நேற்று சாலி.. இன்று ரிசாத்.. நாளை ஹரின்! - சந்திர பிரதீப்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நேற்று சாலி.. இன்று ரிசாத்.. நாளை ஹரின்! - சந்திர பிரதீப்


நல்லாட்சி அரசாங்கத்தின் முன்னாள் அமைச்சர் மற்றும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிசாத் பதியூதின் மற்றும் அவரது சகோதரர் ரியாஜ் பதியூதின் ஆகியோர் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சம்பவங்களுன் எவ்வித தொடர்பும் இல்லை என குறித்த தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்கு அமைக்கப்பட்ட ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு உறுதி செய்துள்ள நிலையில் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு இவர்கள் இருவரும் நேற்று 24ஆம் திகதி அதிகாலை வேளையில் குற்ற விசாரணை பிரிவு என்ற இரகசிய பொலிஸ் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் தற்போது இவர்கள் 72 மணித்தியால தடுப்புக்காவல் உத்தரவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். 


கைது செய்வதற்கான நீதிமன்ற பிடியாணை உத்தரவு இரகசிய பொலிஸாரிடம் இருக்கவில்லை என்பதுடன் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை கைது செய்வதற்கு முன்னர் சபாநாயகருக்கு அறிவிக்க வேண்டிய போதிலும் அவ்வாறு முன்னறிவிப்பு செய்யப்படவில்லை.


கைது செய்யப்பட்டதன் பின் ஊடகங்களுக்கு கருத்து வௌியிட்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன, ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சம்பவத்துக்கு உதவி ஒத்துழைப்பு வழங்கியமை தொடர்பில் விசாரணை நடத்தவென ரிசாத் பதியூதீன் மற்றும் அவரது சகோதரர் ரியாஜ் பதியூதின் ஆகியோர் கைது செய்யப்பட்டதாக தெரிவித்தார்.  


பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியூதின் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியான அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ஆவார். கடந்த பாராளுமன்ற தேர்தலில் இந்த கட்சி நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களை பெற்றுள்ளது. அது மாத்திரமன்றி உள்ளூராட்சி சபைகளில் சுமார் 169 உறுப்பினர்கள் இவரது கட்சியின் பிரதிநிதிகளாக உள்ளனர். மேலும் ஒட்டு மொத்த இஸ்லாமிய மக்களும் இன்று புனித ரமழான் மாத நோன்பு இருந்து வருகின்றனர்.


குற்ற விசாரணை திணைக்களம் இதற்கு முன்னர் அழைப்பு விடுத்த அனைத்து சந்தர்ப்பங்களிலும் தவறாது சென்று தேவையான வாக்குமூலத்தை பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியூதின் வழங்கி உள்ளார். ஆனால் இவ்விதமாக எவ்வித முன் அறிவிப்பும் இன்றி அதிகாலை 1.00 மணிக்கு வீட்டிற்குள் பலாத்காரமாக நுழைந்து எவ்வித காரணமும் கூறாமல் பொது மக்கள் பிரதிநிதி ஒருவரை கைது செய்வது ஜனநாயக சமூக ஆட்சியில் அன்றி ஏகாதிபதி இராணுவ ஆட்சியில் காணப்படும் சிறப்பு அம்சமாகும்.  


முன்னாள் அமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியூதினுக்கு எதிராக ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சம்பவத்தை தொடர்பு படுத்தி முன் வைக்கப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுக்களும், உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவரின் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் விரிவாக விசாரிக்கப்பட்டு முடிந்துள்ளது. 


ஆணைக்குழுவில் முன் வைக்கப்பட்ட சாட்சிகளில் ரிசாத் பதியூதின் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சம்பவத்திற்கு உதவி ஒத்துழைப்பு வழங்கியமைக்கு எவ்வித உறுதியான சாட்சிகளும் இருக்கவில்லை. இவ்வாறான பின்னணியில் எவ்வித நியாயமாக விடயங்களையும் முன்வைக்காது பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியூதின் கைது செய்யப்பட்டமை சட்டத்தின் சுயாதீன தன்மையை கேள்விக்கு உட்படுத்தியுள்ளது.


இது உண்மையில் அரசியல் சூழ்ச்சியின் பிரதிபலனாகும். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ரிசாத் பதியூதின் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து இருந்தது. சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் நாட்டில் ஒற்றுமையுடன் வாழ்ந்து வந்த நிலையில் தற்போதைய அரசாங்கத்தை விமர்சனம் செய்யும் தேசிய ரீதியிலான முஸ்லிம் அரசியல் தலைவர்களை அச்சுறுத்தும் நோக்கில் இவ்வாறான கைதுகள் இடம்பெறுகின்றன.


தற்போது தேசிய ஐக்கிய முன்னணி தலைவரும் முன்னாள் மேல் மாகாண ஆளுநருமாகிய அசாத் சாலி இவ்வாறு ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதலுடன் தொடர்பு பட்டிருப்பதாக பொய் குற்றச்சாட்டு சுமத்தி பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பாதுகாப்பு செயலாளர் கமல் குணரட்னவின் கையொப்பத்தில் தடுப்புக்காவல் உத்தரவில் ஒரு மாதத்திற்கு மேல் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். 


அசாத் சாலி என்பவர் 2017ஆம் ஆண்டு தொடக்கம் சஹரான் குழுக்களின் செயற்பாடுகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்ததுடன் பதவியில் இருந்த 06 பாதுகாப்பு செயலாளர்களுக்கு எழுத்து மூலம் அறிவித்து சஹரான் குழுவினரை கைது செய்யுமாறு கோரிக்கை விடுத்த நபராவார். இவ்வாறான நபரை ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புபடுத்தி கைது செய்து தடுத்து வைத்திருப்பது திட்டமிட்ட மோசடியாகும்.  


முன்னாள் அமைச்சர் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ அண்மையில் ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் சூத்திரதாரிகள் குறித்து பாராளுமன்றில் வௌியிட்ட மிகவும் அதிர்ச்சி அளிக்கும் கருத்துக்களை அடுத்து அவரையும் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்ய முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெனாண்டோ தற்போது வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். ரிசாத் பதியூதினை கைது செய்ததன் ஊடாக ஹரீன் பெனாண்டோவை இலகுவதாக கைது செய்யப் பார்ப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் துசார இந்துனில் தெரிவித்துள்ளார்.


இதேவேளை, கடந்த நாட்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய மற்றும் அனைவரும் கவனத்தை ஈர்த்த இராணுவத்திற்கு அரசாங்கம் பொலிஸ் அதிகாரங்களை வழங்கும் திட்டத்திற்கான வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. அதன் ஊடாக சந்தேக நபர்களை கைது செய்ய பொலிஸாருக்கு வழங்கப்பட்டிருந்த அதிகாரம் இனி இராணுவத்திற்கும் கிடைக்கிறது. இராணுவத்தினரும் சந்தேக நபர்களை கைது செய்யலாம். அவசர கால சட்டம் இல்லாமலே இராணுவத்தினருக்கு பொலிஸார் வசமுள்ள அதிகாரம் கிடைத்துள்ளது. 


இந்நிலையில் மாவட்ட செயலாளர்களுக்கு மேலாக இராணுவ அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதை மறக்க வேண்டாம்.


சேர் பெயில் என்று கூறி எதிர்கட்சி மகிழ்ச்சியில் இருக்கும் நிலையில் சேர் தற்போது நிலையான ஏகாதிபதி இராணுவ ஆட்சியை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறார் என்பது தௌிவாக தெரிகிறது. பாராளுமன்றில் வரப்பிரசாதம் பெற்று அரசாங்கத்தின் செயற்பாடுகளை விமர்சனம் செய்யும் பொது மக்கள் பிரதிநிதிகளான பாராளுமன்ற உறுப்பினர்களை கைது செய்து முன்னெடுக்கப்படும் அடக்குமுறையை சிறிதாக கருதி விட முடியாது. 


சர்ச்சைக்குரிய கருத்துக்களை பாராளுமன்றில் கூறிய பின் ரிசாத் பதியூதினை அதிகாலை வேளையில் வீட்டிற்குச் சென்று எவ்வித காரணங்களும் இன்றி கைது செய்து பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுத்து வைத்துள்ளமை மிகவும் மோசமான செயலாகும்.


- சந்திர பிரதீப்


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.