தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியொன்றில் சிரேஷ்ட ஊடகவியலாளர் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் கருத்துரைத்த அவர், சஹ்ரானின் தாக்குதலின் பின்னர் இலங்கை முஸ்லிங்களை பற்றி பெரும்பான்மை சிங்கள மக்கள் மத்தியில் தப்பபிப்பிராயம் கட்டியெழுப்பப்பட்டுள்ள இந்த சூழ்நிலையில் அந்த முடிச்சிக்களை அவிழ்க்கும் வேலைதிட்டங்களை நாம் யாரும் செய்யவில்லை. இவ்வாறான நிலை இருக்கின்ற போது சமூக வலைத்தள பாவனைக்காக சிறையில் உள்ள கைதிகளை புனர்வாழ்வளித்து விடுதலை செய்வது தொடர்பில் ஒரு இணக்கப்பாட்டுக்கு வந்திருந்தோம். அந்த கலந்துரையாடல்களின் போது இந்த நாட்டிலுள்ள 99 சதவீத முஸ்லிங்கள் ஐ.எஸ்.ஐ.எஸ். சிந்தனை கொண்டவர்கள் எனும் குற்றச்சாட்டை பேராசிரியர் ரொஹான் குணரத்ன கூறினார். இந்த நம்பிக்கைதான் சிங்கள மக்கள் மத்தியில் இப்போது இருந்து கொண்டிருக்கிறது. இதனை மறுதலித்து உண்மை நிலைகளை யாரும் விளக்க முன்வரவில்லை எனும் கவலை இருக்கிறது.
இந்த காலகட்டத்தில் தான் பாகிஸ்தானில் பொறியியலாளர் பிரியந்தவின் துரதிஷ்ட சம்பவம் நடந்தது. இந்த விடயம் எங்கள் யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத கவலையான விடயம். அந்த சம்பவம் நடந்தபோது அந்த இடத்தில் இருந்த 2-3 ஆயிரம் மக்களின் மனோநிலையும், முகபாவனையும் இந்த நாட்டில் இருக்கின்ற 18 மில்லியன் சிங்கள மக்கள் மத்தியிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுவிடயம் தொடர்பில் சிங்கள பாராளுமன்ற உறுப்பினர்கள், சிங்கள மதகுருமார்கள் எங்களுடன் பேசுகின்ற போது அந்த சம்பவம் தொடர்பில் மிகவும் அதிருப்தியான கருத்துக்களை முன்வைத்தார்கள். இந்த சம்பவம் தொடர்பில் அவர்களின் மனோநிலை மிகவும் மோசமாக இருந்தது. இந்த சந்தர்ப்பத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அதிரடியாக களத்தில் இறங்கி சம்பந்தப்பட்டவர்களை கைதுசெய்து, பாதிக்கப்பட்ட சகோதரரின் குடும்பத்தினருக்கு கோடிக்கணக்கான நஷ்டஈடுகளை வழங்கி, இஸ்லாமிய குடியரசு நாட்டின் பிரதமர் அலுவலகத்தில் பௌத்த கலாச்சாரப்படி மலரஞ்சலி செலுத்தியது வரை எல்லாமே பாகிஸ்தானின் நலனை விட எமது நாட்டில் வாழும் 2 மில்லியன் முஸ்லிங்களின் நலனுக்காகவே.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை அவரது இலங்கை விஜயத்தின் போது எங்களின் முஸ்லிம் தலைவர்கள் அடங்களாக நாங்கள் சந்தித்தோம். அப்போது இந்த நாட்டில் வாழும் 75 சதவீத பௌத்த மக்களுடன் நாங்கள் ஆயிரக்கணக்கான வருடங்கள் ஒற்றுமையாக வாழ்ந்த வரலாறுகளை நினைவுபடுத்தி முஸ்லிம் மக்கள் அவர்களுடன் முரண்படக்கூடாத விடயங்களை வலியுறுத்தினார். முஸ்லிங்களுக்கு எதிராக உலகில் இஸ்லாமிய எதிர்ப்பு பிரச்சாரமும், சதித்திட்டமும் நடைபெறுகிறது. இலங்கையில் வாழும் முஸ்லிங்களுக்கும் பெரும்பான்மையின மக்களுக்கும் இடையில் ஒற்றுமை மலர சகலரும் முயற்சிக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கிய முக்கியமான தலைவர் அவர்.
பொறியியலாளர் பிரியந்தவின் துரதிஷ்ட சம்பவம் நடந்த போது இறைவனின் உதவியை கொண்டு இலங்கை முஸ்லிங்களை ஆபத்துக்களிலிருந்து காப்பாற்றினார்.
அவரது செயற்பாடுகளை பாராட்டி அஸ்கீரிய பீட மாநாயக்கர்கள் கடிதம் அனுப்புகிறார்கள். உலகக்கிண்ண நாயகன் அர்ஜுனா ரணதுங்க கடிதம் எழுதுகிறார். ஐக்கிய மக்கள் சக்தியின் பிரமுகர்கள் நன்றி கூறுகிறார்கள். இதுதான் இஸ்லாமிய தலைமைத்துவம் செய்யும் முன்மாதிரியான அரசியல் நடவடிக்கை. ஆனால் நாங்கள் மக்கள் மத்தியில் தான் அரசியல் செய்கிறோம். மக்களை உசுப்பேற்றி வாக்கரசியல் செய்வதில் குறியாக இருக்கிறோம். இதனை வைத்து அரசியல் செய்வதாக இருந்தால் பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான் கான் முஸ்லிங்கள் மத்தியில் பாகிஸ்தானில் அரசியல் செய்திருக்கலாம். அவர் மாறாக ஒட்டுமொத்த பாகிஸ்தானியர்களையும் இந்த செயலை கண்டிக்க வைத்தார். பாகிஸ்தான் மதகுருக்கள் கடுமையாக கண்டித்தார்கள்.
எமது நாட்டின் அரசியல் பெரும்பான்மை மக்களுக்கும் முஸ்லிங்களுக்கும் இடையில் துருவநிலையை அடைகிறது. கடந்த கால அரசியல், சமூக வரலாறுகளை அறியாமல் சமூக வலைத்தளங்களில் இளைஞர்கள் மூளைக்கு தட்டியதையெல்லாம் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். சாணக்கியன் எம்.பி போன்றவர்கள் உசுப்பேத்தி விடுவதனால் சிங்கள மக்களுடனும், தெற்கு அரசியல்வாதிகளுடனும் மோத விடப்படுகிறார்கள். முஸ்லிங்களின் சில விடயங்களை பேசுவது தவறில்லை. ஆனால் தமிழ் அரசியல் கடந்த காலங்களில் விட்ட தவறுகளை பேசுவதில்லை. வடகிழக்கு இணைக்கப்பட்டு நாங்கள் அடிமையாக்கப்பட்டோம். இப்போது கிழக்கு தனியாக பிரிந்து முதலமைச்சர், அமைச்சர்களை பெற்று நிம்மதியாக வாழ்வதை பொறுக்க முடியாமல் மீண்டும் வடகிழக்கை இணைக்க கேட்கிறார். இவருக்கும், பிரபாகரனுக்கும் என்ன வித்தியாசம். தனது மாவட்ட முஸ்லிங்களின் காணிகளை மறுத்து அது நாடகம் என்கிறார். அவரை விவாதத்திற்கு அழைத்த பாராளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நஸீரை ஏளனமான வார்த்தைகளை கொண்டு பேசுகிறார். அநாகரீகமாக நடந்துகொள்கிறார்.
முஸ்லிங்களை அடக்கியாளும், மேலாதிக்க சிந்தனை பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் மனதில் உள்ளது. அவர் முஸ்லிம் சமூகத்தை கொச்சப்படுத்தும் விதமாக பேசுகிறார்.
கல்முனையை கேட்கும் சாணக்கியன் எம்.பிக்கு கல்முனை நகரத்தின் வரலாறு தெரியுமா? இனவாதமாக பேசும் சாணக்கியன் எம்.பி தெற்கு அரசியல்வாதிகளை கைநீட்டிப்பேசுபவர் தமிழ் தலைமைகள் விட்ட தவறை கைநீட்டி கேள்விகேட்க திராணியற்று இருக்கிறார் என்றார்.
-நூருல் ஹுதா உமர்