மக்கள் எரிபொருளை அளவுக்கு அதிகமாக கொள்வனவு செய்தால் தட்டுப்பாடு ஏற்படும்! -கம்மன்பில

மக்கள் எரிபொருளை அளவுக்கு அதிகமாக கொள்வனவு செய்தால் தட்டுப்பாடு ஏற்படும்! -கம்மன்பில


நாட்டில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தேவையானளவு எரிபொருளைக் கொள்வனவு செய்தவர்கள், தற்போது அளவிற்கு அதிகமாக கொள்வனவு செய்தால், நிச்சயம் தற்காலிக எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும்.


சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டுள்ளமை எரிபொருள் விநியோகத்தில் எவ்வித தாக்கத்தையும் செலுத்தாது என்று அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.


நேற்று (16) இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,  


நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என்று நபரொருவரால் தற்போது நான்காவது தடவையாகவும் பரப்பப்பட்டுள்ள போலி செய்தியின் காரணமாக எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என்று மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர். 


கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் இந்திய வெளியுறவுச் செயலாளர் இலங்கைக்கு விஜயம் செய்த போது திருகோணமலை எண்ணெய் குதங்களை இந்தியாவிற்கு விற்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடவுள்ளதாக போலி செய்திகள் பரப்பப்பட்டன.


அவர் நாட்டுக்கு விஜயம் செய்து 03 மாதங்கள் நிறைவடைந்துள்ளன. எனினும் அவ்வாறானதொரு ஒப்பந்தம் இதுவரையில் கையெழுத்திடப்படவில்லை. கையெழுத்திடவும் முடியாது. காரணம் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் அதனை 35 ஆண்டுகள் குத்தகைக்கு வழங்கியுள்ளது.


எனவே நாட்டில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது. எனது முதல் பொறுப்பு எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாமல் பார்த்துக் கொள்வதாகும். 


இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் பலவற்றிலும் எரிபொருள் தட்டுப்பாடு காணப்படுகிறது. எனினும் இலங்கையில் எரிபொருள் உற்பத்தி இடம்பெறாத போதிலும் , நாம் எவ்வித தடையும் இன்றி மக்களுக்கு அவற்றை விநியோகித்துக் கொண்டிருக்கின்றோம். மாறாக தட்டுப்பாடு ஏற்படுமாயின் முன்னதாகவே நாட்டு மக்களுக்கு அது தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்படும்.


சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை சில நாட்களுக்கு மூட வேண்டியேற்படும் என்பதை கடந்த செப்டெம்பர் மாதமே அறிவித்திருந்தேன்.


எனினும் இதன் காரணமாக நாட்டுக்கு எந்த நஷ்டமும் கிடையாது. அதே போன்று இதன் காரணமாக எரிபொருள் தட்டுப்பாடும் ஏற்படாது. நாட்டின் ஒட்டுமொத்த பெற்றோல் தேவையில் 14 சதவீதமும் , டீசல் தேவையின் 29 சதவீதமும் மாத்திரமே இங்கிருந்து பெறப்படுகிறது.


அதிக விலைக்கு எரிபொருளை கொள்வனவு செய்வதற்காகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.


நாம் கொள்வனவு செய்வதை விட குறைந்த விலைக்கு எமக்கு எரிபொருள் விநியோகிக்கும் நிறுவனங்கள் காணப்படுமாயின் அவற்றை வெளிப்படுத்துமாறு எதிர்கட்சி தலைவருக்கு சவால் விடுக்கின்றோம். அவ்வாறில்லை என்றால் நாட்டு மக்களிடம் பொய் உரைத்தமைக்காக எதிர்கட்சி தலைவர் மன்னிப்பு கோர வேண்டும்.


முன்னர் சுமார் 500 ரூபாவிற்கு எரிபொருள் நிரப்பியவர்கள் தற்போது , அளவுக்கு அதிகமாக எரிபொருளைப் பெற்றுக் கொண்டால் நிச்சயம் விநியோகத்தில் சிக்கல் ஏற்படும். இரு நாட்களுக்காக களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள எரிபொருள் ஒரே நாளில் நிறைவடைந்தால், எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு மீண்டும் கிடைக்கப் பெறும் வரை தற்காலிக தட்டுப்பாடு ஏற்படுவதை தவிர்க்க முடியாது. எனினும் ஓரிரு நாட்களில் இந்த நிலைமை சீராகும் என்றார்.


எம்.மனோசித்ரா


Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.