ஜனநாயக முறையில் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும்! -ஜனாதிபதி

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஜனநாயக முறையில் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும்! -ஜனாதிபதி


வரலாற்றில் எந்தவொரு காலத்திலும், சர்வாதிகாரம் அல்லது ஏகாதிபத்திய அரசாங்கமொன்று உருவாகாத பழமைவாய்ந்த வலய நாடாகவும் ஜனநாயக நாடாகவும் விளங்குகின்ற இலங்கைக்குள், ஜனநாயக விதிமுறைகளுக்கமைய பிரச்சினைகளுக்குத் தீர்வுகள் பெற்றுக்கொடுக்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். 


 இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகளை, மிரிஹான பகுதியில் அமைந்துள்ள தனது இல்லத்தில் இன்று (04) முற்பகல் சந்தித்து உரையாற்றும் போதே, ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.


ஐரோப்பிய ஒன்றியத்தின் GSP+ மரபுகளுடன் ஏற்கெனவே ஒப்புக்கொள்ளப்பட்ட இலங்கையின் இணக்கம், இலங்கையுடன் இணைந்துப் பணியாற்றுதல் மற்றும் இலங்கை தொடர்பில் ஐரோப்பிய பாராளுமன்றம் கொண்டிருக்கும் எண்ணப்பாடு போன்ற விடயங்களை, இந்த விஜயத்தின் போது, மேற்படி பிரதிநிதிகள் ஆராய எதிர்பார்த்திருக்கின்றனர். 


பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் தொடர்பில் விசேட அவதானம் செலுத்திய ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள், காலத்தை முன்னிலைப்படுத்திய தீர்வொன்றின் தேவை தொடர்பில் வலியுறுத்தினர். 


இந்த விஜயத்தின் போது தாம் ஆராய்ந்த விடயங்களை அடிப்படையாகக் கொண்டு, ஐரோப்பிய ஆணைக்குழு மற்றும் ஐரோப்பிய பாராளுமன்றம் ஆகியவற்றுக்கு அறிக்கையொன்றைத் தயாரித்து வழங்கவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.


தேவையான குழுக்களை நியமித்து, அவற்றின் அறிக்கைகளுக்கமைய, நீதி அமைச்சர் மற்றும் சட்ட மா அதிபர் ஆகியோருக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தில் காணப்படும் திருத்தப்பட வேண்டிய உறுப்புரைகளைத் திருத்த உடன் நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும், ஜனாதிபதி  இதன்போது தெரிவித்தார். 


அதேவேளை, தற்போதைய உலகின் மனித உரிமைகள் தொடர்பில் காணப்படும் இணக்கப்பாடுகளுக்கு ஏற்ப நடவடிக்கைகள் எடுக்கப்படுமென்றும், ஜனாதிபதி தெரிவித்தார். 


கொவிட் தொற்றுப் பரவல் காரணமாக நாட்டின் பொருளாதாரத்துக்கு ஏற்பட்டுள்ள சவால்கள் மற்றும் அதனால் அரசாங்கத்தின் திட்டமிடல்களை மேற்கொள்வதில் ஏற்பட்ட தடைகள் பற்றியும், ஜனாதிபதி எடுத்துரைத்தார்.


இருப்பினும், நாட்டில் நிலவிய நீண்டகால யுத்தம் காரணமாக ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் பலவற்றுக்குத் தீர்வு பெற்றுக்கொடுக்கவும் வடக்கு – கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தியைப் போன்றே, ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்காக அரசாங்கம் முன்னெடுத்த நடவடிக்கைகள் தொடர்பிலும், ஜனாதிபதி தெளிவுபடுத்தினார்.

 

விசேடமாக, காணாமற்போனோரது குடும்பங்களுக்கு உதவிகளை வழங்கவும் காணாமற்போனோருக்கு நட்டஈடு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் எடுத்துரைத்தார். 


நாட்டின் உள்ளகப் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வதற்கும் நாட்டை முன்னோக்கிக் கொண்டுசெல்வதற்கும், தமிழ் அரசியல் கட்சிகள், புலம்பெயர்ந்த தமிழர்கள் மற்றும் சர்வதேச நாடுகளின் அனைத்துத் தரப்பினருடனும் இணைந்துப் பணியாற்றுவதன் தேவை தொடர்பில், ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தொடரில் உரையாற்றும் போது தான் தெளிவுபடுத்தியதாகவும், ஜனாதிபதி எடுத்துரைத்தார். 


சிவில் அமைப்புகளுடன் பரஸ்பர புரிதலுடன் பணியாற்றுவதோடு, நாட்டின் நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்தி ஆகியவற்றுக்கு அவற்றின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்வதாகவும் ஜனாதிபதி எடுத்துரைத்தார். 


கடந்த இரண்டு வருடக் காலப்பகுதியில் நடத்தப்பட்ட எதிர்ப்புப் போராட்டங்களுக்கு, ஒருபோதும் தடியடிப் பிரயோகமோ தண்ணீர்த் தாரைப் பிரயோகமோ அல்லது கண்ணீர்ப்புகைத் தாக்குதலோ நடத்த வேண்டாமென்று தான் ஆலோசனை வழங்கியிருந்ததாகவும் போராட்டக்காரர்களுக்கென்றே, ஜனாதிபதி அலுவலகத்துக்கு முன்னால் தனியிடம் ஒன்று ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். 


இந்த அரசாங்கம், ஜனநாயக ரீதியில் செயற்பட்டாலும், அவை தொடர்பில் அவதானம் செலுத்தப்படுவதில்லை என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, ஒரு சிறிய சம்பவத்தின் அடிப்படையில் பல்வேறு தரப்பினர் தவறான கருத்துக்களை உருவாக்குவது துரதிர்ஷ்டவசமானது என்றும் குறிப்பிட்டார். 


அரச மற்றும் தனியார்த் துறையினருடன் இணைந்துப் பணியாற்றவும் தனியார் துறையை மேம்படுத்தி நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்கச் செய்யவும், அபிவிருத்தியடைந்த நாடுகளின் தொழில்நுட்ப உத்திகளை, தரமான பொதுச் சேவைக்காகப் பயன்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், ஜனாதிபதி எடுத்துரைத்தார். 


இந்நாட்டின் முக்கிய வாழ்வாதாரமாகக் காணப்படும் விவசாயத்துறையின் அபிவிருத்திக்கான தொழில்நுட்ப மற்றும் பயிற்சி உதவிகளைப் பெற்றுக்கொள்வதன் ஊடாக, நாட்டின் பொருளாதார வளர்ச்சியை அடைவதற்குள்ள வாய்ப்புகள் தொடர்பிலும், ஜனாதிபதி தெளிவுபடுத்தப்பட்டது. 


நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கான அரசாங்கத்தின் திட்டமிடல்கள் தொடர்பில் தெளிவுபடுத்திய ஜனாதிபதிக்கு, ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள், தங்களுடைய வாழ்த்துகளையும் நன்றியையும் தெரிவித்துக்கொண்டனர்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.