களனிப் பல்கலைக்கழகத்தின் வேந்தர், பேராசிரியர் குசலதம்ம நாயக்க தேரரின் மறைவுக்கு சர்வ மதத்தலைவர்கள் விடுத்துள்ள அனுதாபச் செய்தி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

களனிப் பல்கலைக்கழகத்தின் வேந்தர், பேராசிரியர் குசலதம்ம நாயக்க தேரரின் மறைவுக்கு சர்வ மதத்தலைவர்கள் விடுத்துள்ள அனுதாபச் செய்தி!


இலங்கைத் தாய்த் திருநாட்டின் இன, மத ஒற்றுமைக்காக அர்ப்பணிப்போடு உழைத்து வந்த களனிப் பல்கலைக் கழகத்தின் வேந்தரும், கொழும்பு - சிலாபம் பிரிவுக்கான பிரதான சங்க நாயக்கருமான அதி கெளரவத்திற்குரிய பேராசிரியர் வெலமிட்டியாவே குசல தம்ம மகா நாயக்க தேரரின் திடீர் மறைவு, மிகுந்த கவலைக்கும் வேதனைக்குரியதுமாகும் என, புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சரான பிரதமரின் மத விவகாரங்களுக்குப் பொறுப்பான இணைப்பாளர்களான சர்வமதத் தலைவர்கள் கலாநிதி கஸ்ஸப நாயக்க தேரர், கலாநிதி சிவஸ்ரீ பாபு சர்மா குருக்கள், அல் - ஹாஜ், அஸ் - ஸெய்யிது கலாநிதி ஹஸன் மௌலானா (அல் காதிரி) மற்றும் அருட் தந்தை கலாநிதி சிக்ஸ்டஸ் குருகுல சூரிய ஆகியோர் கூட்டாக விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளனர்.


இன, மத ஒற்றுமைக்காக உழைத்து வரும் குறித்த  சர்வமதத் தலைவர்கள் விடுத்துள்ள அந்த அனுதாபச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,


அதி வணக்கத்திற்குரிய மறைந்த குசல தம்ம மகா நாயக்க தேரர், இலங்கையில் மாத்திரமல்லாமல் உலக மக்கள் மத்தியிலும் சாந்தி, சமாதானத்தை நிலை நிறுத்துவதற்காக மிகவும் பொறுப்புடன், தம் செயற்பாடுகளை மிகுந்த ஒத்துழைப்புக்களோடு முன்னெடுத்துள்ளார்.


களனிப் பல்கலைக் கழகத்தில் வேந்தராக இருந்து சேவையாற்றிய கால கட்டத்தில், தம்முடன் சேவையாற்றிய பேராசிரியர்கள், கலாநிதிகள் மற்றும் பட்டப்படிப்பு மாணவ, மாணவிகளுடன் மிக அன்பாகவும் பண்பாகவும் நெருங்கி பணியாற்றிய மகா நாயக்க தேரர், இன மத மற்றும் தேசிய ஒற்றுமைக்கு உச்ச மதிப்பையும், கௌரவத்தையும் வழங்கிச் செயற்பட்டார். அவரது கௌரவமான செயற்பாடுகளின் ஊடாக, புத்தர் பெருமானின் உயரிய பண்புகளைக் காணக்கூடியதாக இருந்தது.


இலங்கையின் முக்கியத்துவம் மிக்க தேரர்களில் ஒருவராக இருந்து சேவையாற்றி வந்த மகா நாயக்க தேரர், இந்நாட்டில் இன, மத ஒற்றுமையைப் பாதிக்கக்கூடிய பிரச்சினைகள் உருவான சந்தர்ப்பங்களிலெல்லாம் முன்நிலை வகித்து இன, மத ஒற்றுமையைப் பாதுகாக்கவும், இனங்களுக்கிடையில் சகோதரத்துவத்தை மேம்படுத்தவும் கௌரவமான பல்வேறு சேவைகளை முன்னெடுத்துள்ளார்.


அதி வண. குசல தம்ம மகா நாயக்க தேரர் போன்று நாட்டுக்கும், மக்களுக்கும் அளப்பரிய சேவைகள் ஆற்றக்கூடிய உயரிய பண்புகள் கொண்ட தேரர்கள், ஆயிரக்கணக்கில் நாட்டில் உருவாக வேண்டும் என்றும் நாம் பிரார்த்திக்கின்றோம். அவரது மறைவு இலங்கை மக்களுக்கு மாத்திரமல்லாமல், உலகில் அமைதி, சமாதானத்தை விரும்பும் சகல இன, மத மக்களுக்கும் பாரிய இழப்பும், மிகுந்த சோகமும் நிறைந்த நிகழ்வாகும் என்றும், அவர்கள் அந்த அனுதாபச் செய்தியில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர்.


ஐ.ஏ.காதிர் கான்


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.