21ஆம் திகதி பாடசாலைக்கு சமுகமளிக்காவிட்டால் கடும் நடவடிக்கை! போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் கைதாகுவர்!

21ஆம் திகதி பாடசாலைக்கு சமுகமளிக்காவிட்டால் கடும் நடவடிக்கை! போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் கைதாகுவர்!


ஆசிரியர் மற்றும் அதிபர்கள் எதிர்வரும் 21ஆம் திகதி பாடசாலைக்கு சமுகமளிக்காவிட்டால் கடுமையான நடவடிக்கை முன்னெடுக்கப்படும். பாடசாலைக்கு முன் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுப்படுவர்களை கைது செய்ய ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

மாணவர்களின் எதிர்காலத்துடன் விளையாடும் தொழிற்சங்கங்களின் அழுத்தங்களுக்கு ஒருபோதும் அடிபணிய முடியாது என காணி விவகார அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்தார்.

அநுராதபுரம் பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அக்கூட்டத்தில் அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

ஆசிரியர் - அதிபர் போராட்டம் பாரிய விளைவுகளை ஏற்படுத்தும், தொழிற்சங்கததினர் முன்வைத்த கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்க அரசாங்கம் பொறுப்புடன் யோசனைகளை முன்வைத்துள்ளது. கொவிட் தாக்கத்திற்கு மத்தியில் சம்பள அதிகரிப்பிற்கு அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.

தொழிற்சங்க போராட்டம் இன்று அரசியல் மாற்றத்திற்கான போராட்டத்தை நோக்கி நகர்வதை தொழிற்சங்கத்தின் ஒரு சில தலைவர்களின் செயற்பாடுகளின் ஊடாக விளங்கிக் கொள்ள முடிகிறது. எவ்விதத்தில் தீர்வு வழங்கினாலும் அதனை ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் ஆசிரியர் - அதிபர் தொழிற்சங்கத்தினர் இல்லை. இவர்களின் முறையற்ற செயற்பாடுகளினால் பாரிய விளைவு ஏற்பட போகிறது.

கொவிட்-19 வைரஸ் தொற்று பரவல் குறைவடைந்துள்ளதை தொடர்ந்து எதிர்வரும் 21ஆம் திகதி பாடசாலைகளை முதற்கட்டமாக திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் பாடசாலைக்கு செல்ல தயாராக இருந்தாலும் ஒரு சில தொழிற்சங்கத்தினர் அதற்கு தடையாக உள்ளார்கள்.

ஆசிரியர், அதிபர்கள் பாடசாலைக்கு செல்வதை கட்டாயமாக தடுக்கும் உரிமை தொழிற்சங்கத்தினருக்கு கிடையாது. 21ஆம் திகதி அனைத்து பாடசாலைகளின் முன்பாகவும் பாதுகாப்பு தரப்பில் சேவையில் ஈடுப்படுத்தப்படுவார்கள். பாடசாலைக்கு முன்பாக தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுப்படுபவர்களை கைது செய்ய ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. வடமத்திய குழு கூட்டத்தில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

வடமத்திய மாகாணத்தில் 18 ஆயிரம் பட்டதாரிகள் ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்கள். இவர்கள் எதிர்வரும் 21ஆம் திகதி பாடசாலைக்கு சமூகமளிக்காவிட்டால் அவர்களுக்கு எதிரான நடவடிக்கை முன்னெடுக்கப்படும். அத்துடன் பாடசாலை வெளிகள ஊழியர்களும் சேவைக்கு வருகை தர வேண்டும்.

எதிர்வரும் 21ஆம் திகதி பாடசாலைகளை திறத்தல், ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் பாடசாலைக்கு வருதல் குறித்து ஆளுநர்கள் விசேட அவதானம் செலுத்துவார்கள். மாணவர்களின் எதிர்காலத்தை விளையாட்டாக பயன்படுத்திக் கொள்ளும் தொழிற்சங்கத்தினரது அழுத்தங்களுக்கு ஒருபோதும் அடிபணிய முடியாது என்றார்.

-இராஜதுரை ஹஷான்

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.