முஸ்லிங்களின் இருப்பை கேள்விக்குட்படுத்தும் எந்தவித செயற்பாடுகளுக்கும் நாங்கள் துணைபோக மாட்டோம்! -ஹரீஸ் எம் பி

முஸ்லிங்களின் இருப்பை கேள்விக்குட்படுத்தும் எந்தவித செயற்பாடுகளுக்கும் நாங்கள் துணைபோக மாட்டோம்! -ஹரீஸ் எம் பி


கடந்த 1987 காலப்பகுதியில் முஸ்லிங்கள் அடிமைகளாக்கப்பட்டதை போன்று முஸ்லிங்களின் இருப்பை கிழக்கில் கேள்விக்குட்படுத்தும் எந்தவித செயற்பாடுகளுக்கும் நாங்கள் துணைபோக மாட்டோம். கிழக்கு பிராந்திய பாராளுமன்ற உறுப்பினர்கள் என்ற வகையில் மக்களின் நலனில் எப்போதும் கரிசனை கொண்டு ஒற்றுமையாக செயற்பட்டு கிழக்கின் அபிவிருத்திகள், உரிமைகள் விடயங்களில் ஒற்றுமையாக பயணிக்க தயாராக உள்ளோம் என முன்னாள் இராஜாங்க அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார்.

சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் எம்.எம். ஆஷிக்கின் தலைமையில்  நடைபெற்ற அபிவிருத்தி தொடர்பிலான கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

எமது நாட்டின் அரசாங்கம் வெளிநாட்டு நாணய நெருக்கடியை சந்தித்துள்ளது. அதனால் புதிய கொள்கைத் திட்டங்ககளை வகுத்து நாட்டை முன்னேற்ற பாதைக்கு கொண்டுசெல்ல கிராமிய மட்டத்திலிருந்து பொருளாதார மேம்பாட்டை ஆரம்பிக்க நிதியமைச்சர் பசில் ராஜபக்ஸ 2022ஆம் ஆண்டின் வரவுசெலவுத் திட்டத்தில் பாரியளவிலான நிதியை ஒதுக்கியுள்ளார். கடந்த காலங்களில் இவ்வாண்டு ஒதுக்கப்பட்டது போன்று கிராமிய பொருளாதார மேம்பாட்டை கருத்தில் கொண்டு பாரிய நிதியொதுக்கீடுகள் இடம் பெற்றிருக்கவில்லை. நிதியமைச்சர் பசில் ராஜபக்ஸவின் இந்த முயற்சியானது நாடும், நாட்டு மக்களும் முன்னேறவேண்டும் என்பதை அடிப்படையாக கொண்டதாகவே அமைந்துள்ளது. சிலர் அரசியலுக்காக பல கதைகளை கூறினாலும் திட்டங்களை உள்ளார்ந்து கவனிக்கவேண்டிய தேவை இருக்கிறது. எமது அண்மைய நாடான பங்களாதேஸ் முன்னேற்றத்தை நோக்கி செல்ல காரணமாக அந்த நாட்டின் கிராமிய பொருளாதார கொள்கையே காரணம்.

நிதியமைச்சர் பசில் ராஜபக்ஸ அறிமுகம் செய்துள்ள கிராம மக்களை முன்னேற்றும் இந்த திட்டத்தை சிறப்பாக செய்யவேண்டியது அரச அதிகாரிகளின் கடமையாகும். கடந்த இரு வருடங்களாக நாட்டை அச்சுறுத்தி வரும் கொரோனா அலையின் காரணமாக மக்கள் கடன்காரர்களாக மாறி பாரிய நிதிநெருக்கடியை அனுபவித்து வருகிறார்கள். அப்படியானவர்களின் வறுமையை போக்க தகுதியானவர்களை அரச அதிகாரிகள் அடையாளம் கண்டு இறைவனுக்கு பயந்தவர்களாக சேவையாற்றி உற்பத்தியாளர்களை மேம்படுத்த வேண்டும். ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அரசினால் வழங்கப்பட்ட 100 மில்லியன் ரூபாய்களிலும் சாய்ந்தமருது மக்களுக்கும் நிறைய தொகைகளை ஒதுக்கி உற்பத்தி திறன் மிக்க பிரதேசமாக சாய்ந்தமருதை மாற்ற தயாராக உள்ளேன். புதிய திட்டத்தின் படி ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் இடையில் திட்டங்களை வகுத்து செயற்படுத்த வேண்டும். பிந்தினால் நிலையியல் கட்டளை சட்டம் இடம்கொடுக்காது. ஆகவே எம்மால் அதனை பூரணமாக செய்யமுடியாமல் போகும்.

கிராமிய மட்ட சுயகுழுக்கள் அமைத்தல் என்பது தமிழகத்தில் வெற்றியளித்துள்ளது. அது தொடர்பிலான அறிவை இணையதளத்தின் உதவியுடன் நாம் பெற்றுக்கொள்ளலாம். மக்களின் பசியை போக்கும் புனித கடமையை அரச பிரதிநிதிகளான நாம் சரியாக செய்யவேண்டும். எமது நாட்டில் இப்போது  நீர்ப்பாசனம்,  விவசாயம்,யூரியா என பல்வேறு நெருக்கடிகள் உள்ளது. அரசாங்கம் சார்பிலான பாராளுமன்ற உறுப்பினர்கள் எல்லோரும் வழங்கிய அழுத்தம் காரணமாக யூரியா பசளையை அடுத்த போகத்திற்கு வழங்க அரசாங்கம் முடிவுசெய்துள்ளது. அம்பாறையில் 40 வீதமான மக்கள் விவசாயம் செய்வதனால் இந்த விடயம் தொடர்பில் பல்வேறு கம்பெனிகள் மற்றும் அதிகாரிகளுடன் கடந்த வாரம் முயற்சிகளை செய்துள்ளோம். அது மட்டுமின்றி ஒப்பந்தக்காரர்களின் தாமதம் காரணமாக பல வீதிகள் அபிவிருத்தி செய்யமுடியாமல் கிடப்பில் உள்ளது.

 கல்வி மேம்பாடு, பௌதிக வள அபிவிருத்தி, மதஸ்தலங்களின் புனரமைப்பு, நகர அபிவிருத்தி, என பல்வேறு வகையான அபிவிருத்திகளை செய்ய தயாராகி வருகிறோம். வெளிநாட்டு பயணத்தை முடித்துக்கொண்டு நிதியமைச்சர் பசில் ராஜபக்ஸ நாடுதிரும்பியதும் புதிய உத்வேகத்துடன் செயலாற்ற உள்ளதாக அறிகிறோம். அரசாங்க முக்கிய காரியாலயங்களில் புதிய நிர்வாக மாற்றங்களும் நடைபெற்று வருகிறது. விவசாயத்தை புத்துணர்ச்சி பெறச்செய்ய பல்வேறு வேலைத்திட்டங்கள் நடைபெற்று வருகின்றது. பூகோளத்தில் இலங்கையின் அமைவிடத்தின் காரணாமாக தங்களின் தேவைகளுக்கு இலங்கையை பயன்படுத்த பல்வேறு உதவிகளை செய்ய உலகநாடுகள் தயாராக உள்ளது. அந்த வரிசையில் இலங்கையில் உணவுப்பஞ்சம் வராமலிருக்க தானியங்கள் வழங்குதல், 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி, எண்ணெய் வள உதவிகள், சுற்றுலாத்துறை மேம்பாட்டுக்கான உதவிகள் போன்றவற்றை வழங்க இந்தியா தயாராக இருக்கிறது என்றார்.

நூருல் ஹுதா உமர்

Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.