கோவிட் -19 பரவுவதைத் தடுக்கும் முயற்சியில் தடுப்பூசி போடப்படாதவர்கள் பொது இடங்களுக்குள் நுழைவதைத் தடுப்பது தொடர்பாக சட்ட ஆலோசனை கோரப்பட்டதால் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் கோவிட் கட்டுப்பாட்டு குழுவின் கூட்டம் இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் கூடியது. இச்சந்திப்பின் போது, எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த, பூஸ்டர் டோஸ்களை அடுத்த இரண்டு வாரங்களுக்குள் செய்து முடிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு குழு உறுப்பினர்களுக்கு அரச தலைவர் அறிவுறுத்தினார்.
இரண்டாவது டோஸ் எடுத்து மூன்று மாதங்கள் முடிந்த அனைவரும் ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசியை பூஸ்டர் டோஸாகப் பெறத் தகுதியுடையவர்கள். அதன்படி, தகுதியான நபர்கள் நாளை முதல் எந்த தடுப்பூசி மையத்திலும் தடுப்பூசியைப் பெறலாம்.
சமீபத்திய நாட்களில் பதிவாகியுள்ள கோவிட் -19 இன் உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளில் பெரும்பாலானவர்கள் தடுப்பூசி போடப்படாதவர்களாக இருப்பவர்கள் என்றும் அவர்களில் பெரும்பாலானவர்கள் இளைஞர்கள் என்றும் அவதானிப்புகள் வெளிப்படுத்தியுள்ளன என்று சுகாதார அதிகாரிகள் ஜனாதிபதியிடம் தெரிவித்தனர்.
தீவிர சிகிச்சையில் உள்ள கோவிட் -19 நோயாளிகளின் எண்ணிக்கையைக் குறைக்கவும், இறப்பு விகிதத்தைக் குறைக்கவும் தடுப்பூசி கட்டாயமாகும். இதன்படி, இது தொடர்பில் இளைஞர்களுக்கு தெளிவுபடுத்துமாறும், அதன் பின்னர் தடுப்பூசியை விரைவாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி பணிப்புரை வழங்கினார்.
இதேவேளை, 16 முதல் 19 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு இரண்டாவது டோஸையும் 12 முதல் 15 வயதுக்குட்பட்ட அனைத்து மாணவர்களுக்கும் முதல் டோஸையும் வழங்குவதற்கு ஒப்புதல் கிடைத்துள்ளது.
அதன்படி, உடனடியாக தடுப்பூசி வழங்க கல்வி அமைச்சுடன் சேர்ந்து திட்டங்களை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார். (யாழ் நியூஸ்)