அரசாங்கத்திடம் ஹாபிஸ் நஸீர் எம்.பி கேட்டுக் கொண்டதற்காகவே ஜனாஸாக்கள் ஓட்டமாவடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது!

அரசாங்கத்திடம் ஹாபிஸ் நஸீர் எம்.பி கேட்டுக் கொண்டதற்காகவே ஜனாஸாக்கள் ஓட்டமாவடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது!

கொரோனா தொற்றில் உயிரிழந்த ஏறாவூரைச் சேர்ந்த இருவரின் ஜனாஸாக்கள் இன்று (05) ஓட்டமாவடியில் நல்லடக்கம் செய்யப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நஸீர் அஹமட்டின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில்  மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பெப்ரவரி (27) இல் மரணித்த உதவிப் பணிப்பாளர் கலீல் மற்றும் மார்ச் (03) இல் மரணித்த ஹஸனதும்மா ஆகியோரின் ஜனாஸாக்களே இன்று ஓட்டமாவடி தூடுபத்தின புலவில் நல்லடக்கம் செய்யப்பட்டன. 

இவர்களது ஜனாஸாக்கள் இதுவரையும் குருணால் போதனா வைத்தியசாலையிலும் கொழும்பு ஐடிஎச் வைத்தியசாலையிலும் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இரணைதீவில் அடக்கம் செய்வதற்கு பிரதேசவாசிகள் எதிர்ப்புத் தெரிவித்ததையடுத்து மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நஸீர் அஹமட், ஜனாஸாக்களை ஓட்டமாவடியில் நல்லடக்கம் செய்ய அனுமதிக்குமாறு அரசாங்கத்தை கேட்டுக் கொண்டதற்கிணங்கவே, ஏறாவூரைச் சேர்ந்த இந்த ஜனாஸாக்கள் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டன. சுமார் ஒரு வருடமாக இழுபறியிலிருந்த, நல்லடக்க விவகாரம் இன்றுடன் முடிவுக்கு வந்துள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நஸீர் கண்கலங்கியவாறு தெரிவித்தார்.

கொரோனா தொற்றில் உயிரிழந்து, முதலாவதாக நல்லடக்கம் செய்யப்பட்ட ஜனாஸாக்கள் இவை என்பதும் குறிப்பிடத்தக்கது. தனது சொந்த ஊரைச் சேர்ந்தவர்களை நல்லடக்கம் செய்து, ஜனாஸாக்கள் எரிக்கப்படுவதை நிறுத்துவதற்கு சிறந்த முன்மாதிரியாக இவர், செயற்பட்டுள்ளதாகவும் பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.

சுகாதார அமைச்சரின் அனுமதியைப் பெற்றுக் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நஸீர், இன்று அதிகாலை 5.48 மணியளவில், கொழும்பு ஐடிஎச் வைத்தியசாலைக்குச் சென்று ஹஸனதும்மாவின் ஜனாஸாவை வாகனத்தில் ஏற்றியவாறு இராணுவத்தின் முழு உதவியுடன் குருணாகல் போதனா வைத்தியசாலைக்குச் சென்றார். அங்கு வைக்கப்பட்டிருந்த உதவிப் பணிப்பாளர் கலீலின் ஜனாஸாவையும் ஏற்றிக் கொண்டு, பலத்த பாதுகாப்புக்களுடன் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர், சூடுபத்தின புலவில் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.

$ads={1}

இதற்கமைய,சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி, சுமார் 3.20 மணியளவில் ஜனாஸாக்கள் நல்லடக்கம் செய்யப்பட்டன. இதற்கு உதவிய இறைவனைப் புகழ்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நஸீர் தனது டுவிட்டர் பக்கத்திலும், அபிலாஷைகள் அர்த்தமாகின, அல்லாஹுஅக்பர் என்று பதிவு செய்தமையும் குறிப்பிடத்தக்கது.

முஸ்லிம் எம்பிக்கள், சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியிடம் ஓட்டமாவடி, பொத்துவில், திருகோணமலை, இறக்காமம்,சம்மாந்துறை மற்றும் புத்தளம் ஆகிய இடங்களைப் பரிந்துரைத்து 2020.12.03 ஆம் திகதியன்று எழுத்து மூலம் அறிவித்திருந்தனர். மேலும்,நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சின், நிலக் கீழ் நீர் பற்றிய ஆய்வறிக்கையும் குறித்த இவ்விடங்களில் ஜனாஸாக்களை அடக்குவதால், எவ்வித ஆபத்துக்கள் இல்லை என்பதைச் சுட்டிக்காட்டி உள்ளதாகவும் மட்டக்களப்பு மாவட்ட  நாடாளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நஸீர் தெரிவித்தார்.

-மெட்ரோ

கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.