மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தால் வழங்கப்படும் ஒரு நாள் சேவைகளை மேலும் விரிவுபடுத்துமாறு போக்குவரத்து அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இதற்கமைய, அதிக எண்ணிக்கையிலான வாகனப் பதிவுகள், இடமாற்றங்கள் மற்றும் சாரதி அனுமதி பத்திரம் வழங்குதல் ஆகியவை ஒரே நாளில் வழங்கப்பட வேண்டும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
தற்போது ஒரு நாள் சாரதி அனுமதி பத்திரம் வழங்கும் சேவை வேரஹெர, ஹம்பாந்தோட்டை மற்றும் அனுராதபுரம் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் அலுவலகங்களில் மட்டுமே இடம்பெற்று வருகிறது.
ஒரு நாள் வாகன பதிவு சேவை நாரஹேன்பிட்ட, கம்பஹா, அனுராதபுரம், ஹம்பாந்தோட்டை, குருநாகல் மற்றும் யாழ்ப்பாண அலுவலகங்களில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
வெரஹெரா, ஹம்பாந்தோட்டை, அனுராதபுரம், களுத்துறை, கம்பஹா, கண்டி, குருநாகல் மற்றும் மொனராகலை ஆகிய அலுவலகங்களில் மட்டுமே ஒன்லைன் சேவைகள் வழங்கப்படுகின்றன.
இந்த சேவைகளை விரிவுபடுத்தவும், மேற்கண்ட சேவைகளை நாடளாவிய ரீதியில் 25 மாவட்டங்களிலும் நிறுவப்பட்டுள்ள கிளை அலுவலகங்கள் மூலம் பொதுமக்கள் பெற வசதிகளை ஏற்படுத்துமாறும் அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
புதிய தொழில்நுட்பத்தை இதற்காகப் பயன்படுத்த வேண்டும் என மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தில் நடைபெற்ற விசேட முன்னேற்ற மதிப்பாய்வில் கலந்து கொண்டு அமைச்சர் குறிப்பிட்டார்.