கொரோனா மரணங்கள் குறித்த விடயத்தில் உண்மையில்லை! ஜனாதிபதிக்கும் பொய்யான தரவுகளே வழங்கப்படுகிறன!

கொரோனா மரணங்கள் குறித்த விடயத்தில் உண்மையில்லை! ஜனாதிபதிக்கும் பொய்யான தரவுகளே வழங்கப்படுகிறன!


நாட்டின் கொரோனா வைரஸ் பரவல் மற்றும் பாதிப்புகள் குறித்த உண்மைத் தகவல்கள் மறைக்கப்படுவதாகவும், செயலணிக் கூட்டத்தில் ஒரு சிலரின் தீர்மானத்திற்கு அமைய தரவுகள் மாற்றப்படுவதாகவும், இவர்களின் பொய்யான தரவுகளையே  ஜனாதிபதிக்கும் அறிவிக்கப்படுவதாகவும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் நேரடியாக ஜனாதிபதியிடம் முறையிட்டுள்ளனர்.


அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் குற்றச்சாட்டு குறித்து உடனடியாக ஆராய ஜனாதிபதி பணித்துள்ளதுடன், நாளைய தினம் சுகாதார அமைச்சருடன் விசேட சந்திப்பும் இடம்பெறவுள்ளதாக தெரியவந்துள்ளது.


நாட்டின் நெருக்கடி நிலைமைகள் மற்றும் கொரோனா வைரஸ் பரவலை அடுத்து முன்னெடுக்க வேண்டிய தீர்மானங்கள் குறித்து ஜனாதிபதி தலைமையில் நேற்று விசேட ஆலோசனை கூட்டமொன்று இடம்பெற்றுள்ளது. இதில் கலந்துகொண்ட அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினரால் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகள் மற்றும் காரணிகள் குறித்து வினவிய போதே அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர், விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் அனுருத்த பாதெணிய இதனை கூறினார். 


அவர் மேலும் கூறுகையில்,


நாட்டில் தற்போது கொரோனா வைரஸ் பரவல் நிலைமையானது மிகவும் பாரதூரமான நிலையில் உள்ளது. சுகாதார அதிகாரிகள், தொற்றுநோய் தடுப்பு பிரிவினர் கூறும் தொற்றாளர் எண்ணிக்கைகளை விடவும் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது என்பதே எமது கணிப்பாகும். மரணங்களும் அதிகரித்திருக்க வேண்டும். ஆனால் சுகாதார அதிகாரிகள் இதனை திட்டமிட்டு மறைக்கின்றனர். செயலணிக் கூட்டத்தில் நிபுணர் குழுவில் பத்துப்பேர் உள்ளனர். இவர்களில்  குறைந்தது எட்டுப்பேருக்கேனும் நாட்டின் உண்மையான தரவுகள் இருக்குமென நாம் நினைக்கவில்லை. ஒருவர் இருவரின் தீர்மானங்களுக்கு அமையவே தரவுகள்  தயாரிக்கப்படுகின்றன. அதனையே மக்களுக்கும் கூறுகின்றனர்.


ஜனாதிபதிக்குக்கூட பொய்யான தரவுகளை கூறி தீர்மானங்களை மாற்றுகின்றனர். நாடு முடக்கப்படாது சாதாரண செயற்பாடுகள் தொடர்வதற்கும் இதுவே காரணமாகும் . இதனை ஜனாதிபதிக்கு நேரடியாகவே செயலணிக் கூட்டத்தில் தெரிவித்தோம். இந்த குற்றச்சாட்டை நாம் முன்வைக்கும் முதல் சந்தர்ப்பம் இதுவல்ல. இதற்கு முன்னரும் பல்வேறு சந்தர்ப்பங்களில் இதே குற்றச்சாட்டை நாம் முன்வைத்துள்ளோம்.  


உடனடியாக இது குறித்து ஆராய்ந்து அறிவிக்குமாறு சுகாதார அமைச்சருக்கும், சுகாதார பணிப்பாளருக்கும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார். 


-ஆர்.யசி


கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.