மூட நம்பிக்கையின் உச்சம் - மகனை அடித்துக் கொன்ற தாய்!

மூட நம்பிக்கையின் உச்சம் - மகனை அடித்துக் கொன்ற தாய்!

இந்தியா, தமிழ்நாடு, வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த கே.வி. குப்பம் பகுதியை சேர்ந்தவர் கார்த்தி. இவரது மனைவி திலகவதி. தம்பதியின் மகன் சபரி (7). கடந்த 2 வருடங்களுக்கு முன்பாக கார்த்தி இறந்துவிட்டதால் திலகவதி தனது மகனுடன் வேலூர் அருகேயுள்ள அரியூர் பகுதிக்கு குடிபெயர்ந்து விட்டார். 

திலகவதியுடன் திருமணமாகாத அவரது தங்கைகள் பாக்கியலட்சுமி, கவிதா ஆகியோரும் தங்கி உள்ளனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களாக மகன் சபரிக்கு பேய் பிடித்ததாக கூறி தாயும், அவனது சித்திகளும் சேர்ந்து, மாந்திரீகம் என்ற பெயரில் சிறுவனை அடித்து, கொடுமைப்படுத்தி சித்ரவதை செய்து வந்துள்ளனர்.

இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே வசிக்கும் மந்திரவாதி ஒருவர் பேய் ஓட்டுவதாக கேள்விப்பட்டு நேற்று இரவு திலகவதி, அவரது தங்கைகள் இருவரும் சிறுவன் சபரியை அரியூரில் இருந்து ஆட்டோவில் அழைத்துச் சென்று உள்ளனர். இவர்கள் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டதால், ஆட்டோக்காரர் ஆரணிக்கு முன்பாக உள்ள கண்ணமங்கலம் பேருந்து நிலையத்தில் நள்ளிரவில் இறக்கிவிட்டுள்ளார்.

இன்று காலை விடிந்த பின்னர், வேறு ஆட்டோவை பிடித்து வந்தவாசிக்கு செல்லலாம் என்று முடிவு செய்த அந்த பெண்கள், சிறுவன் சபரியின் தலைமுடியை பிடித்து இழுத்தபடியே கண்ணமங்கலம் பேரூராட்சி அலுவலக வளாகத்துக்குள் சென்று தங்கினர்.

பின்னர் அதிகாலை 2 மணி அளவில் தாய் உட்பட மூன்று பெண்களும் சேர்ந்து சிறுவனை கொடூரமாக தாக்க தொடங்கி உள்ளனர். சிறுவனின் கை, கால்களை சித்திகள் இருவரும் நீட்டியிழுத்து பிடித்துக்கொண்டனர்.

அப்போது தாய் திலகவதி சிறுவனின் உடலுக்குள் ஊடுருவிய துஷ்ட சக்தியான பேயை வாய்வழியாக ஓட்டுவதாக நினைத்து கழுத்தில் காலை வைத்து மிதித்து உள்ளார். இந்த கொடூரத்தால் சிறுவன் சபரி மூச்சுவிட முடியாமல் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டான். 

அதன் பிறகும் சிறுவனின் வாயை திறந்து தண்ணீரை ஊற்றுவது, கன்னத்தில் அறைவது என அந்த பெண்களின் கொடூரம் தொடர்ந்து இருக்கிறது. இதை அந்த பகுதியில் இருந்த மக்கள் பார்த்து ‘ஏன் இப்படி சிறுவனை அடிக்கிறீர்கள்?’ என விசாரித்துள்ளனர்.

அதற்கு அவர்கள் ‘என் பையனுக்கு பேய் புடிச்சிருக்கு. உங்கள் வேலையை பாருங்க’ என ஆக்ரோஷமாகக் கூறி இருக்கிறார்கள். ஏதோ விபரீதம் நடப்பதை உணர்ந்த அந்த மக்கள் உடனடியாக கண்ணமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, சிறுவனின் உடலை கைப்பற்ற முயன்ற போதும் சிறுவனுக்கு பேய் ஓட்டுவதாக கூறி அவனை விட மறுத்து போலீசிடம் தகராறு செய்து உள்ளனர்.

இதையடுத்து போராடி அவர்களிடம் இருந்து சிறுவனின் உடலை மீட்ட போலீசார் 108 ஆம்புலன்ஸ் வரவழைத்து, மருத்துவ உதவியாளர் பரிசோதனை செய்து பார்த்தபோது, சிறுவன் உயிர் இழந்தது தெரிய வந்துள்ளது.

இதனைத்தொடர்ந்து சிறுவனின் உடலை போலீசார் வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து தாய் திலகவதி மற்றும் அவரின் தங்கைகள் இருவர் என 3 பேரையும் கைது செய்து கண்ணமங்கலம் காவல் நிலையத்தில் வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

இதுதொடர்பாக திருவண்ணாமலை மாவட்ட எஸ்.பி பவன்குமார் வந்து கண்ணமங்கலம் காவல் நிலையத்தில், 3 பெண்களிடம் விசாரணை நடத்தினார். பேய் ஓட்டுவதாக நடந்த இந்தக் கொடூர சம்பவம், கண்ணமங்கலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.