இருண்ட காலத்தில் தத்தளித்த மேற்கத்திய உலகம் - இஸ்லாமிய சாதனைகளை வெளிச்சத்திற்கு கொண்டுவர வேண்டும்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இருண்ட காலத்தில் தத்தளித்த மேற்கத்திய உலகம் - இஸ்லாமிய சாதனைகளை வெளிச்சத்திற்கு கொண்டுவர வேண்டும்!


பிபிசி ஊடகம், சமீபத்தில், "தொலைந்து போன ஒரு இஸ்லாமிய நூலகத்தில் இருந்து நவீன கணிதம் தோன்றியது எப்படி?" என்ற தலைப்பில் ஆழமான கட்டுரை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. 


1170-ல் பிறந்த இத்தாலியரான லியனார்டோ பிசா தன்னுடைய ஆரம்ப கல்வியை அல்ஜீரியாவின் புகியா நகரில் கற்கிறார். வரலாற்றில் பிபனோசி (Fibonacci) என பிரபலமாக அறியப்படும் இவர், பின்பு மத்திய கிழக்கிற்கு பயணமாகிறார். இத்தாலி திரும்பிய பிறகு, 1202-ல், எண்கள் குறித்த தன்னுடைய நூலான Liber Abbaci-ஐ வெளியிடுகிறார். இன்று நாம் பயன்படுத்தும் பல கணக்கியல் யுக்திகளை விளக்கியிருந்த அந்த நூலிற்கு பின்னால் பலரும் அறியாத ஒரு வரலாறு உண்டென்கின்றது பிபிசி.


பிபனோசி, அவர் காலத்திற்கு முன்பு பல நூற்றாண்டுகள் கணக்கியலில் வல்லுனர்களாக திகழ்ந்த  முஸ்லிம் விஞ்ஞானிகளின் பங்களிப்புகள் குறித்து நன்கு அறிந்தே இருந்திருக்கின்றார். இன்னும் சொல்லப்போனால் அவருடைய நூல் முழுவதுமே, ஒன்பதாம் நூற்றாண்டு கணித மேதையான அல்-கரிஷ்மியின் கணித படிமுறைகளை (Algorithms) சார்ந்தே இருப்பதாக போட்டுடைக்கிறது பிபிசி. கணிதத்தில் பல்வேறு புரட்சிகளை உருவாக்கி, இன்று நாம் பயன்படுத்தும் பல கணித யுக்திகளுக்கு சொந்தக்காரரான அல் கரிஷ்மி, இன்றைய அறிவியல் உலகால், 'அல்-ஜீப்ராவின் தந்தை' என்றழைக்கப்படுகிறார். 


அல் கரிஷ்மியின் அறிவுத்தேடலுக்கு துணையாய் நின்றது, அறிவியல் உலகால் 'ஞானத்தின் வீடு' என அழைக்கப்படும் பாக்தாத் நூலகம் தான். 8-ஆம் நூற்றாண்டின் இறுதியில், கலீபா ஹாருன் அல் ரஷீத் அவர்களால் தன் சுய பயன்பாட்டிற்காக தொடங்கப்பட்டது பாக்தாத் நூலகம். பின்னர் பொது நூலகமாக மாறியது. இன்றைய கணித யுக்திகள் பலவற்றின் பிறப்பிடமாக இந்த நூலகம் திகழ்ந்ததாக புகழாரம் சூட்டும் பிபிசி, உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் விஞ்ஞானிகள் இங்கே சங்கமித்ததாக குறிப்பிடுகிறது. 


இந்த நூலகம் எந்தளவிற்கு பிரமாண்டமானது என்றால், இன்றைய லண்டனில் உள்ள பிரிட்டிஷ் நூலகம் அல்லது பாரிஸ் நூலகம் அளவிற்கான நூல்களை அன்றே கொண்டிருந்திருக்கிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். கணிதம், மருத்துவம், வானவியல், இயற்பியல், வேதியியல், புவியியல், இலக்கியம், கலை, தத்துவம் என அக்காலத்தில் இதற்கு ஈடு இணை இல்லை என்று சொல்லுமளவிற்கு நூல்களை கொண்டிருந்திருக்கிறது.  


$ads={1}


நம் கற்பனைக்கு அப்பாற்பட்ட பிரமாண்டத்தை கொண்டிருந்த இந்த நூலகத்தை, 13-ஆம் நூற்றாண்டில் மங்கோலிய படைகள் இடித்து தரைமட்டமாக்கின. நூல்கள் ஆற்றில் போடப்பட்டன. இருப்பினும், இந்த நூலகத்தின் வாயிலாக பெறப்பட்ட அறிவையும், யுக்திகளையும் இஸ்லாமிய அரசுகள் சிறப்பான முறையில் பரப்பின என்று கூறும் பிபிசி, பின்னர் இந்த யுக்திகள் ஐரோப்பியர்களால் அரவணைக்கப்பட்டதாகவும் கூறுகிறது.


மேற்கத்திய உலகம் இருண்ட காலத்தில் தத்தளித்து கொண்டிருந்த போது, இந்த நூலகத்தில் தொடங்கிய அறிவுப்பயணமும், பிபனோசிக்கு பின்னால் இருக்கும் இந்த வரலாற்று உண்மைகளும் அரிதாகவே பள்ளிகளில் போதிக்கப்படுவதாக கூறும் பிபிசி, நவீன கணிதத்தின் வரலாற்றை ஐரோப்பிய பார்வையில் பார்ப்பதை கலைந்துவிட்டு, இஸ்லாமிய உலகின் அறிவியல் சாதனைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டும் என்ற கருத்தோடு கட்டுரையை முடிக்கிறது.


படம் 1: பாக்தாத் நூலகத்தில் இருந்து காப்பாற்றப்பட்ட 'தனித்துவ கண்டுபிடிப்புகள்' நூல். 


படம் 2: உஸ்பெகிஸ்தானில் உள்ள அல்-கரிஷ்மி மையம்.


பிபிசி கட்டுரையை முழுமையாக படிக்க: https://bbc.in/3bzDAla


நவீன கணிதத்திற்கான இஸ்லாமிய அறிவியல் பொற்காலத்தின் பங்களிப்புகளை ஆழமாக தமிழில் படிக்க: https://bit.ly/2Ol0jJ0


-ஆஷிக் அஹ்மத் - பிபிசி


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.