பொது பல சேனா அமைப்பால் அனுப்பப்பட்ட திறந்த மடலுக்கான அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பதில்!

பொது பல சேனா அமைப்பால் அனுப்பப்பட்ட திறந்த மடலுக்கான அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பதில்!

14.10.2021


பொது பல சேனா அமைப்புக்கு,

தங்களால் அனுப்பப்பட்ட திறந்த மடல் தொடர்பாக

மேற்குறித்த தங்களது கடிதம் கிடைக்கப்பெற்றது. அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தற்போதைய பொதுச் செயலாளர் அஷ்ஷைக் எம். அர்கம் நூராமித் அவர்கள் மலாய் இனத்தைச் சேர்ந்தவர் என்பதற்காக மலாய் முஸ்லிம்கள் செய்த சேவைகளை நினைவுகூர்ந்த வண்ணம் கடிதத்தை ஆரம்பித்திருந்தீர்கள். எமது முன்னோர்களின் சேவைகளை நினைவு கூர்ந்தமைக்கு மனமார்ந்த நன்றிகளை முதலில் தெரிவித்துக் கொள்கின்றோம்.


இந்நாட்டு முஸ்லிம்கள் நம் தாய்; நாட்டுக்காக பாரிய பங்களிப்புக்களையும் தியாகங்களையும் செய்து வந்துள்ளனர். நம் நாட்டின் ஒருமைப்பாட்டுக்கும், பாதுகாப்புக்கும் அளவிலா பங்களிப்புக்களைச் செய்துள்ளனர். அவ்வாறே நம் நாட்டுடைய நலவுகளை உலகுக்கு அறிமுகப்படுத்தி வெளிநாட்டு உறவைக் கட்டியெழுப்புவதற்கும் முன்னின்று செயற்பட்டுள்ளனர். இந்நாட்டை அந்நியவர்கள் ஆக்கிரமிக்க முயற்சித்தபோதெல்லாம் அக்காலத்தில் நம்நாட்டை ஆட்சி செய்த உள்நாட்டு அரசர்களுக்கு ஒத்துழைப்பாக இருந்து வந்துள்ளனர். சுதந்திரத்தைப் பெற்று ஜனநாயக முறையில் பன்முக இலங்கைத் தேசமொன்றை கட்டியெழுப்புவதற்கு இன, மத பேதமின்றி அனைத்து தலைவர்களுடன் இணைந்து பாடுபட்டுள்ளனர். கடந்த காலத்திலும் தற்போதும் நம்நாட்டின் இறைமையை பாதுகாப்பதும் நம் நாட்டை அபிவிருத்தியின் பால் இட்டுச் செல்வதுமே நம் நாட்டு முஸ்லிம்களது இலக்காக காணப்பட்டு வருகின்றது என்ற விடயத்தையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். இந்த அனைத்து பங்களிப்புகளுக்கும் பின்னால் எமது தூய்மையான இஸ்லாம் மார்க்கமும் எமது மார்க்க அறிஞர்களின் வழிகாட்டல்களுமே காரணமாக அமைந்துள்ளன.

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிலைப்பாடு:

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தேசியம், நடுநிலை, இணக்கப்பாடு, பன்மைத்துவம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு ஒரு நூற்றாண்டை அண்மித்த நிலையில் இயங்கிவரும் ஒரு நிறுவனமாகும். அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் யாப்பு 'அஹ்லுஸ் ஸுன்னா வல் ஜமாஅத்' கோட்பாட்டைச் சேர்ந்த, இந்நாட்டின் யாப்பையும் சட்டத்தையும் ஜனநாயக விழுமியங்களையும் மதித்து செயற்படும் அனைத்து ஆலிம்களுக்கும் அங்கத்துவம் வழங்க அனுமதிக்கின்றது. 'அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத்' கோட்பாடு என்பது, இஸ்லாத்தின் அடிப்படை மூலாதாரங்களான அல்குர்ஆன், அல்ஹதீஸ், அல்இஜ்மாஉ, அல்கியாஸ் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு அவைகளை எமது முன்னோர்களான சஹாபிகள், தாபிஃகள், இமாம்கள் ஆகியோர் விளங்கிக்கொண்ட அடிப்படையின் பிரகாரம் விளங்கிச் செயலாற்றுதலாகும்.


எனவே, ஜம்இய்யாவில் தனது அங்கத்துவத்தைப் பெற்றுக் கொண்ட அனைவருடனும் ஒன்றிணைந்து, எவ்வித பாகுபாடுமின்றி, தனது யாப்பின் அடிப்படையில் ஜம்இய்யா பயணிக்கிறது என்பதை பொறுப்புடன் கூறிக்கொள்கின்றோம்.


கலகொட அத்தே ஞானசார தேரர் அவர்கள் பல சந்தர்ப்பங்களில் தீவிரவாதம், வஹ்ஹாபிஸம் பற்றி பேசியுள்ள அதேநேரம், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவிடம் அது குறித்துக் கேட்டுள்ளார். இச்சந்தர்ப்பத்தில் குறித்த தேரர் வஹ்ஹாபிஸம் என்பதன் மூலம் எதை நாடுகின்றார்? அதன் வரைவிலக்கணம் என்ன? என்று அவரிடம் ஆரம்பமாக கேட்டுக்கொள்ள விரும்புகின்றோம்.


அகிலத்தாருக்கு ரஹ்மத்தாக அனுப்பப்பட்ட, எங்களுடைய உயிரினும் மேலான இறுதித் தூதர் நபிகள் நாயகம் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கண்ணியத்திற்கு பங்கம் விளைவிக்கும் வகையில் நடத்தல், முஸ்லிம் உம்மத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஹதீஸ்களை மறுத்தல், ஸஹாபாக்கள் விடயத்தில் அவமரியாதையாக நடந்துகொள்ளல், இமாம்கள் மற்றும் மார்க்க அறிஞர்களை அவமதித்தல், அவர்களின் வழிகாட்டல்களைப் புறக்கணித்தல், மத்ஹப்களைப் புறக்கணிப்பதோடு அவற்றைப் பின்பற்றுவதை வழிகேடாகக் கருதுதல், தமது கருத்துக்கு முரண்படுவோரை ஏற்க மறுத்து அவர்களை வழிகேடர்கள் எனக் கருதி அவர்களின் உரிமைகளை மறுத்தல், நாட்டின் இறைமை, ஒருமைப்பாடு, அமைதி ஆகியவற்றுக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் நடந்துகொள்ளல், அதற்குப் பிறரைத் தூண்டுதல், பிற மதங்களை நிந்தித்தல், முஸ்லிம்கள் இஸ்லாமிய ஆட்சிக்கு கீழ் மட்டுமே வாழ வேண்டும் அல்லது ஒரு இஸ்லாமிய ஆட்சியை நிலைநாட்டுவதே இஸ்லாத்தின் அடிப்படை என்ற கொள்கையை கொண்டிருத்தல், முஸ்லிம்கள் முஸ்லிம்களுடன் மாத்திரமே நல்லுறவு கொள்ள வேண்டும் என்பதுடன் முஸ்லிமல்லாதவர்களுடன் நல்லுறவு கொள்ளக்கூடாது என்ற சிந்தனையை கொண்டிருத்தல் போன்றவற்றை மதத்தின் பெயரால் தீவிரவாதம் எனக் கருதுகிறோம். இது வஹ்ஹாபிஸம் என்ற பெயரிலோ அல்லது வேறெந்தப் பெயர்களிலோ அழைக்கப்பட்டாலும் அவையனைத்தையும் ஜம்இய்யா முற்று முழுதாக நிராகரிக்கின்றது.


இவ்விடயங்களில் ஜம்இய்யாவின் நிலைப்பாட்டிற்கு மாற்றமாக தீவிரமாக செயற்படக்கூடியவர்களை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா ஒருபோதும் அங்கீகரிப்பதில்லை. அப்படியான தீவிரமான சிந்தனைகளைக் கொண்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் அச்சிந்தனைகளிலிருந்து தம்மை மீட்டிக்கொள்ள வேண்டும். இது தொடர்பாக ஜம்இய்யாவினால் வெளியிடப்பட்டிருக்கும் 'மதத்தின் பெயரால் தீவிரவாதம் வேண்டாம்' என்ற கைநூலை வாசிப்பதுடன், முஸ்லிம்கள் அச்சிந்தனைகளின் பக்கம் ஈர்க்கப்படாது பாதுகாப்பதற்கு ஆலிம்கள், கல்விமான்கள், சிவில் அமைப்புக்கள் உட்பட ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகம் ஓரணியில் திரண்டு செயற்பட வேண்டும் என்று இதில் ஜம்இய்யா வேண்டுகோள் விடுத்துள்ளது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இஸ்லாமும் மனிதநேயமும்:

இஸ்லாம் மனிதனின் ஈருலக வாழ்வையும் மேம்படுத்த அருளப்பட்ட புனிதமான மார்க்கமாகும். இஸ்லாத்தின் அடிப்படை நோக்கங்களாக மார்க்கத்தை பாதுகாத்தல், மனித உயிரைப் பாதுகாத்தல், அறிவு மற்றும் சிந்தனையை பாதுகாத்தல், பரம்பரையை பாதுகாத்தல், பொருளாதாரத்தை பாதுகாத்தல் போன்றன காணப்படுகின்றன.

இஸ்லாம் மனிதநேயத்தையும் சகவாழ்வையும் போதிக்கும் மார்க்கமாகும். அது ஒரு போதும் மத நிந்தனையை ஊக்குவிக்கவோ, அங்கீகரிக்கவோ இல்லை. இதனைப் பின்வரும் வசனங்கள் வலியுறுத்துகின்றன.


'உங்களுக்கு உங்களது மார்க்கம். எனக்கு என்னுடைய மார்க்கம்'. (109:6)

'நீங்கள் நீதமாக நடந்துகொள்வதை அல்லாஹ் உங்களுக்கு தடுக்கவில்லை. நிச்சயமாக அல்லாஹ் நீதியாளர்களை நேசிக்கின்றான்'. (60:8)

அத்துடன், அல்லாஹுதஆலாவின் அன்பு, கருணை, அருள் பற்றி அல்குர்ஆன் பின்வருமாறு குறிப்பிடுகின்றது.


'என்னுடைய அருட்கொடை அனைத்து பொருட்களிலும் சூழ்ந்துள்ளது'. (7:156)

'என் அடியார்களே! அல்லாஹ்வின் அருளிலிருந்து நிராசையாகிவிட வேண்டாம். நிச்சயமாக, அல்லாஹ் அனைத்து பாவங்களையும் மன்னித்து விடுவான். நிச்சயமாக, அவன் தான் மிக்க மன்னிக்கிறவன்'. (39:53)

அல்குர்ஆனில் அல்லாஹ்வின் அன்பு, கருணை பற்றி நிறையவே குறிப்பிடப் பட்டிருப்பினும், உங்களது அமைப்பின் பொதுச் செயலாளரான கலகொட அத்தே ஞானசார தேரர் அவர்கள் அல்லாஹ்வுக்கும் அல்குர்ஆனுக்கும் பல சந்தர்ப்பங்களில் அகௌரவப்படுத்தும் வார்த்தைகளை பயண்படுத்தியுள்ளார். அத்துடன் அவர் அல்குர்ஆனுக்கு பல சந்தர்ப்பங்களில் பிழையாக விளக்கம் கொடுக்க முயற்சித்துள்ளமையானது உலக வாழ் முஸ்லிம்களைப் பொதுவாகவும் இலங்கை வாழ் முஸ்லிம்களை குறிப்பாகவும்; நோவினை அடையச் செய்துள்ளது. இது மத நிந்தனையாக அமைந்திருப்பதோடு, நம் நாட்டின் யாப்பு உத்தரவாதப்படுத்தியிருக்கும் மதச் சுதந்திரத்தை பாதிப்பதாகவும் அமைந்துள்ளது. மேலும் இச்செயற்பாடு மதகுரு ஒருவருக்கு ஒருபோதும் பொருந்தாத செயற்பாடாகவே பார்க்கப்படுகின்றது. இச்செயற்பாடுகள் நம் தாய்நாடு பற்றிய ஒரு பிழையான விம்பத்தை சர்வதேச மட்டத்தில் ஏற்படுத்துவதோடு, பல்லினங்களுக்கு மத்தியில் காணப்படும் சகவாழ்வை பாதிப்பதாகவும் அமைந்துள்ளது.

அல்குர்ஆனை விளங்குதல்:

உலக வாழ் மக்களில் சுமார் இருநூறு கோடிக்கும் மேற்பட்டோர் அல்லாஹுதஆலாவை, படைத்துப் பரிபாலித்துப் போசிக்கும் இரட்சகனாகவும், அகிலத்தாருக்கு அருட் கொடையாக அருளப்பட்ட நபிகள் நாயகம் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை இறுதித்தூதர் என்றும் அல்குர்ஆன் நபிகள் நாயகம் முஹம்மது ஸல்லல்லாஹு அiஹி வஸல்லம் அவர்களுக்கு 23 வருட காலப்பகுதியில் தேவைக்கேற்ப கட்டம் கட்டமாக அல்லாஹ்வினால் அருளப்பட்ட இறுதி வேதம் என்றும் அது ஈருலக வெற்றிக்கும் வழிகாட்டும் புனித வேதநூலாகும் என்றும் ஏற்றுள்ளனர் என்பது உங்களுக்கும் தெரிந்த விடயமாகும்.


உலகில் பல வேதங்கள் உள்ளன. அவை ஒவ்வொன்றும் பல மொழிகளில் அருளப்பட்டுள்ளன. அந்த ஒவ்வொரு மத நூல்களுக்கும் அதற்கென்ற குறிப்பான விளக்கங்களும் அதனை எவ்வாறு விளங்கிக்கொள்ள வேண்டுமென்ற வழிகாட்டல்களும் இருக்கின்றன என்பது உலகறிந்த உண்மையாகும்.
உதாரணமாக, உலகத்தின் அறிவியலாளர்களாக, அறிஞர்களாக, மேதைகளாக கருதப்படக்கூடியவர்களின் வார்த்தைகளுக்குக் கூட பல விரிவுரைகளும் விளக்கங்களும் தேவைப்படுவதை குறிப்பிடலாம். எனினும், விரிவஞ்சி உதாரணங்களை தவிர்த்துள்ளோம்.

அவ்வாறே, புனிதமிகு அல்குர்ஆனை மொழிபெயர்ப்பின் ஊடாக அரைகுறையாக வாசித்துவிட்டு, ஒவ்வொரு வசனமும் அவை இறக்கப்பட்ட பின்னணி, எங்களுடைய உயிரினும் மேலான நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவற்றிற்கு கூறிய விளக்கங்கள், நபித்தோழர்கள் அவற்றை அணுகிய முறை, சுமார் ஆயிரத்து நானூறு வருடங்களுக்கு மேலாக அல்குர்ஆன் விரிவுரையாளர்களும் இஸ்லாமிய மார்க்க அறிஞர்களும் அதற்கு வழங்கியிருக்கும் வியாக்கியானங்கள், அல்குர்ஆனை விளங்குவதற்கு தேவையான ஏனைய கலைகள் என்பனவற்றைப் புறந்தள்ளிவிட்டு தன்னிச்சையாக அதனை விளங்க முற்பட்டதே தவறான புரிதல்களுக்கும் விளக்கங்களுக்கும் அடிப்படைக் காரணமாகும் என நம்புகின்றோம்.

எந்த விடயத்தையும் அதை நன்கறிந்த துறைசார்ந்தவர்களிடம் கேட்டுத் தெளிவு பெறவேண்டுமென்பதே அல்குர்ஆனின் போதனையாகும். 'நீங்கள் அதனைப் பற்றி அறியாதவர்களாக இருந்தால் அறிந்தவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்' (16: 43) என அது முழு உலகுக்கும் வழிகாட்டுகின்றது.


அந்த வகையில் அல்குர்ஆன் வசனங்களை விளங்கும் முறைகள் பற்றி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வெளியிட்டுள்ள அல்குர்ஆனின் சிங்கள விளக்கவுரையில் பின்வரும் இரண்டு தலைப்பில் விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. (அது இக்கடிதத்துடன் இணைக்கப்பட்டுள்ளது).

1. அல்குர்ஆனுக்கான அறிமுகம். XIX - (https://cutt.ly/JRtj0Gf)

2. அல்குர்ஆன் விளக்கவுரையின் அறிமுகம். LIV - (https://cutt.ly/ARtkwPg)

அல்குர்ஆனின் சில வசனங்கள் மற்றைய சில வசனங்களுக்கு விளக்கமாக அமைகின்றன. அதே போல் எங்களுடைய உயிரினும் மேலான நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஹதீஸ்களும் அல்குர்ஆனுக்கு விளக்கமாகும். அல்குர்ஆனில் விரிவாகச் சொல்லப்படாத விடயங்கள் ஹதீஸ்களின் மூலமே விளக்கிங்கொள்ளல் வேண்டும்.

உதாரணமாக: தொழுகை, நோன்பு, ஸகாத், ஹஜ் ஆகிய அதிமுக்கியமான கடமைகளை நிறைவேற்றுமாறு கட்டளையிட்டுள்ள அல்குர்ஆன், அவற்றை எவ்வாறு நிறைவேற்ற வேண்டும் என்ற முழுமையான முறையையோ விரிவான விளக்கங்களையோ அவற்றுடன் தொடர்புபடும் உட்பிரிவு சட்டங்கள் பற்றியோ முழுமையாக குறிப்பிடவில்லை. மாறாக, அவற்றை 'அல்ஹதீஸ், அல்இஜ்மாஉ, அல்கியாஸ்' ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு அவைகளை எமது முன்னோர்களான ஸஹாபாக்கள், தாபிஃகள், இமாம்கள் ஆகியோர் விளங்கிக்கொண்ட அடிப்படையின் பிரகாரமே விளங்கிக் கொள்ள வேண்டும்.


எனவே, மேற்படி விடயங்களை கவனத்திற்கொண்டு செயற்படுமாறு அன்புடன் வேண்டிக் கொள்கின்றோம்.

ஊடகப் பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.