கட்சி பதவிக்காக ஹரீஸ் எம்.பி சோரம் போவது கல்முனைக்கு செய்யும் வரலாற்று துரோகம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கட்சி பதவிக்காக ஹரீஸ் எம்.பி சோரம் போவது கல்முனைக்கு செய்யும் வரலாற்று துரோகம்!


நாளை வாக்கெடுப்புக்கு வரவுள்ள 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தை ஆதரிக்க கூடாது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எடுத்திருக்கும் முடிவானது இலங்கையில் வாழும் முஸ்லிங்களுக்கு செய்யப்போகும் வரலாற்று துரோகமாகும். அதிலும் குறிப்பாக இனவாத கொள்கைகள் கொண்டவர்கள் நிறைந்து காணப்படும் இந்த அரசில் கிழக்கில் பல்வேறு பிரச்சினைகள் இருக்கத்தக்கதாக அவற்றை முன்னிறுத்தி ஆளும் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளாது இவ்வாறு முட்டாள்தனமான முடிவை எடுத்திருப்பது பொருத்தமற்ற ஒன்றாகவே  நோக்கவேண்டியுள்ளது.

முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இதை விட பூதாகரமான 20க்கு ஆதரவளித்ததை மு.கா உயர்பீடம் அனுமதித்து விட்டு இன்று வரவுசெலவு வாக்கெடுப்பில் அரசுடன் முட்டிமோதுவது அரசை முஸ்லிங்கள் விடயத்தில் பிழையான தீர்மானங்களை எடுக்க வழிவகுக்கும். கல்முனையை துண்டாடவும், ஏனைய மாவட்டங்களிலுள்ள முஸ்லிங்களின் காணிகளை தமக்கு பெற்றுக்கொள்ளவும் முஸ்லிங்களுக்கு எதிராக பல்வேறு திட்டமிடல்களை செய்து கொண்டு தமிழ் அரசியல் வாதிகளும், தமிழ் அரசியல் கட்சிகளும், பொது இயக்கங்களும் பகிரங்கமாகவே செயற்பட்டுக்கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் வரவு-செலவு திட்ட விவகாரத்தில் அரசை பகிரங்கமாக பகைத்துக் கொண்டு மறைமுகமாக கல்முனையை தாரைவார்க்க சகல சலுகைகளையும் தமிழ் தேசிய ஆதரவாளர்களிடமிருந்து பெற்றுவிட்டார்களோ என்ற சந்தேகம் எழுகிறது. 

கல்முனை தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் இன்றைய உயர்பீட கூட்ட தீர்மானத்தினால் தான் தொடந்தும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் நீடிக்க வேண்டும் என்பதற்காகவும், தொடர்ந்தும் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கவேண்டும் என்பதற்காகவும், மு.கா உயர்பீட தீர்மானத்தை ஏற்று வரவு-செலவு திட்டத்திற்கு ஆதரவளிக்காமல் இருக்க தீர்மானித்துள்ளதாக ஊர்ஜிதமாக அறிகிறோம். அவருடன் நாங்கள் கேட்பது என்னவென்றால் உங்கள் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்காக, சுயநல கட்சி அரசியலுக்காக பட்டப்பகலில் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனும், பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியனும் அரசை முஸ்லிங்கள் எதிர்க்கின்ற போது கல்முனையை இலகுவாக துண்டாட வாய்ப்புள்ளதாக பகிரங்கமாக பல்வேறு சந்தர்ப்பங்களில் கூறியிருக்கும் நிலையில் நீங்கள் உங்களின் பதவியாசைக்காக கல்முனையை தாரைவார்த்துவிட்டு கட்சியுடன் இணங்கி செல்ல போகின்றீர்களா? அல்லது பதவியாசைக்கு அப்பால் சொந்த ஊரான கல்முனையை காப்பாற்ற வரவுசெலவு திட்டத்தில் அரசுக்கு ஆதரவளிக்க போகின்றீர்களா? என்பதே.

இதுதான் இன்று கல்முனை வாழ் மக்கள் ஒவ்வொருவரும் எழுப்பும் வினாவாக உள்ளது. குறிப்பாக இவ்வளவு காலம் எந்த சலுகைக்கும் சோரம் போகாதவர் என்று காத்த தங்களின் நல்ல பெயரை முஸ்லிம் காங்கிரஸின் கண்மூடித்தனமான ஆசைக்காக துரோகமிழைத்தவர் என்ற பட்டத்தை பெறப்போகின்றீர்களா?

கல்முனை தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் அடங்களாக ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் கிழக்கு முஸ்லிம் மக்கள் இன்று தமிழ் தேசிய மற்றும் சிங்களத் தேசிய பெரும்சக்திகளுக்கு இடையில் முஸ்லிங்களின் கிராமங்கள், காணிப்புலங்கள், உரிமை சார் பிரச்சினைகள் என்றும் எல்லைநிர்ணய ஆணைக்குழு என்றும் மயிரிழையில் தொங்கிகொண்டுள்ளது. 

இந்த அரசின் போக்கு இனவாதமான போக்காக உள்ளதை தெரிந்து கொண்டு வட-கிழக்குக்கு வெளியே வாழும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் உயர்பீட  முக்கியஸ்தர்கள் கிழக்கிலுள்ள முஸ்லிங்கள் எதை இழந்தாலும் பரவாயில்லை வாக்கு அரசியல்  தான் முக்கியம் என்பதை கிழக்கு முஸ்லிம்களுக்கு இன்று அறுதியும், உறுதியாக எடுத்துரைத்துள்ளார்கள். 

எனவே கிழக்கு மாகாணத்தை சேர்ந்த சகல கட்சி எம்.பிக்களிடமும் நாங்கள் கேட்பது இனவாத அரசிடம் மோதிக் கொள்ளாமல் தந்திரோபாய வியூகங்களை கையாண்டு பறிபோகும் நிலையிலுள்ள முஸ்லிம் மக்களின் உரிமைகளை பெற்றுத்தர வேண்டும் என்பதே...

கல்முனை அனைத்து பொது நிறுவனங்களின் சம்மேளனம்

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.