பிறந்து இரு நாட்களேயான சிசுவுக்கு இருதய சத்திர சிகிச்சை!

பிறந்து இரு நாட்களேயான சிசுவுக்கு இருதய சத்திர சிகிச்சை!

கொழும்பு, லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட தாயாருக்கு பிறந்த குழந்தைக்கு இருதய சத்திர சிகிச்சை நடத்தப்பட்டுள்ளது. கொரோனா தொற்றுக்கு மத்தியில் தமது உயிர் ஆபத்துக்களையும் பொருட்படுத்தாது, பிறந்து இரண்டு நாட்களேயான சிசுவொன்றின் உயிரை காப்பாற்ற இலங்கை வைத்தியர்கள் முன்வந்த சம்பவமொன்று அண்மையில் பதிவாகியுள்ளது. உலகமே எதிர்நோக்கியுள்ள மிக கொடூரமான வைரஸ் தாக்கத்திற்கு மத்தியில், கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் சிசுவொன்றுக்கு வைத்தியர்கள் இருதய சத்திர சிகிச்சையை நடத்தி, குழந்தையின் உயிரை காப்பாற்றியுள்ளனர்.

அவிசாவளை பகுதியைச் சேர்ந்த கர்ப்பணித் தாய் ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இரட்டை குழந்தைகளை பிரசவித்துள்ளார்.

இந்தக் குழந்தையை ஈன்றெடுத்த தாய்க்கு கொவிட்19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. இரட்டைக் குழந்தைகள் மற்றும் தாய் உடனடியாக முல்லேரியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.

பிறந்த குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு இரத்தத்தில் உரிய வகையில் ஒக்சிஜன் இருக்கவில்லையென சிறுவர்கள் தொடர்பிலான விசேட வைத்திய நிபுணர் தெரிவித்துள்ளார். உடனடியாக சிசுவை குழந்தைகள் தொடர்பிலான பிரிவில் அனுமதித்து, பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.நடத்தப்பட்ட பரிசோதனைகளில் குழந்தைக்கு பிறப்பிலேயே இருதய நோய் உள்ளமையும் அது உடனடியாக சத்திரசிகிச்சை மூலம் சீர் செய்யப்பட வேண்டியதென்றும் உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து, குழந்தை பொரளை ரிஜ்வே சீமாட்டி சிறுவர் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளது.

பொரளை ரிஜ்வே சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையில், விசேட இருதய சத்திர சிகிச்சை நிபுணர் டொக்டர் சிதம்பரநாதன் முகுந்தன் தலைமையிலான குழுவினால் அன்றிரவே ஏழு மணி நேரம் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இந்த குழந்தை ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு தற்போது கண்காணிக்கப்பட்டு வருகின்றது.

எவ்வாறாயினும், குழந்தையின் தொற்றுக்குரிய பி.சி.ஆர் நிலை அறியப்படவில்லை. தமக்கு ஏற்படக்கூடிய ஆபத்தையும் பொருட்படுத்தாது, குழந்தைக்கு மிக வெற்றிகரமாக சத்திர சிகிச்சை நடத்தப்பட்டுள்ளது. விசேட இருதய சத்திர சிகிச்சை நிபுணர் டொக்டர் சிதம்பரநாதன் முகுந்தன் குழுவினரது இச்சேவை போற்றப்படக்கூடியது.
Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.