பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் விதிகளை மறுபரிசீலனை செய்ய ஆரம்பம்! வெளிவிவகார அமைச்சு

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் விதிகளை மறுபரிசீலனை செய்ய ஆரம்பம்! வெளிவிவகார அமைச்சு


பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் விதிகளை மறுபரிசீலனை செய்வதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு, ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அறிவித்துள்ளது.

தற்போதுள்ள சட்டங்களை ஆய்வு செய்து, தேவையற்ற விதிகளை அகற்றி, சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட சிறந்த நடைமுறைகளை உள்ளடக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை அறிவித்துள்ளது.

ஜி.ஸ்.பி பிளஸ் சலுகையை இலங்கைக்கு தொடர்ந்து வழங்குவதெனில், கொடூரமான பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க வேண்டுமென்ற நிபந்தனையை இலங்கைக்கு விதிக்க வேண்டுமென, ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றம் அண்மையில் நிறைவேற்றியதை தொடர்ந்து, இலங்கை இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம் ஜி.எஸ்.பி பிளஸை நிறுத்தினால் மாற்று நடவடிக்கை என்ன செய்வதென்பது எமக்கு தெரியும் என பகிரங்கமாக சவால் விடுத்திருந்த கோட்டா அரசு, நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் பச்சைக் கொடியை காண்பிக்கும் இந்த கடிதத்தை அனுப்பி வைத்துள்ளது.

வெளிவிவகார அமைச்சு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில்,

நல்லிணக்கத்தின் குறிப்பிட்ட துறைகளில் முன்னேற்றம் குறித்து இலங்கை அரசு ஐரோப்பிய ஒன்றியத்திற்கு (EU) அறிவித்துள்ளது. 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் விதிகளை மறுபரிசீலனை செய்வதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்ததை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அறிவித்தது.

தற்போதுள்ள சட்டங்களை ஆய்வு செய்து, தேவையற்ற விதிகளை அகற்றி, சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட சிறந்த நடைமுறைகளை உள்ளடக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாத தடைச்சட்டத்தை மீளாய்வு செய்து, புதிய பரிந்துரைகளை முன்வைக்க அமைச்சரவை ஜூன் 21 அன்று எடுத்த முடிவு குறித்து ஐரோப்பிய ஒன்றியத்திற்கு தெரிவிக்கப்பட்டது. அமைச்சரவை உப குழு மற்றும் அமைச்சரவை உப குழுவுக்கு உதவ ஒரு அதிகாரிகள்மட்ட குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது.

இந்த குழு பயங்கரவாத தடைச்சட்டத்த மதிப்பாய்வு செய்து, மூன்று மாதங்களுக்குள் அமைச்சரவையில் ஒரு அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.

இந்த நோக்கத்திற்காக, ஜூன் 24 அன்று அதிகாரிகள் குழு நியமிக்கப்பட்டது. நீதி அமைச்சின் மூத்த பிரதிநிதித்துவத்துடன், பாதுகாப்பு, வெளியுறவு,பொது பாதுகாப்பு;
மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம், சட்ட வரைவுத் துறை, இலங்கை காவல்துறை,
மற்றும் தேசிய புலனாய்வுத் தலைவர் அலுவலகம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் அதில் உள்ளடங்குகிறார்கள்.

அத்துடன், ஜனாதிபதி பொது மன்னிப்பு குறித்தும் வெளிவிவகார அமைச்சு ஐரோப்பிய ஒன்றியத்திற்கு தகவல் வழங்கியுள்ளது.

அரசியலமைப்பின் பிரிவு 34 ன் படி தனது அதிகாரங்களைப் பயன்படுத்தி, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் நீண்டகாலமாக நீதித்துறை காவலில் வைக்கப்பட்ட பதினாறு (16) முன்னாள் விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள் ஜூன் 24 அன்று விடுவிக்கப்பட்டனர்.

கொலைக்குற்றவாளியான துமிந்த சில்வா விடுதலையை முன்னிறுத்தி எழுந்துள்ள விமர்சனங்களைடுத்து இந்த விளக்கம் வழங்கப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.

அத்துடன் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகைக்காக இலங்கையின் இணக்கப்பாடுகள் குறித்த நீண்ட விளக்கமும் அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.