வெளிநாட்டு கடனை மீள செலுத்துவதில் அரசுக்கு எழுந்துள்ள சிக்கல்! -ஹர்ஷ டி சில்வா
advertise here on top
advertise here on top

வெளிநாட்டு கடனை மீள செலுத்துவதில் அரசுக்கு எழுந்துள்ள சிக்கல்! -ஹர்ஷ டி சில்வா


வெளிநாட்டு கடனை மீள செலுத்துவதில் எவ்வித சிக்கலும் இல்லை என கூறிக்கொண்டிருப்பதால் நாட்டு மக்களே பாதிக்கப்படுவர். எனவே கடனை மீள செலுத்துவதற்கான மாற்று திட்டங்கள் தொடர்பில் அரசாங்கம் ஆராய வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.


கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று (08) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், மத்திய வங்கியினால் வாராந்தம் வெளியிடப்படுகின்ற அறிக்கையின்படி இலங்கையின் அந்நிய செலாவணி இருப்புக்கள் மேலும் வீழச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெப்ரவரி இறுதியாகும் போது அந்நிய செலாவணி இருப்புக்கள் 4557.7 மில்லியன் அமெரிக்க டொலர் மாத்திரமே காணப்படுவதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதே போன்று அந்நிய செலாவணி 4097.3 மில்லியன் (4 பில்லியன்) டொலர்கள் மாத்திரமே காணப்படுகிறது. 381 மில்லியன் பெறுமதியான தங்கம் காணப்படுகிறது.


இது மிகவும் பாரதூரமான நிலைமையாகும். மாதாந்த இறக்குமதியிலேயே அந்நிய செலாவணி இருப்பு தங்கியுள்ளது. 2020 முதல் வாகனங்கள் உள்ளிட்ட பலவற்றுக்கு இறக்குமதி தடை விதிக்கப்பட்டு இறக்குமதி வீழ்ச்சியடைந்துள்ளது. மாதாந்தம் சுமார் ஒன்றரை பில்லியன் டொலர் இறக்குமதி வருமானத்தை அரசாங்கம் எதிர்பார்க்கிறது. பிணைமுறி மற்றும் இலங்கை அபிவிருத்தி பிணைமுறி 3467.2 மில்லியன் அமெரிக்க டொலர் மீள செலுத்த வேண்டியுள்ளது. 215.1 மில்லியன் டொலர்கள் இந்த மாதத்தில் மாத்திரம் செலுத்த வேண்டியுள்ளது. இவை தவிர உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி, சீனா, இந்தியா உள்ளிட்டவற்றிடம் பெற்றுக்கொள்ளப்பட்ட கடன்களையும் மீள செலுத்த வேண்டியுள்ளது.


நான் ஏற்கனவே கூறியதைப் போன்று அந்திய செலாவணி இருப்புக்கள் வீழ்ச்சியடையும் போது, கடன்களை மீள செலுத்துவதில் சிக்கல் ஏற்படும். ஏற்றுமதி வருமானம், வெளிநாட்டிலுள்ள இலங்கை பணியாளர்கள் ஊடான வருமானம், சுற்றுலாத்துறை என்பவற்றின் மூலம் அந்நிய செலாவணி கிடைப்பது ஒருபுறம். மறுபுறம் இறக்குமதிக்கு செலவு, வட்டி மீள் செலுத்தல் உள்ளிட்ட செலவீனங்களும் உள்ளன. 2019 டிசம்பர் மாதத்தில் 100 பில்லியன் ரூபா வெளிநாட்டு முதலீடு காணப்பட்டது. எனினும் தற்போது 90 வீதம் வெளிநாட்டு முதலீடு வீழ்ச்சியடைந்துள்ளது.


$ads={1}


இந்த பற்றாக்குறையை நிரப்புவதற்கு சர்வதேச சந்தையில் கடன் பெறப்படும். இதன் ஊடாக பெற்றுக் கொள்ளப்பட்ட 14 பில்லியன் டொலர்  கடன்  உள்ளது. அதனையே தற்போது செலுத்திக் கொண்டிருக்கின்றோம். 2020 இல் ஒரு பில்லியன் மீள செலுத்தப்பட்டது. இது மஹிந்த ராஜபக்ஷ 2010 இல் ஜனாதிபதியாக பதவி வகித்தபோது பெறப்பட்ட கடனாகும். இவ்வருடம் ஜூன் மாதம் மீண்டுமொரு பில்லியன் செலுத்தப்பட வேண்டியுள்ளது. எனினும் தற்போது சர்வதேச சந்தையிலும் எம்மால் கடன் பெற முடியாது.


இந்தியா மற்றும் சீனாவிடமிருந்து கிடைக்கப்பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட கடன் தொகை முழுமையாக கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் மிகக் குறைவாகும். எனவே வெளிநாட்டு கடன் பிரச்சினைக்கு உரிய தீர்வை காண்பதை விடுத்து, கடனை மீள செலுத்துவதில் எவ்வித சிக்கலும் இல்லை என்று கூறிக் கொண்டிருப்பதால் நாட்டுக்கு மக்களே பாதிக்கப்படுவர். எனவே கடனை மீள செலுத்த மாற்று திட்டங்களை ஆராய வேண்டும். அவ்வாறு செய்தால் இதற்காக தற்காலிக தீர்வையேனும் அராங்கத்தால் பெற்றுக் கொள்ள முடியும்.


Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.