாக செயற்பட வேண்டும்! -ஹரீஸ் எம்.பி

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஹபாயா விடயத்தில் தமிழ் அரசியல் தலைமைகள் தமிழக அரசியல் தலைமைகள் போன்று தைரியமாக செயற்பட வேண்டும்! -ஹரீஸ் எம்.பி


இந்த பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் சகோதர தமிழ் எம்.பிக்கள் மற்றும் தமிழ் தலைமைகளிடம் நான் வேண்டுகோளாக விடுப்பது தமிழக அரசியல் தலைமைகள் போன்று மிகத்தெளிவாக அச்சமின்றி சகோதர சமூகங்களின் உரிமை, கலாச்சார விடயங்களில் மனம் திறந்து பகிரங்கமாக பேசுங்கள். அப்போதுதான் தமிழ்- முஸ்லிம் மக்கள் மத்தியில் ஒற்றுமை நிலவும். கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் தான் வட- கிழக்கு இனப்பிரச்சினை தீர்வு சம்பந்தமாக தமிழ்- முஸ்லிம் கட்சிகள் பல தடவைகள் பேசியிருந்தது. தமிழ் மக்களின் போராட்டத்திற்காக ஒன்றுடன் ஒன்றாக இணைந்து முஸ்லிம் தலைமைகள் தமிழ் தலைமைகளுடன் செயற்பட்டவற்றை மறந்துவிட முடியாது. இனப்பிரச்சினைக்கு தீர்வு வரும் போது நாம் ஒற்றுமையாக செயற்பட்டால் மட்டும்தான் அதை சாத்தியப்படுத்த முடியும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் இன்று தெரிவித்தார்.


இன்று புதன்கிழமை பாராளுமன்றத்தில் திருகோணமலை சண்முகா விவகாரம், கர்நாடக ஹிஜாப் விடயம் , இஸ்லாம் பாடபுத்த மீளக்கோரல், கிழக்கின் தமிழ்- முஸ்லிம் ஒற்றுமை போன்ற விடயங்கள் தொடர்பில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர், கிழக்கு மாகாணத்தில், புகழ்பெற்ற சண்முகா வித்தியாலயத்தில் அண்மையில் நடந்த விடயங்கள் தொடர்பில் சமூக வலைத்தளங்களிலும், ஊடகங்களிலும் பேசப்பட்டு வருகின்றது. அந்த பாடசாலையில் சேவையாற்றும் பஹ்மிதா எனும் ஆசிரியை அவரது ஆடைக் கலாசாரத்தை நிலைநாட்ட இலங்கை மனித உரிமை ஆணைக்குழு, நீதிமன்றம் ஆகியவற்றுக்கு சென்று நீதிமன்றம் ஹபாயா அணிந்து செல்லலாம் என்று கூறிய  இணைக்கப்பாட்டின் அடிப்படையில் மீண்டும் ஹபாயா அணிந்து கடமைக்கு சென்றபோது எதிர்பாராத கசப்பான சம்பவம் நடந்தேறியுள்ளது. இவ்விவகாரம் முஸ்லிங்கள் மத்தியில் பலத்த கவலையை தோற்றுவித்துள்ளது.


வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் பேசும் மக்களின் கலாச்சார, மத உரிமைகள் என்பது புரிந்துணர்வுடன் காலாகாலமாக இருந்துவரும் ஒன்றாகும். விடுதலை புலிகள் ஆயுதந்தாங்கி போராடிய காலங்களிலிலும், வன்முறைகள் கடுமையாக இருந்த காலத்திலும் கூட சில இஸ்லாமிய மாணவர்கள் தமிழ் பாடசாலைகளிலும்,   தமிழ் மாணவர்கள் இஸ்லாமிய பாடசாலைகளிலும் கல்விகற்றிருந்தனர். அதே போன்றே ஆசிரியர்களும் ஒன்றாக இணைந்து கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். அப்போது கூட இவ்வாறான கலாச்சார, மத உரிமைகளில் பிரச்சினைகள் வந்ததாக நான் கேள்வியுறவில்லை. 


யுத்தம் முடிந்து இரு சமூகங்களும் ஒற்றுமையாக வாழும் இந்த காலகட்டத்தில் இப்படியான சம்பவம் நடைபெற்று அந்த சம்பவத்தின் பின்னர் கூட காத்திரமான நடவடிக்கைகளை உரிய தரப்புகள் எடுக்கவில்லை. குறைந்தது மூத்த அரசியல்வாதி இரா. சம்பந்தன் உட்பட திருகோணமலை மாவட்ட தமிழ், முஸ்லிம், சிங்கள எம்.பிக்களாவது ஒன்றாக கூடி இவ்விடயம் தொடர்பில் தீர்மானம் ஒன்றை எடுத்திருக்கலாம்.


வடக்கு கிழக்கு முஸ்லிம் மக்கள் அச்சப்படும் நிலையில் இருந்து வருகின்றனர். வெறுமனே ஒரு ஹிஜாப் இற்காக போராடும் நிலை உருவாகியுள்ள சூழ்நிலையில் எவ்வாறு இனப்பிரச்சினைக்கான தீர்வில் அரசியல் உரிமைகள் விடயத்தில் நாங்கள் உடன்பாட்டுக்கு வரமுடியும் என்று முஸ்லிம் சமூகம் அதிலும் குறிப்பாக இளைஞர்கள் தமிழ் அரசியல் தலைமைகள் சம்பந்தமாக சந்தேகங்கொள்ள ஆரம்பித்துள்ளனர்.


நில உரிமைகள், அரசியல் உரிமைகள் தொடர்பில் தமிழ் தேசிய கட்சிகள் தமது நிலைப்பாட்டை தெரியப்படுத்தாமல், கிழக்கிலுள்ள 42 சதவீத முஸ்லிங்களின் வாழ்வியல் தொடர்பில் எவ்வித அக்கறையும் கொள்ளாமல் வடகிழக்கு இணைய வேண்டும், இந்திய இலங்கை ஒப்பந்தம் அமுல்படுத்தவேண்டும், 13 நடைமுறைக்கு வரவேண்டும் என்று கூறும் தமிழ் கட்சிகளின் தலைமைகள் ஹபாயா பிரச்சினைக்கு தீர்வை முன்வைக்க முடியாதவர்களாக இருக்கிறார்கள். குறிப்பாக இந்த நிலை மாறி தமிழ்- முஸ்லிம் ஒற்றுமைக்காக நாங்கள் பாடுபட வேண்டும். தமிழக அரசியல் தலைமைகளான ஸ்டாலின், தொல் திருமாவளவன், கமல்காசன்   போன்று தெளிவாக, தைரியமாக ஹபாயா விடயத்தில் செயற்பட முன்வரவேண்டும். 


இது தொடர்பில் முஸ்லிம் இளைஞர்கள் கவலைப்பட்டு எழுதிக் கொண்டிருந்த சூழ்நிலையில் துரதிஸ்டவசமாக இந்திய கர்நாடக மாநிலத்தில் உள்ள கல்லூரியொன்றில் ஹிஜாப் பிரச்சினை தலைதூக்கி நேற்று உக்கிரமடைந்துள்ளது.  சர்வதேச கவனத்தினை ஈர்க்கும் வகையில் பிரச்சினை கடுமையாக்கப்பட்டுள் ளது. அந்த கல்லூரியில் கல்வி பயிலும் பீபி முஸ்கான் எனும் மாணவி கல்லூரிக்கு வந்த சமயத்தில் இளைஞர்கள் அந்த மாணவியை சூழ்ந்து கூக்குரலிட்டனர். 


அப்போது தன்னுடைய உரிமைக்காக உரத்துக்குரலெழுப்பிய செய்தி சர்வதேச ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதிலுள்ள ஆறுதலான விடயமாக இந்தியாவிலுள்ள முற்போக்கான தலைமைகளை நோக்கலாம். ராகுல் காந்தி, கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சீதாராமைய்யா, தமிழக முதலமைச்சர் மு.கா. ஸ்டாலின், பாரத எம்.பி. தொல். திருமாவளவன், நடிகர் கமலஹாசன், இந்தியாவின் முன்னணி அரசியல் தலைமைகள், முக்கிய பிரமுகர்கள் இந்த விடயத்தை இந்திய அரசியலமைப்பு எதிரான விடயமாக சுட்டிக்காட்டி அந்த சகோதரிக்கு நடந்த அநீதிக்கு தங்களின் கண்டனங்களை பதிவுசெய்து அரசியல் ஆதாயங்களுக்காகவும், தேர்தல்களை மையமாக கொண்டும் இந்த விடயத்தை சில அரசியல் கட்சிகள் கையிலெடுத்துள்ளதாக பகிரங்கமாகவே அந்த தலைவர்கள் அறிவித்துள்ளனர். 


கர்நாடக மாநில அரசின் தீர்மானத்தை அவர்கள் கண்டித்தும் பேசியுள்ளனர். இந்தியாவில் உள்ள மாநிலங்களில் பலவற்றை பீ .ஜெ.பி ஆண்டுகொண்டிருக்கிறது. ஆனால் கர்நாடகாவில் இந்த செயல் நடைபெற்றிருப்பது பலத்த அதிர்வலையையும் தெற்காசிய மாணவர்கள் மத்தியில் ஒரு குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


இன்று எமது நாட்டில் கசப்பான சம்பவங்கள் நடந்துகொண்டிருக்கிறது. மக்கள் பிரதிநிதிகள் என்ற அடிப்படையில் நிதானமாகவும், அவதானமாகவும் இருந்துகொண்டிருக்கிறோம். முஸ்லிங்களுக்கு நடக்கும் விடயங்கள் தொடர்பில் பலரும் எங்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறார்கள். குறிப்பாக இஸ்லாம் பாடப்புத்தகங்களை திரும்பப்பெறுமாறு கல்வியமைச்சுடன் தொடர்பில்லாத பாதுகாப்பு அமைச்சின் கீழுள்ள சிலர் அழுத்தங்கொடுத்ததாக அறிந்து அதிகாரிகளிடம் பாராளுமன்ற உறுப்பினர்களாகிய நாங்கள் பேசினோம். இஸ்லாம் பாடப்புத்தகத்தில் சில மாற்றங்களை செய்யவேண்டும் என கல்வியமைச்சுடன் சம்பந்தப்படாத சில தரப்புக்கள் அழுத்தம் கொடுத்ததாக தெரிவிக்கப்பட்டது. 


சம்பந்தமான கல்வியமைச்சின் வெளியீட்டு பணிப்பாளர் நாயகம், ஜம்மியத்துல் உலமா சபை பிரதிநிதிகளுடன் கல்வியமைச்சின் முஸ்லிம் அதிகாரிகள் சம்பந்தமாக பேசியிருக்கிறார். கல்வியமைச்சு செய்ய உள்ள மாற்றங்கள் தொடர்பில் உலமா சபைக்கு தெரியப்படுத்தியுள்ளனர். அவர்களின் விதப்புரைகள் மற்றும் ஆலோசனைகளை வேண்டி நிற்பதாக அமைச்சின் அதிகாரிகள் எங்களிடம் தெரிவித்தனர். 


இந்த விடயம் தொடர்பில் முஸ்லிம் எம்.பிக்கள் எல்லோரும் கட்சி பேதங்கள் இல்லாது ஒருமித்து கல்வியமைச்சருடன் பேசி பாடப்புத்தக விடயத்தில் அநீதி நடக்காமல் பாதுகாக்க ஒன்றிணைய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.


-நூருல் ஹுதா உமர்


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.