இரண்டாவது மனைவியை மகளின் உதவியால் கோடாரியால் வெட்டிக்கொன்ற முதல் மனைவி!

இரண்டாவது மனைவியை மகளின் உதவியால் கோடாரியால் வெட்டிக்கொன்ற முதல் மனைவி!

திம்புள்ள-பத்தனை பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தனது கணவனின் இரண்டாவது மனைவியை முதலாவது மனைவி தனது மகளுடன் இணைந்து கூரிய ஆயுதத்தால் வெட்டிக் கொலை செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் இன்று (20) முற்பகல் 11 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக திம்புள்ள-பத்தனை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

திம்புள்ள-பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிறேக்கிலி தோட்டம் பொரஸ்கிரிஸ் பிரிவு பகுதியைச் சேர்ந்த 42 வயதான விஸ்வநாதம்மா என்ற பெண்ணே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குடும்பத்தில் இரண்டு மனைவிமார்களுக்கும் இடையில் மிக நீண்ட நாட்களாக பிரச்சினை நிலவி வந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையிலேயே முதலாவது மனைவி, தனது மகளுடன் இணைந்து, இரண்டாவது மனைவியை கோடரியால் வெட்டிக் கொலை செய்துள்ளார்.

குறித்த பெண்ணை கொலை செய்த, முதலாவது மனைவி மற்றும் மகள், அங்கிருந்து காட்டுப் பகுதிக்குள் தப்பிச் சென்ற நிலையில், பிரதேசவாசிகளுடன் இணைந்து பொலிஸார், சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர்.

சம்பவத்தில் உயிரிழந்த பெண்ணின் சடலம் கொட்டகலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், நீதவான் விசாரணைகளின் பின்னர், சடலம் டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைகளுக்காக அனுப்பி வைக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முதலாவது மனைவி தனது கணவரை விட்டு பிரிந்த நிலையில், கணவர், இரண்டாவது திருமணம் செய்து வாழ்ந்து வந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், மிக நீண்ட நாட்களின் பின்னர், கணவனிடம் வந்திருந்த முதலாவது மனைவி, இரண்டாவது மனைவியை கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பில் முதலாவது மனைவி மற்றும் மகள் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை திம்புள்ள-பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post