பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள இலங்கைக்கு உதவுவதற்காக இந்தியா அவசர உதவிப் பொதிகளை உருவாக்கி வருகிறது என்று 'எகனாமிக் டைம்ஸ்' பத்திரிகை இன்று (12) செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த நடவடிக்கைகள் உணவு மற்றும் சுகாதார பாதுகாப்பு, எரிசக்தி பாதுகாப்பு மற்றும் நாணய பரிமாற்றம் உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
நிதியமைச்சரான பசில் ராஜபக்ஷ அண்மையில் இந்தியாவிற்கு விஜயம் செய்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த பத்திரிகை தெரிவித்துள்ளது.
இது உணவு, மருந்து, எரிபொருள் மற்றும் பிற அத்தியாவசிய பொருட்களை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்வதற்கு இலங்கைக்கு கடன் வழங்கும் திட்டமாகும்
அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்து வருவதால், இலங்கை கடனைத் திருப்பிச் செலுத்தும் அபாயத்தில் உள்ளது. அதேநேரம், அரசாங்கம் தனது அனைத்து வெளிநாட்டுக் கடனையும் செலுத்தும் என நம்புவதாக மத்திய வங்கி ஆளுநர் கூறியிருந்தார்.
"நாட்டில் கொரோனா தொற்றுநோய் தாக்கத்தினால் ஏற்பட்ட முடக்கத்தை தொடர்ந்து நாட்டை மீண்டும் திறப்பதன் மூலம் பாதிக்கப்பட்ட சுற்றுலாத் துறையை புதுப்பிக்க முயற்சிக்கிறது, மேலும் அதிகமான இலங்கையர்கள் வேலை தேடி வெளிநாடுகளுக்குச் செல்வதால் பணம் அனுப்பும் வரவு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறது.
இரு நாடுகளுக்குமிடையில் தற்போதுள்ள இருதரப்பு பொருளாதார உறவுகளை மேலும் விரிவுபடுத்த கூடிய வழிகள் மற்றும் வழிமுறைகளை இரு நாடுகளும் அடையாளம் கண்டுள்ளன" என்று இலங்கை அரசாங்கத்தின் அறிக்கையை மேற்கோள்காட்டி 'எகனாமிக் டைம்ஸ்' செய்தி தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)