தேசிய மட்டதிதில் இன்று (09) ஒழுங்குபடுத்தப்பட்ட இப்போராட்டமானது மட்டக்களப்பு வாழைச்சேனை – ஓட்டமாவடிச் சந்தியில் மட்டக்களப்பு மாவட்ட இலங்கை ஆசிரியர் சேவை சங்க, இலங்கை ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகளினால் ஒழுங்கமைக்கப்பட்டு கல்குடா வலய பாடசாலை அதிபர்களினதும் ஆசிரியர்களினதும் முழுமையான பங்குபற்றுதலுடன் நடைபெற்றது.
பங்குபற்றிய அதிபர் ஆசிரியர்கள் “பிள்ளைகளின் கல்வியை வியாபாரமாக்காதே”, “அதிபர் ஆசிரியர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்காதே” போன்ற வாசகங்களையும் தாங்கி கோஷமிட்டனர்.
மேலும் இப்போராட்டம் எங்களுக்கானது மட்டுமல்ல எங்கள் வருங்கால சந்ததியினருக்கும்தான் என்பதை பெற்றோர்கள் புரிந்து கொண்டு எமக்கு ஆதரவளிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டதோடு வரும் வரவு செலவுத் திட்டத்தில் சிறந்த ஒரு சுபோதினி திட்டம் முன்மொழியப்படவேண்டும் எனவும் அரசை வலியுறுத்தி கோஷமிட்டனர்.