மேன்முறையீட்டு நீதிமன்ற உத்தரவிற்கு அமைய லிட்ரோ நிறுவனம் இந்த அறிவிப்பை வௌியிட்டுள்ளது.
இலங்கை தர நிர்ணய நிறுவன வழிகாட்டுதல்களுக்கு அமைய வீட்டு எரிவாயு சிலிண்டர்களை மாத்திரம் வெளியிடுமாறு லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் கேஸ் நிறுவனங்களுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
எரிவாயு கசிவு காரணமாக ஏற்பட்ட வெடிப்புகள் குறித்து விசாரணை நடத்துமாறு கோரி சிவில் சமூக ஆர்வலர் நாகாநந்த கொடித்துவக்கு தாக்கல் செய்த மனு தொடர்பில் இடைக்கால உத்தரவொன்றை வௌியிட்டு ருவன் பெர்னாண்டோ மற்றும் சம்பத் விஜயரத்ன ஆகிய நீதிபதிகள் குழாம் இந்த உத்தரவை பிறப்பித்தனர்.
இதன்படி, தற்போது சந்தையில் வெளியிடப்பட்டுள்ள பயன்படுத்தப்படாத எரிவாயு சிலிண்டர்களை மீளப் பெற நடவடிக்கை எடுக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் மற்றுமொரு உத்தரவையும் பிறப்பித்திருந்தது.
மேலும், வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டரில் உள்ளடங்கியுள்ள கலவையை அதில் காட்சிப்படுத்துமாறு குறித்த நிறுவனங்களுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தற்போது நுகர்வோர் வசம் உள்ள பாதி பயன்படுத்தப்பட்ட எரிவாயு சிலிண்டர்களை மீளப்பெறுமாறும், அதற்கான கட்டணத்தை செலுத்துமாறும் குறித்த நிறுவனத்திற்கு உத்தரவு பிறப்பிக்குமாறு நாகாநந்த கொடித்துவக்கு இதற்கு முன்னர் நீதிமன்றில் கோரியிருந்தார்.
நுகர்வோர் விவகார அதிகாரசபை இது தொடர்பில் ஆராய்ந்து உரிய ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.