அசாத் சாலி மீது ஐந்துக்கும் மேற்பட்ட முறைப்பாடு; ஐவர் அடங்கிய தனிப்படை நியமித்து விசாரணை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அசாத் சாலி மீது ஐந்துக்கும் மேற்பட்ட முறைப்பாடு; ஐவர் அடங்கிய தனிப்படை நியமித்து விசாரணை!

அசாத் சாலி

தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும், முன்னாள் மேல் மாகாண ஆளுநருமான அசாத் சாலியை விசாரணை செய்ய குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் உதவி பொலிஸ் அத்தியட்சர் ஒருவரின் கீழ் ஐவர் கொண்ட தனிப்படை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. 


சி.ஐ.டி. பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரசாத் ரணசிங்கவின் மேற்பார்வையில், அதன் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிசாந்த டி சொய்ஸாவின் ஆலோசனைக்கு அமைய இந்த விசாரணைகளை குறித்த தனிப்படை முன்னெடுக்கவுள்ளது.


பொலிஸ் தலைமையகத்துக்கும், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கும் கடந்த இரு நாட்களில் கிடைக்கப் பெற்றுள்ள 05 இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகளை மையப்படுத்தி, விசாரணைகளுக்காக இந்த தனிப்படை அமைக்கப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.


நாட்டின் பொதுச் சட்டத்துக்கு எதிராக அசாத் சாலி வெளியிட்டதாக கூறப்படும்  கருத்துக்கள்  நாட்டின் சட்டத்தை மீறுவதாக அமைந்துள்ளதா, அந்த கருத்துக்கள் ஊடாக இனங்களுக்கு இடையே குழப்பத்தை ஏற்படுத்தும்  வண்ணம் செயற்பட்டுள்ளாரா என  இவ்விசாரணைகளில் ஆராயப்படவுள்ளது.


அதன்படி அசாத் சாலியினால், தெரிவிக்கப்பட்டதாக கூறப்படும் கருத்துக்கள் அடங்கிய ஊடக சந்திப்பு, ஊடகங்களில் வெளியிடப்பட்ட காணொளி, சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட அது தொடர்பிலான பதில்கள், அந்த ஊடக சந்திப்பு குறித்து கடந்த 13 ஆம் திகதி மீள விளக்கமளிக்கும் விதமாக அசாத் சாலி வெளியிட்ட கருத்துக்கள் என அனைத்து விடயங்களையும்  இந்த தனிப்படை ஆராயவுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் கேசரிக்கு கூறினார்.


இந்த விசாரணைகளுக்கான விசாரணை திட்டம் தயார் செய்யப்பட்டுள்ள நிலையில், இன்றைய தினம் இந்த விசாரணைகளுக்கு தேவையான நீதிமன்ற உத்தரவுகள் சிலவற்றை பெறவும் விசாரணையாளர்கள் அவதானம் செலுத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து அசாத் சாலியை விசாரணைக்கு அழைப்பது குறித்த தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக அறிய முடிகின்றது.


$ads={1}


எவ்வாறாயினும் நேற்று தனது வதிவிடம் அமைந்துள்ள பொலிஸ் அதிகார பிரிவான கறுவாத்தோட்டம் பொலிஸ் நிலையத்துக்கு அசாத் சாலி சென்றிருந்தார். எவ்வாறாயினும் கறுவாத்தோட்டம் பொலிசஸ் நிலையத்தில் அசாத்சாலிக்கு எதிராக எந்த முறைப்பாடும் இல்லாத நிலையில், அங்கு  எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.


இன்று மாலை வரை சி.ஐ.டி.யிலிருந்து விசாரணைக்கான அழைப்பு தனக்கு வரவில்லை என தெரிவித்த அசாத் சாலி, விசாரணைகளுக்கு முகம் கொடுக்க தயார் என தெரிவித்தார்.


கடந்த 09 ஆம் திகதி அசாத் சாலி, முஸ்லிம் தனியார் சட்டம் தொடர்பிலும் நாட்டின் பொதுச் சட்டம் தொடர்பிலும் முன்வைத்த கருத்துக்கள் தற்போது சர்ச்சையை தோற்றுவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


-எம்.எப்.எம்.பஸீர்


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.