மாகாணசபை மற்றும் உள்ளூராட்சி தேர்தலிலும் தங்களது இருப்பை தக்கவைத்துக்கொள்வதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் பாவிக்கும் ஒரே ஆயுதம் மண் என இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.
மட்டு ஊடக மையத்தில் இன்று (13) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் இதன்போது தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
கடைசியாக இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின்போது எமது மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் அவர்கள் மண் அனுமதிப்பத்திரம் தொடர்பில் ஒரு கருத்தை தெரிவித்திருக்கின்றார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சிவனேசதுரை சந்திரகாந்தான் அவர்களது கட்சி சார்ந்தவர்கள் அதற்கான விளக்கத்தை அளித்திருக்கின்றார்கள். அதேபோல் மாவட்ட அமைப்பாளர் சந்திரகுமார் சார்ந்தோரும் அதற்கான விளக்கத்தினை அளித்திருக்கின்றார்கள் அந்த வகையில் எனது விளக்கத்தையும் நான் வழங்க வேண்டிய கடைப்பாட்டில் இருக்கின்றேன்.
சாணக்கியன் அவர்கள் உண்மைக்குப் புறம்பான ஒரு செய்தியை உயரிய சபையான நாடாளுமன்றத்தில் தெரிவித்திருக்கின்றார். என்னுடைய சகேதரர் சதாசிவம் மயூரனின் பெயரிலும் மண் அனுமதிப்பத்திரம் இருப்பதாக அவர் இதன்போது கூறியிருக்கின்றார்.
அதேவேளை இதன்போது பசில் ராஜபக்ஷ அவர்களை விழித்து அவர் இதனை பேசியிருக்கின்றார்.
இதனுடைய நோக்கம் என்ன உண்மைக்கு புறம்பான ஒரு செய்தியை நாடாளுமன்றத்தில் பசில் ராஜபக்ஷ அவர்களை விழித்து கூறியமைக்கான நோக்கம் என்ன? என்று பார்த்தால் சண்முகநாதன் மயூரனுக்கும் சதாசிவம் மயூரனுக்கும் வித்தியாசம் தெரியாமல் ஒரு பொய்யான தகவலை வழங்கியிருப்பது என்பது இவருடைய எதிர்கால அரசியலுக்கு இது மிகவும் ஆபத்தாக முடியும் காரணம் மக்கள் இவர்களை நிராகரிப்பார்கள், ஏன் என்றால் உண்மைக்கு புறம்பான செய்திகளை சொன்னவர்களை கடந்த காலங்களில் மக்கள் நிராகரித்து இருக்கின்றார்கள்.
இவ்வளவு பெரிய பொய்யை சொல்லி ஒரு அரசியல் நடத்த வேண்டுமா? அதே போன்று பெருமாள் சந்திரகுமாரை பரமசிவம் சந்திரகுமார் ஆக்கியிருக்கின்றார்கள் இது ஒரு ஆரோக்கியமான அரசியலா? அதேவேளை நான் ஒரு பிழை விட்டால் நான் என்னை திருத்திக்கொள்வேன் பிழைகளை நியாயப்படுத்த நான் விரும்பமாட்டேன். எனது தம்பியின் பெயரில் மண் அனுமதிப்பத்திரம் இருந்தால் அதனை நான் கண்டிப்பேன்.
என்னுடைய வீட்டில் வுறோணி எனும் நாய்க்குட்டி இருக்கின்றது அதனுடைய பெயரிலும் கூட மண் பேமிற் இல்லை ஆனால் சில வேளை அதுவும் நாடாளுமன்றத்திற்கு வருமோ தெரியா? அதற்கும் ஒரு அப்பாவின் பெயரை வைத்து பேமிற் இருப்பதாக கூறுனாலும் கூறுவார்கள் ஏன் என்றால் அரசியலுக்காக ஆதாரமில்லாத கருத்தையே இவர்கள் கூறுவார்கள்.
இவர்களது பொய்யான கருத்துக்களை நாங்கள் மக்களுக்கு தெரிவுபடுத்த வேண்டும். வர இருக்கின்ற பாராளுமன்ற அமர்வில் நான் அது தொடர்பான விளக்கத்தையளித்து அந்த விடையத்தை ஹன்சாட்டிலே இருந்து நீக்குமாறு சபாநாயகர் அவர்களை கோர இருக்கின்றேன்.
இவர்கள் எதிர்வரும் தேர்தலுக்காகவே மக்கள் மத்தியில் பிழையான செய்திகளை கூறி மக்கள் மத்தியில் தங்களது இருப்பை தக்கவைத்துக்கொள்ள முயற்சிக்கின்றனர்.
அவர் கூறிய இலக்கத்தை கொண்ட மண் போர்மிட் இல் சண்முகநாதன் மயூரன் என்பவருக்கே மண் அனுமதிப்பத்திரம் இருக்கின்றது இதை புவிச்சரீதவியல் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.
நாங்கள் இந்த மண் விடையம் தொடர்பில் நாங்கள் பல வேலைத்திட்டங்களை செய்கி கொண்டே வருகின்றோம், சில இடங்களில் சில விடையங்களை தடுத்து இருக்கின்றோம். சில விடயங்களை கட்டுப்படுத்திக்கொண்டு வருகின்றோம். அதேவேளை புவிச்சரிதவியல் திணைக்களம் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர் ஊடாக பல விடையங்களை செய்துகொண்டுவருகின்றோம். தயவுசெய்து தங்களுடைய வங்குறோத்து அரசியலை தக்கவைப்பதற்காகவோ எங்களை தாக்குவதற்காவோ இவ்வாறாக பொய்களை கூறாதீர்கள்.
நீங்களும் வாங்க இந்த மாவட்டத்தில் சட்டவிரோத மண் அகழ்வை தடுப்பதற்காக பல திட்டங்களை வகுப்போம் உங்களது ஆலோசனையை சொல்லுங்கள் அவற்றையும் உள்வாங்குவோம் நடைமுறைப்படுத்துவோம் அதற்காக பொய்யான விடயங்களை கூறி மக்களை ஏமாற்ற முயற்சிக்க வேண்டாம் என்றார்.