வெள்ளவத்தையில் சீல் வைக்கப்பட்ட குர்ஆன் அடங்கிய களஞ்சியசாலை; வெளியான மேலதிக தகவல்!

வெள்ளவத்தையில் சீல் வைக்கப்பட்ட குர்ஆன் அடங்கிய களஞ்சியசாலை; வெளியான மேலதிக தகவல்!


வெள்ளவத்தை பொலிஸ் அதிகார எல்லைக்கு உட்பட்ட சர்வதேச பாடசாலை ஒன்றின் புத்தக களஞ்சியம் எனக் கூறப்படும் களஞ்சியசாலைக்கு பொலிஸார் சீல் வைத்துள்ளனர்.


வெள்ளவத்தை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றுக்கு அமைவாக, தர்மாராம வீதியில் அமைந்துள்ள குறித்த சர்வதேச பாடசாலைக்கு பொலிஸார் சென்று சோதனை செய்தபோது, அங்கு ஓர் அறையில் சுமார் 15,000 புனித அல்குர்ஆன் பிரதிகள் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது

.

இந்நிலையில் அது தொடர்பிலான விசாரணைகளை ஆரம்பித்துள்ள வெள்ளவத்தை பொலிஸார், அதிலிருந்து சில பிரதிகளை பொலிஸ் பொறுப்பில் எடுத்துள்ளதுடன், விசாரணைகள் முடியும்வரை குறித்த களஞ்சிய அறைக்கு சீல் வைத்துள்ளனர்.


குறித்த புனித அல் குர்ஆன் அல்லது புத்தகங்கள் சட்ட ரீதியிலானவையா அல்லது சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்டு களஞ்சியப்ப்டுத்தப்பட்டவையா என்பதை உறுதி செய்துகொள்ள விசேட விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக வெள்ளவத்தை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் கபில விஜயமான்ன கூறினார்.


அது தவிர குறித்த விடயத்தில் விசேட நிலைமைகள் எதுவும் இல்லை என அவர் குறிப்பிட்டார்.


இந்நிலையில் இந்த விடயம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மற்றும் கொழும்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர் எச்.என்.கே.டி. விஜயசிறி ஆகியோரின் மேற்பார்வையில் வெள்ளவத்தை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் வழி நடத்தலில் சிறப்புக் குழுவினர் முன்னெடுத்துள்ளனர்.


குறித்த குர்ஆன் பிரதிகள், ஆங்கில மற்றும் சிங்கள மொழி பெயர்புகள் என கூறப்படும் நிலையில், அவை CIS எனும் இஸ்லாமிய கற்கைகளுக்கான நிறுவனத்துக்கு சொந்தமானவை என தெரிய வந்துள்ளது.


அரபு மொழியற்ற, தனி ஆங்கில, சிங்கள மொழியிலான குர்ஆன் மொழி பெயர்ப்புகளான குறித்த 15,000 பிரதிகளும், வெளிநாடு ஒன்றில் அச்சிடப்பட்டு அண்மையில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், அவை குறித்த சர்வதேச பாடசாலையுடன் இணைந்த கட்டிட அறையொன்றில் வைக்கப்பட்டிருந்ததாகவும் அறிய முகின்றது.


இவ்வாறான நிலையிலேயே அவற்றை விநியோகிக்கும் நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் போது பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்றுள்ள தகவல்களுக்கு அமைய, அங்கு சென்ற பொலிஸார் குறித்த அறைக்கு சீல் வைத்து சில பிரதிகளை பொறுப்பேற்று அதன் உள்ளடக்கங்களையும், சட்ட த் தன்மையையும் ஆராய விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post