ஜி20 சர்வமத மாநாட்டில் பிரதமர் ஆற்றிய முழுமையான உரை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஜி20 சர்வமத மாநாட்டில் பிரதமர் ஆற்றிய முழுமையான உரை!

பொருளாதார, அரசியல் மற்றும் சமூக இலக்குகளை அடையும் போது பெரும்பாலும் எமது எதிர்காலம் ஒரு தேசம் என்ற ரீதியில் அதன் ஒற்றுமை மற்றும் சகவாழ்விலேயே தங்கியுள்ளது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

இத்தாலியின் போலோக்னா நகரில் நடைபெறும் ஜி20 சர்வமத மாநாட்டின் ஆரம்ப தினமான இன்று (12) முதலாவது அமர்வில் உரையாற்றிய போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

ஜி20 அரச தலைவர்களின் மாநாடு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 30- 31 ஆகிய இரு தினங்கள் இத்தாலி தலைநகர் ரோமில் நடைபெறவுள்ள நிலையில் அதனை முன்னிட்டு ஜி20 சர்வமத மாநாடு இடம்பெறுகிறது.

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஜி20 சர்வமத மாநாட்டில் உரையாற்றினார்.

ஜி20 சர்வமத மாநாட்டில் பிரதமர் ஆற்றிய முழுமையான உரை வருமாறு,

´கலாசாரங்களுக்கிடையே சமாதானம், மதங்களிடையே புரிதல்´ எனும் தொனிப்பொருளில் வரலாற்று சிறப்புமிக்க போலோக்னா நகரில் நடைபெறும் ஜி20 சர்வமத மாநாட்டில் உரையாற்ற கிடைத்தமை குறித்து மகிழ்ச்சியடைகிறேன்.

இம்மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கப்பட்டமை தொடர்பில் இத்தாலி ஏற்பாட்டுக் குழுவின் தலைவர் பேராசிரியர் அல்படோ மெலொனி உள்ளிட்ட ஏற்பாட்டு குழுவினருக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இம்மாநாட்டின் தொனிப்பொருள் குறிப்பாக எனது நாடான இலங்கைக்கும் தெற்காசியாவின் புவியியல் வலயத்திற்கும் பொருத்தமானதாக காணப்படுவதால் இச்சந்தர்ப்பத்தை நான் மிகவும் பாராட்டுகின்றேன்.

இன, மத மற்றும் கலாசார பன்முகத்தன்மை என்பன எமது பிராந்தியத்தின் முக்கிய அம்சமாகும். எமது நாடுகளில் பல்வேறு இன, மத மற்றும் கலாசார பின்னணிகளை கொண்ட மக்கள் வசிக்கின்றனர்.

எனினும், இவ்வேறுபாடுகளுக்கு மத்தியில் ஒன்றிணைந்து, பல்வேறு சமூகங்களை ஒன்றிணைத்து, முதிர்நிலை தேசம் என்ற உணர்வை கட்டியெழுப்பும் சவாலுக்கு நாம் பதிலளித்துள்ளோம்.

பொருளாதார, அரசியல் மற்றும் சமூக இலக்குகளை அடையும் போது பெரும்பாலும் எமது எதிர்காலம் ஒரு தேசம் என்ற ரீதியில் அதன் ஒற்றுமை மற்றும் சகவாழ்விலேயே தங்கியுள்ளது.

தீவிரவாத சித்தாந்தங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய வன்முறைகள் என்பன நமது யுகத்தின் மிக முக்கியமான சவால்களாகும். சரியாக இருபது வருடங்களுக்கு முன்பு நடந்த 9/11 பயங்கரவாதத் தாக்குதல்களின் சோகமான சம்பவங்களை இங்கே நாம் நினைவுகூர வேண்டும்.

அதில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருடன் நாம் அத்துயரத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். குற்றவாளிகள் மற்றும் அவர்களினால் கூறப்படும் நோக்கம் என்னவாக இருப்பினும் இச்சம்பவம் அனைத்து விதத்திலும் பயங்கரவாதத்தை எதிர்த்து போராட வேண்டியதன் அவசியத்தை நினைவூட்டுகிறது.

இத்தகைய ஒரு தனித்துவமான தொனிப்பொருளில் ஒரு மாநாட்டை நடத்துவதற்கு கலை மற்றும் அறிவுபூர்வமான செயற்பாடுகளுக்கு அனைத்து வகையிலும் புகழ் மிக்க உலக மட்டத்தில் கலாசாரத்திற்கு தலைமையான வரலாற்று சிறப்புமிக்க போலோக்னா நகரம் மிகவும் பொருத்தமானதாகும்.

மனதை கவரும் இந்நகரம் இத்தாலியின் மறுமலர்ச்சி மற்றும் நாகரிக வளர்ச்சியை நிரூபிப்பதுடன், உலகின் வளர்ச்சியில் தாக்கம் செலுத்திய இத்தாலிய எஜமானர்களின் திறமை மற்றும் படைப்பாற்றலையும் பிரதிபலிக்கிறது.

எமது காலத்தின் கலாசாரத்திற்குள் சமாதானம் மற்றும் நல்லிணக்கத்திற்கு பெரும் பங்கு வகிக்கும் துறைகள் குறித்து நீங்கள் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளீர்கள் என்பது மிகவும் தெளிவாக தயாரிக்கப்பட்டுள்ள இம்மாநாட்டின் ஆவணங்களின் மூலம் நான் புரிந்துக் கொணடேன்.

இத்துறைகளில் கல்வியை மிக முக்கிய துறையாக அடையாளம் காண்பதற்கு நான் ஒருபோதும் தயங்கமாட்டேன். குழந்தை பருவத்தின்போதே சரியான அணுகுமுறைகளை போதிப்பதற்கும், மதிப்பை மேம்படுத்துவதற்கும் அதிக வாய்ப்புள்ளது.

வெவ்வேறு மதங்களின் சாராம்சத்தில் பல்வேறு வேறுபாடுகள் காணப்படினும், அனைத்து மதங்களினதும் நம்பிக்கை பொதுவானதாகும்.

எமது பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் பாடத்திட்டம் மற்றும் கற்பித்தல் முறைகளின் ஊடாக வேறுபாட்டினை ஏற்படுத்தும் விடயங்களை விட, ஒருமைப்பாடுள்ள சகல மதங்களினதும் பொது விடயங்கள் தொடர்பில் வலியுறுத்துவதே கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் கல்வியாளர்களின் கடமையாக அமைய வேண்டும்.

எமது கல்வி நிறுவனங்களில் இளைஞர்களுக்கு வாழ்நாள் முழுவதற்குமான நட்பை ஏற்படுத்திக் கொள்வதற்கு வாய்ப்புள்ளது. நவீன தேவைகளுக்கேற்ப கல்வியின் உள்ளடக்கத்தை திருத்துதல் மற்றும் எமது இளைஞர்களை திருப்திகரமான வாழ்வாதாரத்தை நோக்கி ஈடுபடுத்துவதற்கே இலங்கை அரசாங்கம் தற்போது முன்னுரிமை வழங்கியுள்ளது.

முழு உலகமும் தற்போது எதிர்நோக்கியுள்ள கடுமையான சுகாதார நெருக்கடி, நம் அனைவரையும் ஒன்றிணைப்பதற்கு உதவியுள்ளது.

கொவிட் 19 நெருக்கடியானது பல்வேறு மதங்கள், இனங்கள் மற்றும் நாகரிகங்கள் என்ற வேறுபாடின்றி ஒட்டுமொத்த மனித குலத்திற்கும் மரண அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தொற்றிலிருந்து தப்பித்து மீண்டும் நமது வாழ்வை ஆரம்பிக்க வேண்டுமாயின் சர்வதேச ஒத்துழைப்பை பலப்படுத்த வேண்டும்.

நவீன மருத்துவத்தின் மூலம் கிடைக்கும் தடுப்பூசி மற்றும் பிற பாதுகாப்புகள் உலகம் முழுவதும் காணப்பட வேண்டியதுடன், சர்வதேச அமைப்பு மற்றும் வலுவான பொருளாதாரத்தை கொண்ட நாடுகளிடமிருந்து நிதி உதவிகளை பெற்றுக் கொள்வதற்கு பொருளாதார ரீதியில் வலுவற்ற நாடுகளுக்கான சிறப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். இது சிலர் மாத்திரமன்றி அனைவரும் வெற்றி பெறுவதற்கான போராட்டமாகும்.

தொற்று காரணமாக நாடுகள் தமது எல்லையை தற்காலிகமாக மூடுவது உகந்தது என்ற போதிலும், தனிமைப்படுத்தல் என்பது அதற்கு தீர்வல்ல. நாம் வாழும் உலகில் ஒரு யதார்த்தம் என்னவெனில், நாடுகளின் எல்லை ஊடாக பொருட்கள், சேவைகள் மற்றும் மக்களின் சுதந்திரம் இயக்கப்படுகிறது.

சிறந்த வாழ்க்கையை எதிர்பார்த்து மேற்கொள்ளப்படும் இடம்பெயர்விற்கு தற்போதைய நிலைமை சவாலாக விளங்குகின்ற போதிலும், சாதாரணமானதொரு கட்டமைப்பின் கீழ் வேலைவாய்ப்புகளை பெற்றுக் கொள்ளும் வாய்ப்புகள் சுதந்திரமாக காணப்பட வேண்டும்.

இது பாலின சமத்துவம் மற்றும் கண்ணியத்தியத்திற்கு விசேட முக்கியத்துவம் உள்ள துறையாகும். மிகுந்த அவதானம் மிக்க சமூகத்தினர் மீது காட்டும் இரக்கத்தின் மூலமே சமூகத்தின் ஒழுக்கத்தை மதிப்பிட முடியும் என புத்த பெருமான் உபதேசித்துள்ளார்.

வீடுகள், வேலை செய்யும் இடங்கள் மற்றும் சமூகத்தில் திருட்டில் ஈடுபடல் மற்றும் பல்வேறு பாகுபாடுகளுக்கு எதிராகவும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு தொடர்பிலும் எமது அரசாங்கம் மிகுந்த அவதானத்துடன் உள்ளது. மனித கடத்தலை முற்றிலும் ஒழிப்பதே எமது அணுகுமுறையாகும்.

காலநிலை மாற்றம் மற்றும் பிற சுற்றுச்சூழல் பிரச்சினைகள் குறித்தும் நாம் முக்கியத்துமளித்து செயற்பட்டு வருகின்றோம். மனிதவள அபிவிருத்தி தொடர்பில் ஒரு சீரான அணுகுமுறையை பின்பற்ற இலங்கை முயற்சித்து வருகிறது.

வேகமாக வளர்ச்சியடையும் மக்கள் தொகைக்கு ஆதரவளிக்க பொருளாதார பிரச்சினைகள் குறித்த முன்னேற்றம் அவசியமான போதிலும், நிலவும் சூழலில் அது முடியாததொரு விடயமாகும்.

நல்லிணக்கம் என்பது நம் காலத்தின் முக்கியமான தேவையாகும். மோதல்களும் நம்மைச் சுற்றி அதிகரித்து வரும் இடையூறுகளும் பொதுவானவை. எங்களுடன் வலுவாக உடன்படாதவர்கள் உட்பட நம் நாடுகளில் வாழும் அனைவருடனுமான சிறந்த உறவின் மூலமே சமாதானமும், ஸ்திரத்தன்மையும் ஏற்படுகிறது.

வெறுப்பை வெறுப்பால் அல்ல அன்பினால் மட்டுமே வெல்ல முடியும் என்றே நம் மதம் நமக்கு போதிக்கிறது.

கடந்த காலத்தின் குறைகளைப் பற்றி விவாதிப்பதற்குப் பதிலாக, நாம் நிகழ்காலத்தின் மீது கவனம் செலுத்த வேண்டும்.

நாம் சகோதரத்துவம் மற்றும் புரிதலின் ஊடாக உறவுகளை வளர்த்துக் கொண்டால் நாம் அனைவரும் எதிர்பார்க்கும் அற்புதமான புதிய எல்லையை அடையலாம்.

ஐரோப்பாவின் பழமையான கற்றல் மையமான போலோக்னாவில் நடைபெறும் இந்த உற்சாகமூட்டும் மாநாடு அதற்கு மதிப்புமிக்க பங்களிப்பை அளிக்கிறது. ஏழு ஆண்டுகளாக நடைபெற்றுவரும் ஜி 20 சர்வமத மாநாடு, கலாசாரம் தொடர்பான கலந்துரையாடலுக்கான ஒரு அரிய வாய்ப்பாகும்.

இந்த மதிப்புமிக்க மாநாட்டின் ஆரம்ப அமர்வில் உரையாற்றுவதற்கு அழைப்பு விடுத்து நீங்கள் எனக்கு அளித்த கௌரவத்தை நான் நன்றியுடன் நினைவுகூருகின்றேன். பேராசிரியர் மெலானி மற்றும் அவரது ஏற்பாட்டு குழுவினருக்கும் நன்றி தெரிவிப்பதுடன், நீங்கள் முன்னெடுக்கும் இந்த மதிப்புமிக்க கலந்துரையாடல் வெற்றி பெற வேண்டும் என பிரார்த்திக்கிறேன்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.