மட்டக்களப்பு விமான நிலைய விமானப் படை தளத்திற்குள் அனுமதியின்றி விமானப்படையின் சோதனைச்சாவடி ஊடாக உள்நுழைந்த ஆண் ஒருவரை இன்று (26) காலையில் கைது செய்துள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த விமான நிலையத்தில் பல்வேறு தரப்பட்ட வேலைகளில் ஊழியர்களாக வேலை செய்துவரும் பணியாளர்கள் தினமும் விமான நிலையம் சென்று பணியாற்றிவிட்டு மாலையில் வீடு திரும்பி வருவது வழக்கமாக இருந்தது.
இந்நிலையில் சம்பவதினமான இன்று காலை 8.00 மணியளவில் வழமைபோல விமானநிலையத்துக்குள் வேலைக்கு செல்லும் பணியாளர்களுடன் பணியாளராக விமானப்படையின் சோதனைச்சாவடி ஊடாக வாழைச்சேனை மீராவேரடயைச் சேர்ந்த 41 வயதுடைய ஒருவர் உள்நுழைந்துள்ளார்.
இவ்வாறு உள்நுழைந்தவர் அங்குள்ள விமானபடை தளப்பகுதிக்கு சென்ற நிலையில் சந்தேகம் கொண்ட விமானப்படையினர் குறித்த நபரிடம் உள்ளே நுழைய அனுமதிப் பத்திரம் கேட்டபோது அவர் தேசிய அடையாள அட்டையை காட்டியதையடுத்து அவரை கைது செய்தனர்.
குறித்த நபர் வாழைச்சேனை பிரதேச செயலத்தில் கடமையாற்றி வருவதாகவும் இன்று காலை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மனைவியை கொண்டு சென்று விட்டுவிட்டு அதன் பின்னர் பொழுதுபோக்க விமான நிலையத்தை பார்ப்பதற்காக சென்றுள்ளதாகவும் அதன்போது அங்கு விமான நிலையத்தினுள் வேலைக்கு உட்செல்பவர்களுடன் ஒன்றித்து விமான நிலைய சோதனைச்சாவடியை கடந்து உட்சென்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதில் கைது செய்யப்பட்டவரை விமானபடையினர் பொலிஸாரிடம் ஓப்படைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.