சந்தேகத்திற்குரிய எரிவாயு கொள்கலன்களை மீள கையளிப்பதற்கு நுகர்வோருக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
நுகர்வோரினால் பாவனைக்கு உட்படுத்தப்பட்ட, எரிவாயு தீர்ந்துபோகாத சமையல் எரிவாயு கொள்கலன்களை மீள கையளிக்க விரும்புவோருக்கு சந்தர்ப்பம் வழங்குமாறு லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் நிறுவனங்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவித்துள்ளது.
இவ்வாறு மீளப் பெறும் சமையல் எரிவாயு கொள்கலன்களில் எஞ்சியுள்ள எரிவாயுவின் அளவை தற்போதைய சந்தை விலைக்கு ஏற்ப கணக்கிட்டு, அந்த தொகையை புதிய எரிவாயு கொள்கலனை கொள்வனவு செய்யும்போது, கழிப்பனவு செய்யுமாறு குறித்த நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சமையல் எரிவாயு விநியோகஸ்தர்கள் அல்லது முகவர்கள், குறித்த எரிவாயு கொள்கலன்களை மீள பெற்றுக்கொள்ள மறுத்தால் 1977 என்ற துரித எண் அல்லது கீழ் காணும் இலக்கங்களுக்கு முறைப்பாடு செய்யுமாறு நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவித்துள்ளது.
பகுதியளவில் பயன்படுத்திய அல்லது சந்தேகத்திற்கிடமான எரிவாயு சிலிண்டர்களை மீள கையேற்பது தொடர்பில் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.
இது தொடர்பில் இன்றைய பத்திரிகைகளில் அறிவித்தல் விடுத்துள்ளதாக பாவனையாளர் அதிகாரசபை இன்று (26) முன்முறையீட்டு நீதிமன்றிற்கு அறிவித்துள்ளது.
அதற்கமைய குறித்த சிலிண்டர்களை ஏற்க மறுக்கும் விநியோகஸ்தர்கள், விற்பனையாளர்கள் தொடர்பில் 25 மாவட்டங்களிலும் நியமிக்கப்பட்டுள்ள பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு தெரிவிக்க முடியுமென குறித்த அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, எரிவாயு சிலிண்டர்களை மீள கையேற்பது தொடர்பில் பொதுமக்களை தௌிவூட்டுவதற்கான அறிவித்தலை நாளைய தினம் (27) இலத்திரனியல் ஊடகங்கள் வாயிலாக வௌியிடவுள்ளதாக அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இன்று தேசிய பத்திரிகைகளில் இது தொடர்பான அறிவித்தல்கள் பிரசுரமாக்கப்பட்டுள்ளதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை சார்பில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஆஜராகிய அரச சிரேஷ்ட சட்டத்தரணி மனோஹர ஜயசிங்க குறிப்பிட்டார்.
அதற்கமைய பகுதியளவில் பயன்படுத்தப்பட்ட மற்றும் சந்தேகத்திற்கிடமான எரிவாயு சிலிண்டர்களை மீள கையேற்குமாறு நீதிமன்றத்தால் இதற்கு முன்னர் பிறப்பிக்கப்பட்ட உத்தரவிற்கு அமைய, பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை மற்றும் எரிவாயு நிறுவனங்கள் செயற்படவில்லை என தெரிவித்து நாகானந்த கொடித்துவக்கினால் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டை ஆராய்ந்த போது, அரச சிரேஷ்ட சட்டத்தரணி மனோஹர ஜயசிங்க இதனை மன்றிற்கு தெரிவித்தார்.
அபாயமிக்க சமையல் எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு விநியோகிக்கின்றமை தொடர்பில் லிட்ரோ மற்றும் லாஃப் எரிவாயு நிறுவனங்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட எழுத்தாணை மனு மீதான விசாரணையின் போதே நாகானந்த கொடித்துவக்கினால் இந்த முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நீதிபதிகளான ருவன் பெனாண்டோ மற்றும் சம்பத் விஜயரத்ன ஆகியோர் முன்னிலையில் குறித்த மனு இன்று (26) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, லாஃப் நிறுவனம் சார்பில் முன்னிலையாகும் ஜனாதிபதி சட்டத்தரணி ஹர்ஷ அமரசேகரவிற்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளமையால், குறித்த மனு மீதான விசாரணையை ஒத்திவைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து இம்மனு மீதான விசாரணை எதிர்வரும் பெப்ரவரி 08 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.