திரவ நனோ நைட்ரஜன் உரம் குறித்து பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் கூட்டிணைந்த சம்மேளனம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

திரவ நனோ நைட்ரஜன் உரம் குறித்து பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் கூட்டிணைந்த சம்மேளனம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!


இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள திரவ நனோ நைட்ரஜன் உரம் என்பது இரசாயன உரமேயன்றி சேதன உரம் அல்ல என்று சுட்டிக்காட்டியுள்ள பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் கூட்டிணைந்த சம்மேளனம், நனோ நைட்ரஜன் உரத்தின் ஊடாக யூரியாவின் பயன்பாட்டை நூற்றுக்கு 50 சதவீதமாக குறைக்கமுடியுமே தவிர, அது யூரியாவிற்கான முழுமையான மாற்றீடாக அமையாது என்றும் தெரிவித்துள்ளது.


அதுமாத்திரமன்றி இலங்கையில் தற்போது நடைமுறையிலுள்ள தரநியமங்களின் பிரகாரம், சேதனமுறையிலான விவசாயத்தில் நனோ உரத்தைப் பயன்படுத்துவதற்கு அனுமதி இல்லை என்றும் அச்சம்மேளனம் தெரிவித்துள்ளது.


இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள திரவ நனோ நைட்ரஜன் உரம் தொடர்பில் பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் கூட்டிணைந்த சம்மேளனத்தின் விவசாயம் தொடர்பான செயற்பாட்டுக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. 


அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது,


இந்தியாவின் 'இந்தியன் ஃபார்மர்ஸ் ஃபேர்ட்டிலைஸர் கோப்பரேட்டிவ் லிமிடெட்' என்ற நிறுவனத்திடமிருந்து 3.1 மில்லியன் லீற்றர் திரவ நனோ நைட்ரஜன் உரத்தை இறக்குமதி செய்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. அதன் முதற்தொகுதி திரவ நனோ நைட்ரஜன் உரம் விமானம் ஊடாகக் கடந்த 19 ஆம் திகதி நாட்டை வந்தடைந்தன.


ஊடகங்கள் வாயிலாக இதுகுறித்த பல்வேறு செய்திகள் வெளியாகிவருகின்ற சூழ்நிலையில், இந்த உரம் தொடர்பில் விஞ்ஞானபூர்வ அடிப்படையிலான தெளிவுபடுத்தல்களைச் செய்வதற்கும் எமது நிலைப்பாட்டை வெளியிடுவதற்கும் விரும்புகின்றோம்.


மேற்படி இந்திய நிறுவனத்தினால் உற்பத்தி செய்யப்படுகின்ற இந்த நனோ நைட்ரஜன் உரம், யூரியாவை உள்ளடக்கியதோர் சேர்மானமாகும். நனோ அளவிலான துணிக்கைகளின் உருவாக்கத்திற்காக மேலெழுந்தவாரியாக யூரியா சேர்க்கப்பட்ட இந்த நனோ நைட்ரஜன் உரம் பாரம்பரிய யூரியா உரத்திலிருந்து பெரிதும் மாறுபட்டதாகும்.


எனவே இது விசேடமாக உற்பத்தி செய்யப்படுகின்ற இரசாயன உரமேயன்றி, சேதன உரமல்ல. இந்த திரவ உரத்தை பயிர்கள்மீது தெளிக்கும்போது அடங்கியிருக்கவேண்டிய நைட்ரஜன் அளவாகப் பரிந்துரைக்கப்பட்டிருப்பது 4 சதவீதமாகும். 


அண்மைக்காலத்திலேயே இந்த உரம் தொடர்பான பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டதுடன் இதனை வணிகரீதியிலான தேவைகளுக்காக மிகப்பாரியளவில் உற்பத்தி செய்வதற்கு இந்திய விவசாயத் திணைக்களத்தினால் கடந்த மார்ச் மாதத்திலேயே அனுமதியளிக்கப்பட்டது. 


எது எவ்வாறெனினும் இலங்கையில் தற்போது நடைமுறையிலுள்ள தரநியமங்களின் பிரகாரம், சேதனமுறையிலான விவசாயத்தில் நனோ உரத்தைப் பயன்படுத்துவதற்கு அனுமதி இல்லை.


விவசாயத்துறை அமைச்சின் அதிகாரிகளால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையின் பிரகாரம், ஒரு ஹெக்டேயர் நிலப்பரப்பில் பயிரிடப்படும் நெற்பயிருக்கு ஒருதடவைக்கு 2.5 லீற்றர் என்ற அளவில் மேற்படி திரவ உரத்தைப் பயன்படுத்தவேண்டும். அதுமாத்திரமன்றி விளைச்சல்காலத்தில் மூன்று தடவைகள் இந்தத் திரவ உரம் தெளிக்கப்பட வேண்டும். 


அதன்படி ஒரு ஹெக்டேயர் நிலப்பரப்பிற்குத் தேவையான திரவ உரத்தின் அளவு 7.5 லீற்றர் ஆகும். எனவே இந்த நனோ நைட்ரஜன் உரம் மூலம் ஒரு ஹெக்டேயர் நிலப்பரப்பில் வெறுமனே 300 கிராம் என்ற மிகக் குறைந்தளவிலான நைட்ரஜன் மாத்திரமே உட்செலுத்தப்படுகின்றது. பொதுவாக ஒரு ஹெக்டேயர் நிலப்பரப்பில் 4 - 5 டொன் அளவிலான நெல் விளைச்சலைப் பெறக்கூடிய நிலையில், அதற்கென சுமார் 105 கிலோகிராம் நைட்ரஜன் உரத்தைப் பயன்படுத்தவேண்டியிருக்கும். 


இந்தக் கணிப்பீட்டின் பிரகாரம், நெற்பயிர்ச்செய்கைக்கு அவசியமான நைட்ரஜனை திரவ நனோ நைட்ரஜன் உரத்தின் மூலம் மாத்திரம் வழங்குவதாக இருந்தால், ஒரு ஹெக்டேயர் நிலப்பரப்பிற்கு 1,250 லீற்றர் நனோ நைட்ரஜன் உரத்தைப் பயன்படுத்த வேண்டும். எனவே இது நடைமுறைச் சாத்தியமற்ற விடயம் என்பது தெளிவாகியுள்ளது.


அதேவேளை திரவ நனோ நைட்ரஜன் உரம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனை முடிவுகளின்படி, இந்த உரப்பயன்பாட்டின் ஊடாக யூரியாவின் பயன்பாட்டை நூற்றுக்கு 50 சதவீதமாகக் குறைக்கமுடியுமே தவிர, யூரியாவிற்கான பூரண மாற்றீடாக இந்த நனோ நைட்ரஜன் உரம் பெயரிடப்படவில்லை. அத்தோடு பாரம்பரிய யூரியா உரத்துடன் ஒப்பிடுகையில் நனோ நைட்ரஜன் உரத்தின் விலையும் குறித்தளவு அதிகமாகும். 


அதுமாத்திரமன்றி வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்துவகையான உரங்களும் இலங்கையின் ஆய்வுகூடப்பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, அவற்றில் தீங்கேற்படுத்தக்கூடிய கூறுகள் உள்ளடங்கவில்லை என்பது உறுதிப்படுத்தப்படவேண்டும். 


இருப்பினும் இந்த நனோ நைட்ரஜன் உர இறக்குமதியின்போது அத்தகைய உரிய வழிகாட்டல்கள் பின்பற்றப்படவில்லை என்று அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


-நா.தனுஜா


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.