அரசுக்குள் வெடித்த சர்ச்சை - காரணம் இது தான்!

அரசுக்குள் வெடித்த சர்ச்சை - காரணம் இது தான்!

நாட்டில் அதிகரித்து வரும் டொலர் தட்டுப்பாட்டைச் சீர் செய்ய சர்வதேச நாணய நிதியத்திடம் (IMF) கடனைப் பெறுவதா இல்லையா என்பதில் அரசாங்கத்திற்குள் கடுமையான முரண்பாட்டு நிலைமை தலைதூக்கியுள்ளதாக அரசாங்கத் வட்டாரத் தகவல்கள் தெரிவிப்பதாக சிங்கள ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடனைப் பெறுவதே நாட்டின் கடுமையான நெருக்கடிக்கு ஒரே தீர்வு என அரசாங்க அமைச்சர்கள் குழுவொன்று கருத்து தெரிவித்துள்ளதாகவும், ஏனையோர் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாட அரசாங்கம் தயங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. டொலர் தட்டுப்பாடு எரிபொருள், மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் இறக்குமதியை கடுமையாகப் பாதித்துள்ள நிலையில், இனியும் காலம் தாழ்த்தாமல் சர்வதேச நாணய நிதியத்தை அணுகுமாறு அமைச்சர்கள் குழுவொன்று பரிந்துரைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த திங்கட்கிழமை அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் டொலர் நெருக்கடி குறித்து தீவிரமாக விவாதிக்கப்பட்டதாகவும், எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு மாதாந்தம் 350 மில்லியன் டொலர்கள் தேவைப்படுவதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எரிபொருளை கொள்வனவு செய்வதற்கு பணம் திரட்டும் முயற்சி வெற்றியளிக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். டொலர் பற்றாக்குறையை தவிர்ப்பதற்காக சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்வதை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என பந்துல குணவர்தன, வாசுதேவ நாணயக்கார உள்ளிட்ட அமைச்சர்கள் குழு பிடிவாதமாக இருப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தலைமையிலான அமைச்சர்கள் குழுவொன்று நெருக்கடிக்கு தீர்வு காண சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்லுமாறு ஆலோசனை தெரிவித்துள்ளதாகவும் தெரியவருகிறது.

சர்வதேச நாணய நிதியத்திற்குச் சென்றால் நிபந்தனைகளை விதித்து மக்களின் நலனைப் பறிப்பதாக அமைச்சர்கள் சுட்டிக்காட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.