
அமெரிக்காவில் 06ஆம் வகுப்பு மாணவி பள்ளிக்கு கொண்டு வந்த கைத்துப்பாக்கியால் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 02 மாணவிகள் உட்பட 03 பேர் காயமடைந்தனர்.
அமெரிக்காவில் இதாஹோ நகரில் கிழக்கே நடுநிலை பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் படித்து வரும் 11 வயதுடைய 06ஆம் வகுப்பு மாணவி தனது பையில் இருந்த கைத்துப்பாக்கி ஒன்றை எடுத்துள்ளார்.
இதன்பின் அங்கிருந்தவர்களை நோக்கி திடீரென பல முறை சுட்டுள்ளார். இதில் 02 மாணவிகள் குண்டு பாய்ந்து சுருண்டு விழுந்தனர். இதனை தொடர்ந்து வகுப்பில் இருந்து வெளியே வந்த அந்த மாணவி அங்கிருந்த ஒருவரை நோக்கி சுட்டுள்ளார்.
இந்த தாக்குதலில் பள்ளியில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் காயமடைந்து உள்ளார். துப்பாக்கி குண்டு சத்தம் மற்றும் மாணவிகளின் அலறல் ஆகியவற்றால் பள்ளி கூடமே அதிர்ந்துள்ளது. இதனால் வகுப்புகளில் இருந்த மாணவ மாணவியர் அதிர்ச்சியில் உறைந்தனர்.
இந்நிலையில், ஆசிரியர் ஒருவர் அந்த மாணவியை பிடித்து, துப்பாக்கியை பறித்து கொண்டார். பொலிஸார் வந்ததும் மாணவியை அவர்களிடம் ஒப்படைத்து உள்ளார். இந்த சம்பவத்தில் காயமடைந்த 03 பேருக்கும் பெரிய அளவில் ஆபத்து ஏற்படவில்லை.
பொலிஸாரின் விசாரணையில், இதாஹோ பால்ஸ் பகுதியருகே மாணவி வசித்து வருவது தெரிய வந்துள்ளது. அந்த துப்பாக்கி மாணவிக்கு எங்கிருந்து கிடைத்தது என்றோ, எதற்காக துப்பாக்கி சூடு நடத்தினார் என்ற விவரமோ தெரிய வரவில்லை.
அதுபற்றி அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தி வருகிறோம் என பொலிஸார் தெரிவித்தனர். இதனால் பள்ளிக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.