தமக்கு இலங்கையில் விதிக்கப்பட்ட தடை தொடர்பில் CTJ அமைப்பு விடுத்த அறிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தமக்கு இலங்கையில் விதிக்கப்பட்ட தடை தொடர்பில் CTJ அமைப்பு விடுத்த அறிவிப்பு!


இலங்கையில் 06 தவ்ஹீத் அமைப்புகள் உள்ளிட்ட 11 அமைப்புகளை இலங்கையில் தடை செய்வதற்கு சட்ட மா அதிபர் அனுமதி வழங்கியுள்ளதாக சட்ட மா அதிபர் தினைக்களம் அறிவித்துள்ளது.


குறித்த 11 அமைப்புகளில் கீழ்க்காணும் 06 தவ்ஹீத் அமைப்புகளும் உள்ளடங்கப்பட்டுள்ளன.


  1. ஐக்கிய தௌஹீத் ஜமாஅத் (UTJ)
  2. சிலோன் தௌஹீத் ஜமாஅத் (CTJ)
  3. சிறிலங்கா தௌஹீத் ஜமாஅத் (SLTJ)
  4. அகில இலங்கை தௌஹீத் ஜமாஅத் (ACTJ)
  5. ஜம்இய்யதுல் அன்சாரி சுன்னத்துல் மொஹமதியா (JASM)
  6. தாருல் அதர் - ஜாமிஉல் அதர்


கடந்த 2019ம் ஆண்டு ஸஹ்ரான் ஹாஷிம் என்ற பயங்கரவாதி மேற்கொண்ட தற்கொலை குண்டுத் தாக்குதலை தொடர்ந்து எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளில் ஒரு பகுதியாகவே சட்ட மா அதிபரின் இந்த பரிந்துரையும் அமைந்துள்ளது.


தற்கொலை குண்டுத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க வேண்டும். என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை. பாதிக்கப்பட்ட தொப்புல் கொடி உறவுகளான கிருஸ்தவ சகோதரர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என அரசாங்கத்தை விட முஸ்லிம் சமூகமே பெரும் எதிர்ப்பார்பில் இருக்கிறது.


ஏப்ரல் 21ஆம் திகதிக்கு முன்னர் நீதி கிடைக்காவிட்டால் போராட்டதில் ஈடுபடவுள்ளதாக கர்தினால் மல்கம் ரஞ்சித் அறிவித்துள்ள இந்நிலையில் நீதியை பெற்றுத் தருகிறோம் எனும் பெயரில் குற்றத்துடன் எவ்வித தொடர்பும் அற்ற, மாபெரும் அழிவொன்று நடக்க இருக்கிறது என்று போதிய தகவல்களை உடனடியாக பாதுகாப்புத் துறைக்கு வழங்கிய CTJ உள்ளிட்ட தவ்ஹீத் அமைப்புகளை தடை செய்யவுள்ளதாக கூறுவது நீதியின் பெயரால் அநீதியை நிலைநாட்ட முனைவதாகும்.


*சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் – CTJ என்பது ஜனநாயக ரீதியில் மக்கள் மத்தியில் பகிரங்கமாக இஸ்லாமிய பிரச்சாரம் மற்றும் சமூக பணிகளை முன்னெடுத்து வரக்கூடிய ஓர் அமைப்பாகும். நாடு முழுவதும் பயங்கரவாதத்திற்கு எதிராகவும், தீவிரவாதத்தை அடியோடு இல்லாமலாக்கவும் தொடர்ந்து பாடுபடும் ஓர் வெளிப்படைத் தன்மை கொண்ட ஜனநாயக அமைப்பாகும்.*


*எல்லாவற்றுக்கும் மேலாக சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் என்பது, 04/21 தற்கொலை குண்டுத் தாக்குதலுக்கு முன்பதாகவே பாதுகாப்புத் துறையுடன் ஒத்துழைப்பு வழங்கி ஸஹ்ரான் ஹாஷிமின் பயங்கரவாத செயல்பாடுகள் தொடர்பில் தகவல்களை வழங்கி பாதுகாப்பு தரப்புக்கு பூரண ஒத்துழைப்பை வழங்கிய ஓர் இயக்கமாகும்.*


04/21 தாக்குதலின் பின்னால் நல்லாட்சி அரசு நியமித்த “பாராளுமன்ற தெரிவுக்குழு விசாரனை” மற்றும் அதன் பின்னால் முன்னால் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவினால் நியமிக்கப்பட்டு தற்போதைய ஜனாதிபதியினால் கால நீட்டிப்பு செய்யப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு ஆகியவற்றில் சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் உள்ளிட்ட தவ்ஹீத் அமைப்புகளின் கொள்கைகள், செயல்பாடுகள், சமூக பணிகள் போன்றவற்றை ஆதாரங்களுடன் நாம் ஒப்புவித்துள்ளதுடன், பாதுகாப்புத் தரப்பின் அனைத்து பிரிவுகளுக்கும் நமது செயல்பாடுகள் தொடர்பில் முழு ஆதாரங்களையும் நாம் சமர்பித்துள்ள நிலையிலும் சட்ட மா அதிபரின் இந்த அறிவிப்பு அடிப்படையற்ற ஒன்றாகும்.


இந்நிலையில் 06 தவ்ஹீத் அமைப்புகள் உள்ளிட்ட 11 அமைப்புகளுக்கு தடை விதிக்க சட்ட மா அதிபர் அனுமதி வழங்கியுள்ளதாகவே ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.


நேரடியாகவோ, மறைமுகமாகவோ தீவிரவாதத்தில் தொடர்பு கொண்டுள்ள அமைப்புகளை தடை செய்வதில் எமக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை. ஆனாலும், தீவிரவாதத்திற்கு நேர் எதிராக செயல்பட்ட அமைப்புகளை தடை செய்வதென்பது ஜனநாயக விரோத செயல்பாடாகும்.


சட்ட மா அதிபரின் அனுமதிக்கு பின், அரசு தடை பற்றிய வர்த்தமானி அறிவிப்பை வெளியிட வேண்டும். வர்த்தமானி அறிவிப்பின் மூலம் தடை செய்ததாக அறிவிக்கப்படும் போது குறித்த இயக்கங்கள் செயல்பட முடியாமல் போகும். இதுவே பொதுவான சட்ட நடைமுறையாகும்.


நம்மை பொறுத்த வரையில் நாம் ஜனநாயக வழியில் தூய இஸ்லாத்தை பின்பற்றி, பிரச்சாரம் செய்து சமூக பணிகளை முன்னெடுக்கக் கூடிய ஓர் அமைப்பாகும் என்கிற வகையில் சட்ட ரீதியிலான ஜனநாயக வழிமுறைகளின் மூலம் நீதியை பெற்றுக் கொள்வதற்கான முயற்சிகளில் CTJ ஈடுபடவுள்ளது.


நீதி மன்றத்தில் சட்டத்தின் முன்னால் அநியாயம் தோற்று, நீதியும், நேர்மையும், உண்மையும் வெற்றிபெறும் என்பதில் எமக்கு எவ்வித ஐயமும் கிடையாது.


ஏக இறைவன் அல்லாஹ் எம்முடன் என்றும் துணையிருப்பான் என்ற ஆழமான நம்பிக்கையில் நீதி மன்றை நாடுவோம். இன்ஷா அல்லாஹ்.


அப்துர் ராசிக் B.COM

பொதுச் செயலாளர்,

சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் - CTJ


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.