
ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்குவதற்காக தமிழ் அரசியல் கைதிகள் 17 பேரின் பெயர்கள் அடங்கிய பட்டியல் ஜனாதிபதி செயலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் வினவியபோதே சிறைச்சாலைகள் முகாமைத்துவ மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்தவத்த எமது கெப்பிட்டல் செய்திப் பிரிவுக்கு இதனை தெரிவித்தார்.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் நீண்டகாலமாக சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள குறித்த 17 பேருக்கும், இவ்வாறு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
பொசன் போயா தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பு வழங்கும் கைதிகளின் பட்டியலில் குறித்த 17 பேரின் பெயர்களும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
எனினும், குறித்த தமிழ் அரசியல் கைதிகள் 17 பேரையும் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்வதற்கான பரிந்துரைக்கு ஜனாதிபதி செயலகத்தினால் இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை என இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்தவத்த சுட்டிக்காட்டினார்.
அத்துடன், ஜனாதிபதி செயலகத்தினால் உரிய அனுமதி வழங்கப்படும் பட்சத்தில் குறித்த 17 பேரையும் நாளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.