நாட்டுக்குள் மேலுமொரு நாட்டை உருவாக்கும் நிலை! அச்சம் வெளியிட்ட தேசிய பிக்கு முன்னணி

நாட்டுக்குள் மேலுமொரு நாட்டை உருவாக்கும் நிலை! அச்சம் வெளியிட்ட தேசிய பிக்கு முன்னணி

தேசிய பிக்கு முன்னணியின் செயலாளர் வகமுல்லே உதித்த தேரர்

நாட்டுக்குள் பிறிதொரு நாட்டை உருவாக்கும் வகையில் கொழும்பு துறைமுக நகரப்பொருளாதார ஆணைக்குழு  உருவாக்கத்திற்கான சட்டமூலம் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 


அரசாங்கம் ஆட்சி காலத்தை நிறைவு செய்யும் போது நாட்டு மக்களின் எதிர்காலம் எவ்வாறானதாக அமையும் என்ற பாரிய அச்சம் ஏற்பட்டுள்ளது என்று தேசிய பிக்கு முன்னணியின் செயலாளர் வகமுல்லே உதித்த தேரர் தெரிவித்தார்.


கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு  குறிப்பிட்டார்.


அவர் மேலும் குறிப்பிடுகையில்,


கொழும்பு துறைமுக நகரம்  நாட்டின்  ஏனைய  பொருளாதார வலயங்களை காட்டிலும் மாறுப்பட்ட தன்மையினை கொண்டுள்ளது.  ஒரு நாடு ஒரு சட்டம் என்பது  அரசாங்கத்தின் பெயரளவான கொள்கையாக மாத்திரமே காணப்படுகிறது. கொழும்பு துறைமுக நகரப் பொருளாதார  ஆணைக்குழுவானது விசேட பொருளாதார வலயமாக ஸ்தாபிக்க பதிவு செய்யப்பட்டுள்ளது.


பொருளாதார வலயத்துக்குள் உள்ளடக்கப்படும் நிறுவனங்கள் மற்றும் பொருளாதாரம் வயலத்தை கட்டுப்படுத்தும் சட்டங்கள் கொழும்பு துறைமுக பொருளாதார  ஆணைக்குழு  ஸ்தாபிப்புக்கான சட்டமூலத்தில் இருந்து விடுப்பட்டுள்ளது. இலங்கைக்கு பொருத்தமற்ற பல விடயங்கள்  இந்த  ஆணைக்குழுவிற்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.


நாட்டுக்குள் பிறிதொரு நாட்டை உருவாக்கும்  வகையில் கொழும்பு துறைமுக நகரப்பொருளாதார  ஆணைக்குழு உருவாக்கப்படவுள்ளது. இலங்கை சீனாவின் கடன் பொறிக்குள் சிக்குண்டுள்ளமை தொடர்பில் சர்வதேச நாடுகள்  அதிருப்தி தெரிவித்துள்ளன.  சீனாவிடம் கடன் பெறுவதற்கு முன்னர் ஒரு சில நாடுகளின் நிலைமை குறித்து சர்வதேச நாடுகள் ஆராயும் போது அவ்விடத்தில் இலங்கை எடுத்துக்காட்டாக குறிப்பிடப்படுகிறது.  அண்மையில் பங்களாதேஷ் நாட்டு  அரசியல் பிரமுகர் இலங்கை சீனா உறவு குறித்து குறிப்பிட்டமை கவனத்திற்குரியது.


நாட்டு மக்கள் பாரிய நெருக்கடியினை எதிர்க் கொண்டுள்ளார்கள். மன நிம்மதியுடன் உணவு உண்ண முடியாத நிலை காணப்படுகிறது. அரசாங்கம் ஆட்சி காலத்தை நிறைவு செய்யும் போது நாட்டு மக்களின் எதிர்காலம் எவ்வாறானதாக இருக்கும்? எவருக்கு அடிபணிந்து இருக்க வேண்டும்? என்ற  அச்சம் எழுந்துள்ளது.  கொழும்பு துறைமுக நகரம் விவகாரம் குறித்து நாட்டு மக்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றார்.


-இராஜதுரை ஹஷான்


Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.