மாவனெல்லை புத்தர் சிலை சம்பவத்தை விசாரணை செய்திருந்தால் ஏப்ரல் தாக்குதல் இடம்பெற்றிருக்காது! -ஜீ.எல். பீரிஸ்

மாவனெல்லை புத்தர் சிலை சம்பவத்தை விசாரணை செய்திருந்தால் ஏப்ரல் தாக்குதல் இடம்பெற்றிருக்காது! -ஜீ.எல். பீரிஸ்


மாவனெல்லை புத்தர் சிலை சேதப்படுத்திய சம்பவத்தை முறையாக விசாரணை மேற்கொண்டு சந்தேக நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்திருந்தால் ஏப்ரல் தாக்குதல் பேரழிவு ஏற்பட்டிருக்காது.


அதனால் இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய அரசியல் தலையீடுகள் இடம்பெற்றிருக்கின்றதா என்பது தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார்.


பாராளுமன்றத்தில் இன்று (07) இடம்பெற்ற ஏப்ரல் தாக்குதல் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை மீதான நான்காவது நாள் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.


அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,


ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள நியமிக்கப்பட்டிருந்த ஜனாதிபதி ஆணைக்குழு, தனக்குரிய சட்டவரையறைக்குள் விசாரணையை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பித்திருக்கின்றது.


ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் தெரிவிக்கப்படுகின்றது. ஆணைக்குழு என்பது நீதிமன்றம் அல்ல. அதற்கு வழக்கு தொடுக்கும் அதிகாரம் இல்லை. என்றாலும் தாக்குதல் சம்பவம் தொடர்பாக எதிர்காலத்தில் மேற்கொள்ளவேண்டிய பல்வேறு பரிந்துரைகளை ஆணைக்குழு செய்திருக்கின்றது.


அத்துடன் ஏப்ரல் தாக்குதல் சம்பவம் இடம்பெறுவதற்கு முன்னர் மாவனெல்லையில் புத்தர் சிலை சேதமாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் முறையான விசாரணை மேற்கொண்டு சந்தேக நபர்களை கைதுசெய்திருந்தால் ஏப்ரல் தாக்குதல் பேரழிவு இடம்பெற்றிருக்காது.


மாவனெல்லை சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டிருக்கின்றனர். இவர்களை விடுவிக்க அரசியல்வாதிகளின் பணிப்புரைகள் பொலிஸாருக்கு வழங்கப்பட்டிருக்கின்றதா என்பது தொடர்பாக விசாரணை செய்யப்பட வேண்டும்.


மேலும் ஏப்ரல் தாக்குதல் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழு பல பரிந்துரைகளை செய்திருக்கின்றது. அந்த பரிந்துரைகளை செயற்படுத்த அரசாங்கம் கடமைப்பட்டிருக்கின்றது.


அதேபோன்று ஆணைக்குழுவின் பரிந்துரைகளை எவ்வாறு நிறைவேற்றுவது என்ற தீர்மானத்தை மேற்கொண்டு, அதனை அரசாங்கத்துக்கு அறிவிக்கவே அமைச்சரவை உப குழு நியமிக்கப்பட்டது. தற்போது அமைச்சரவை உபகுழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டிருக்கின்றது. என்றாலும் இந்த அமைச்சரவை உபகுழு தொடர்பாகவும் பல்வேறு விமர்சனங்கள் தெரிவிக்கப்படுகின்றது.


அத்துடன் தாக்குதலுடன் சம்பந்தப்பட்டவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இதுவரை 99 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.


36 விசாரணைகள் பூரணமாக நிறைவடைந்திருக்கின்றன. தற்போது சந்தேக நபர்களுக்கு எதிராக முன்வைக்கபடப்டிருக்கும் குற்றச்சாட்டுக்களுக்கமைய அவர்களுக்கு எதிராக வழக்கு தொடுக்கும் அதிகாரம் சட்டமா அதிபருக்கே இருக்கின்றது. அது சம்பந்தமான 36 அறிக்கைகள் சட்டமா அதிபருக்கு வழங்கப்பட்டிருக்கின்றன. சட்டமா அதிபரின் கடமையில் அரசாங்கத்துக்கு தலையிட முடியாது. அவ்வாறு தலையிப்போவதும் இல்லை.


என்றாலும் பலதரப்பினரதும் கோரிக்கைக்கமைய பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவாக நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக சந்தேக நபர்களுக்கு எதிராக வழக்கு தொடுக்க முடியுமான விடயங்களை விரைவுபடுத்துமாறு சட்டமா அதிபரிக்கு தெரிவிக்க முடியும் என்றார்.


-ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்


Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.