'ஸ்டார்' கிரிக்கெட் வீரர்கள் இருந்தும் இந்திய அணி தோற்பது ஏன் தெரியுமா? -நாஸிர் உசேன்

'ஸ்டார்' கிரிக்கெட் வீரர்கள் இருந்தும் இந்திய அணி தோற்பது ஏன் தெரியுமா? -நாஸிர் உசேன்


உலக கோப்பை தொடர்களில் இந்திய கிரிக்கெட் அணி சிறப்பாக விளையாடாததற்கு காரணம் என்ன என்பது பற்றி இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் நாஸிர் ஹுசைன் கருத்து தெரிவித்துள்ளார்.


டி20 உலகக் கோப்பை அரையிறுதிக்கு இந்திய அணி செல்ல முடியாமல் வெளியேறிய பிறகு, பல வகையான விமர்சனங்களை அந்த அணி சந்தித்து வருகிறது.


இந்நிலையில்தான் நாஸிர் ஹுசைன் தனது பங்கிற்கு ஒரு கருத்தை தெரிவித்துள்ளார்.


இந்த உலக கோப்பை மட்டுமல்லாது, இதற்கு முந்தைய 50 ஓவர் உலக கோப்பை மற்றும் ஐசிசி தொடர்களில் இந்தியா மட்டமாக விளையாடுவது தொடர்பாக அவர் கூறுகையில், ஐசிசி போட்டிகளில் இந்திய அணி நெருக்கடி மனநிலையோடுதான் விளையாடுகிறது. சுதந்திரமாக விளையாடுவதில்லை. அதனால் ஒவ்வொரு முறையும் தோல்வியடைகிறது. களத்தில் சுதந்திரமாக விளையாட வேண்டியது அவசியம். இந்திய அணியில் திறமைகள் அதிகம். ஆனால் வெளிப்படையாக விளையாடாதது அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. திறமை நிரம்பிய அணி இருந்தும், பயமின்றி விளையாடுவதில்லை.


இந்தியா ஏற்கனவே இங்கு ஐபிஎல் விளையாடியுள்ளது. பெரிய நட்சத்திரங்களும் உள்ளனர். ஆனாலும் அரபு எமிரேட்சில் தோல்வியைத்தான் தழுவியுள்ளது. முதல் போட்டியிலேயே அவர்களுக்கு ஒரு பெரிய அடி கிடைத்தது, பவர்பிளேயில் ஷஹீன் அப்ரிடி சிறப்பாக பந்து வீசி ரோஹித் சர்மா, ராகுலை ஆட்டமிழக்கச் செய்ததால் இந்திய அணி அப்படியே சரிந்து விட்டது.


டாப் ஆர்டரில் டீம் இந்தியா சிறந்து விளங்குகிறது. ஆனால் மிடில் ஆர்டரில் சரியில்லை. எனவே, பிளான்-பி தேவைப்பட்டது. ஹர்திக் பாண்டியா ஒரு பேட்ஸ்மேனாக விளையாடுவது சில சமயங்களில் சவாலானது. இவ்வாறு நாசர் ஹுசைன் தெரிவித்தார்.


இந்த டி20 உலகக் கோப்பையின் தொடக்கத்தில் இந்திய அணி இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்தது, பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணி இந்தியாவை பெரிய வித்தியாசத்தில் தோற்கடித்தது. இதன்பிறகு, ஆப்கானிஸ்தான், ஸ்காட்லாந்தை வீழ்த்திய போதிலும், இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேற முடியவில்லை. டி20 உலக கோப்பை தொடரின் ஆரம்பத்தில், கோப்பையை வெல்லப் போகும் அணியாக கணிக்கப்பட்ட இந்தியா, அரையிறுதிக்கு கூட முன்னேற முடியாமல் தாயகத்திற்கு நடையை கட்டுகிறது.


அதேநேரம், அண்மையில், டி20 தொடர்களில் பெரிதாக சோபிக்காத ஆஸ்திரேலியா பழைய ஃபார்முக்கு வந்துள்ளது. கணிக்க முடியாத பாகிஸ்தான் அசால்ட்டாக அரையிறுதிக்குள் போய் விட்டது. இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தான் பதற்றமேயில்லாமல் ஆடியது. ஆனால் இந்திய வீரர்கள்தான் பதற்றத்தோடு இருந்தது கவனிக்கத்தக்கதாகும். இங்கிலாந்து அணியும் கூட கடந்த 5 வருடங்களாக பயமில்லாமல் அதிரடியை காட்டி வருகிறது. இதுதான் அவர்களின் வெற்றிகளுக்கும் காரணமாக உள்ளது.


Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.