வைத்தியர் ஷாபி நிரபராதி என்ற தீர்ப்பு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ் மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அரசில் முஸ்லிம் சமூகத்துக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவமாகும் என ஐக்கிய காங்கிரஸ் கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
ஊடகம் ஒன்று எந்த ஆதாரமும் இன்றி சொன்ன குற்றச்சாட்டுக்காக அன்றைய ரணில், சஜித் அரசு வைத்தியர் ஷாபியை கைது செய்து ஜனநாயகத்தையும் மானுட நீதியையும் புதைத்தது.
இந்த அநீதிக்கெதிராக போராட முடியாதவர்களாக, வைத்தியருக்கு நீதி பெற்றுக்கொடுக்க முடியாதவர்களாக அன்று ஐ.தே.க, முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் காங்கிரசின் அமைச்சர்கள் வெறும் போடு காய்களாக இருந்தனர்.
கொடுமைமிக்க கடந்த நல்லாட்சியால் அநியாயமாக கைது செய்யப்பட்ட ஷாபிக்கு ராஜபக்ஷ ஆட்சியில் நீதி கிடைக்கும் என்று நம்பி இந்த ஆட்சியை நாம் கொண்டு வந்தோம். அதன் பலன் இப்போது கிடைத்துள்ளது.
முஸ்லிம்கள் இந்த அரசுக்கு எதிராக 95 வீதம் வாக்களித்தும் கூட முஸ்லிம் சமூகத்தின் மனக்கிலேசமாக இருந்த டாக்டர் ஷாபியின் பிரச்சினைக்கு யாரினதும் அழுத்தம் இன்றி நீதி மன்றம் மிகச்சரியான தீர்ப்பை வழங்கியுள்ளமை ராஜபக்ஷ ஆட்சியின் சிறந்த ஆட்சிக்கு உதாரணமாகும்.
-ஏ.பி.எம்.அஸ்ஹர்